மகாராஷ்டிரா மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தில் உள்ள ஜஹவர் நகரத்திலிருந்து ஜாப் எனும் கிராமத்திற்கு சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிற்கு கோவிட் தடுப்பூசிகள் அனுப்பிவைக்கப்பட்டன. இந்தக் கிராமத்தின் நிலப்பரப்பு மிகவும் கரடுமுரடானது. எனவே தடுப்பூசிகள் கொண்டு செல்வதற்குத் தாமதமாகும் என்பதால் ட்ரான்களின் உதவியுடன் தடுப்பூசிகள் அனுப்பிவைக்கப்பட்டன. டெக்னாலஜியை கோவிட் -19 எனும் பெருந்தொற்றை வெல்லும் போராட்டத்தில் எவ்வாறு பயன்படுத்தலாம் என அனைத்து நாடுகளும் முயற்சி செய்துகொண்டிருக்கின்றன. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற இந்தச் செயல் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
ட்ரோனில் தடுப்பூசிகள் அனுப்பிவைக்கும் இந்த சோதனைச் செயலை ஒருங்கிணைத்து வெற்றிகரமாக நடத்தியவர் பால்கர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மாணிக் குர்சல்.

”பயிற்சிகளின் ஒருபகுதியாக 300 தடுப்பூசிகளை ஜகவரிலிருந்து ஜாப் கிராமத்திற்கு அனுப்பினோம். இதைச் சாதாரணமாகச் செய்தால் 40 நிமிடங்களாகும், நாங்கள் வெறும் 9 நிமிடங்களில் செய்துமுடித்தோம். தடுப்பூசிகள் அனைத்தும் உள்ளூர் பொதுச் சுகாதார நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது” என டாக்டர் மாணிக் குர்சல் தெரிவித்தார்.
பாலகர் மாவட்ட சுகாதார அலுவலர் தயானந்த சூர்யவன்சி, “இவை அனைத்தும் சாத்தியமானது தனியார் நிறுவனங்கள் முன்வந்து உதவியதால்தான்” என்று கூறினார்.
மேலும், “இந்த கிராமத்திற்குத் தடுப்பூசிகள் கொண்டு செல்ல மிகவும் தாமதமாகும். அவர்கள் தடுப்பூசி மையங்களை அடைவது மிக கடினம். ஆனால் இப்போது எளிதில் தடுப்பூசிகள் கிராம மக்களின் வீட்டுக் கதவுகளுக்குச் சென்றுள்ளது. இது ஓரளவிற்குத் தடுப்பூசிகள் தொடர்பான கருத்துகளை மக்களின் மனதிலிருந்து அகற்ற உதவும்" என்று தெரிவித்தார்.
