Published:Updated:

தெலங்கானா: `80 நாள்கள்; ரூ. 1.52 கோடி பில்!’ - தொழிலாளியை நெகிழ வைத்த துபாய் மருத்துவமனை

தொழிலாளி ராஜேஷ்
தொழிலாளி ராஜேஷ் ( twitter )

துபாயில் சிகிச்சை பெற்ற ஒரு தொழிலாளருக்கு அந்த மருத்துவமனை நிர்வாகம் 1 கோடி ரூபாய் பில் கொடுத்துள்ளது.

தெலங்கானா மாநிலத்தின் ஜகீடியல் மாவட்டத்தில் உள்ள வேணுகுமட்லா கிராமத்தைச் சேர்ந்தவர் 42 வயதான ஒட்னால ராஜேஷ். இவர் சில ஆண்டுகளாகத் துபாயில் கட்டுமான தொழிலாளராக வேலை செய்து வந்துள்ளார். இவரின் மனைவி தெலங்கானாவில் துணி துவைக்கும் பணியும் விவசாயமும் செய்து வந்துள்ளார். இந்தத் தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் துபாயில் வேலை செய்து வந்த ராஜேஷுக்கு கடந்த ஏப்ரல் 23-ம் தேதி காய்ச்சல் மற்றும் இருமலுடன் உடல்நல பிரச்னை ஏற்பட்டுள்ளது.

கொரோனா  சோதனை
கொரோனா சோதனை
மாதிரி புகைப்படம்

பின்னர் அங்குள்ள வளைகுடா தொழிலாளர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் குண்டலி நரசிம்மாவின் உதவியால், ராஜேஷ் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராஜேஷுக்கு கொரோனா இருப்பதை உறுதி செய்து உடல்நலக்குறைவு மற்றும் கொரோனா ஆகிய இரண்டுக்கும் சிகிச்சையளித்து வந்துள்ளனர். சுமார் 80 நாள்கள் தொடர் சிகிச்சைக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டபோது ராஜேஷின் கையில் இந்திய மதிப்பில் சுமார் 1.52 கோடி ரூபாய் மருத்துவமனை கட்டணத்துக்கான பில் வழங்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் குண்டலி நரசிம்மாதான், தினமும் மருத்துவமனையில் ராஜேஷை கவனித்து வந்துள்ளார். ராஜேஷுக்கு பில் கொடுக்கப்பட்டது தொடர்பாக இந்தியத் தூதரகத்தின் தன்னார்வலரான சுமந்த் ரெட்டியின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளார். பின்னர் ரெட்டி, மற்றொரு சமூக சேவகரான அசோக்கின் துணையுடன் இந்த விஷயத்தை துபாயில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் தொழிலாளர்கள் நல தூதர் ஹர்ஜீத் சிங்கிடம் தெரிவித்து தொழிலாளி ராஜேஷுக்கு உதவுமாறு கேட்டுள்ளார்.

துபாய் தூதர் கடிதம்
துபாய் தூதர் கடிதம்
twitter

இதையடுத்து மனிதாபிமான அடிப்படையில் அந்தத் தொழிலாளியின் கட்டணத்தை ரத்து செய்து அவருக்கு உதவுமாறு ஹர்ஜீத் சிங் அந்த மருத்துவமனைக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். ஹர்ஜீத்தின் வேண்டுகோளின் படி மருத்துவமனை நிர்வாகமும் ராஜேஷுக்கு வழங்கியிருந்த 1.52 கோடி ரூபாய் பில்லை ரத்து செய்து அவரை டிஸ்சார்ஜ் செய்தது. பின்னர் தன்னார்வலரான நரசிம்மா, சுமந்த் ரெட்டி ஆகியோர் இணைந்து தொழிலாளி ராஜேஷுக்கும் அவரின் மனைவிக்கு இலவச விமான டிக்கெட்டுடன் செலவுக்கு ரூ.10,000 வழங்கி அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

`62 நாள்கள்;181 பக்க பில்; ரூ.8 கோடி கட்டணம்!’-கொரோனாவிலிருந்து மீண்டவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி

கடந்த புதன்கிழமை அதிகாலை துபாயிலிருந்து ஹைதராபாத் வந்தடைந்தார் தொழிலாளி ராஜேஷ். அங்கு தெலங்கானா அரசாங்கத்தின் என்.ஆர்.ஐயின் மூத்த அதிகாரி சிட்டி பாபு, தொழிலாளியை வரவேற்று அவரை 14 நாள்கள் வீட்டுக் க்வாரன்டீனில் வைக்க ஏற்பாடு செய்துகொடுத்துள்ளார். ஏழை தொழிலாளிக்காக 1 பைசாகூட வாங்காமல் மொத்த 1.52 கோடி ரூபாயையும் தள்ளுபடி செய்துள்ள துபாய் மருத்துவமனையின் செயல் மற்றும் தன்னார்வலரின் உதவி ஆகியவை பாராட்டைப் பெற்றுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு