Published:Updated:

`வாக்காளர்களுக்கு கிளவுஸ்; ஆன்லைன் வேட்புமனு!’ - தேர்தல் ஆணைய விதிமுறைகள் சொல்வதென்ன?

இந்தியத் தேர்தல் ஆணையம்
இந்தியத் தேர்தல் ஆணையம்

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், பெருந்தொற்று காலத்தில் நடக்கும் தேர்தல்களில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகளை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது.

`பெருந்தொற்று காலத்தில் நடைபெறும் தேர்தல்கள், இடைத்தேர்தல்களில் இந்த வழிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்’ என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. அதன்படி, இந்த விதிமுறைகளைப் பின்பற்றி பீகார் தேர்தல் முதலில் நடத்தப்படவிருக்கிறது. 234 சட்டப்பேரவைத் தொகுதிகளைக்கொண்டிருக்கும் பீகார் மாநில சட்டப்பேரவைக்கு வரும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் தேர்தல் நடைபெறலாம் என்றும், தேதிகளை ஆணையம் விரைவில் அறிவிக்கும் என்றும் கருதப்படுகிறது. `கொரோனா பெருந்தொற்றால் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும்’ என்று பல்வேறு கட்சிகள் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையைத் தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது.

இந்தியத் தேர்தல் ஆணையம்
இந்தியத் தேர்தல் ஆணையம்

`வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்கைப் பதிவு செய்யச் செல்லும் வாக்காளர்களுக்கு கிளவுஸ் வழங்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், `வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாளும் பணியாளர்களுக்கும் போதுமான அளவில் கிளவுஸ்கள் வழங்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு முகக்கவசங்கள், சானிடஸர் உள்ளிட்டவையும், வாக்குப்பதிவின்போது தங்களது பெற்றோர்களுடன் வரும் குழந்தைகளுக்கு முகம் முழுவதையும் மறைக்கும்படியான பிபிஇ கிட்களை வழங்கவும் தேர்தல் ஆணையம் முடிவு செய்திருக்கிறது. `வாக்காளர்கள், தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும்பொருட்டு தேர்தல் பணியாளர்கள் கேட்கும்போது முக்கவசத்தை இறக்கி, தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும்’ என்றும் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

மதுரை: `கிழக்கே தாமரையின் இலக்கு!’- அ.தி.மு.க-வை உரசும் பா.ஜ.க தேர்தல் விளம்பரங்கள்

தெர்மல் ஸ்கேனர்கள் - சமூக இடைவெளி!

ஒவ்வொரு பூத்துக்குமான அதிகபட்ச வாக்காளர்களின் எண்ணிக்கை 1,500-லிருந்து 1,000 ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு பூத்தின் நுழைவு வாயிலுக்கு அருகிலும் தெர்மல் ஸ்கேனர்கள் நிறுவப்பட்டு, வாக்காளர்களின் உடல் வெப்பநிலை பதிவு செய்யப்படும். அதேபோல், ஒவ்வொரு பூத்தும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும். பொதுவாக வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளில் இது செய்யப்படும் என்று தெரிகிறது.

வாக்குப்பதிவு இயந்திரம்
வாக்குப்பதிவு இயந்திரம்
Representational Image

வாக்குப் பதிவு மையத்தில் கூட்ட நெரிசல் ஏற்படா வண்ணம், டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு, வாக்காளர்கள் சமூக இடைவெளியுடன் அனுமதிக்கப்படுவர். இதற்காக உதவி மையம் ஒவ்வொரு பூத்திலும் அமைக்கப்படும். வாக்காளர்களை ஒழுங்குபடுத்தத் தனியாகப் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

தேர்தல் பணியாளர் ஒருவருக்கு உடல் வெப்பநிலை அதிகரித்துக் காணப்பட்டால், மாற்றுப் பணியாளர் நியமிக்கப்படுவார். இதற்காக, போதுமான தேர்தல் பணியாளர்களை எப்போதும் தயார்நிலையில் வைத்திருக்க மாவட்டத் தேர்தல் அதிகாரிக்கு அறிவுறுத்தப்படும்.

வேட்புமனுத் தாக்கல் - பிரசாரம்!

இந்தியத் தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக வேட்புமனுத் தாக்கல் ஆன்லைனில் நடைபெறவிருக்கிறது. வேட்புமனுத் தாக்கலின்போது வாக்காளர்களுடன் கூடும் தேவையில்லாத கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வேட்பாளர், தனது வேட்புமனுவை ஆன்லைனில் தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், டெபாசிட் தொகையையும் அவர் ஆன்லைனிலேயே செலுத்த வேண்டும்.

வாக்குப்பதிவு இயந்திரம்
வாக்குப்பதிவு இயந்திரம்
Representational Image

பொதுக்கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள் கூட்ட அனுமதி இருப்பதாகக் கூறியுள்ள தேர்தல் ஆணையம், `மத்திய உள்துறை அமைச்சக விதிமுறைகளைப் பின்பற்றி அவற்றை நடத்திக்கொள்ளலாம்’ என்று தெரிவித்துள்ளது. வீடு வீடாகச் சென்று பிரசாரம் மேற்கொள்ளும் வேட்பாளர்களுடன் செல்பவர்களின் எண்ணிக்கையையும் ஆணையம் நிர்ணயித்திருக்கிறது. இந்த வகை பிரசாரத்தின்போது வேட்பாளரையும் சேர்த்து ஐந்து பேர் மட்டுமே செல்ல வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆச்சரியங்களும் விநோதங்களும் நிறைந்த அமெரிக்க அதிபர் தேர்தல்! - ஒரு விரிவான பார்வை #MyVikatan

கொரோனா நோயாளிகள் எப்படி வாக்களிப்பார்கள்?

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
Representational Image

`கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வாக்களிக்கவும் ஏற்பாடு செய்யப்படும்’ என தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. வாக்குப்பதிவு நேரத்தின் கடைசி ஒரு மணி நேரம், கொரோனா நோயாளிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில், உரிய விதிமுறைகளைப் பின்பற்றி அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். அதேநேரம், `நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிப்பவர்கள் வாக்களிப்பதற்கான வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வாக்கு எண்ணிக்கை!

வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கை
Representational Image

ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மைய அறையிலும் ஏழு வாக்கு எண்ணும் மேசைகளுக்கு மேல் அனுமதிக்கப்படாது. இதனால், ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திலும் பதிவான வாக்குகள், மூன்று அல்லது நான்கு அறைகளில் கூடுதல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு எண்ணப்படும். `வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மேசைகளில் வைக்கப்படுவதற்கு முன்பு கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும். வாக்கு எண்ணும் மையங்கள், வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன்பும், வாக்கு எண்ணப்படும்போதும், அதன் பிறகும் கிருமி நாசினி கொண்டு தகுந்த இடைவெளியில் சுத்தம் செய்யப்படும்’ என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு