Published:Updated:

`யானை தற்செயலாக சாப்பிட்டிருக்கலாம்; வதந்திகளை நம்ப வேண்டாம்!’ -மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்

பாதிக்கப்பட்ட யானை
பாதிக்கப்பட்ட யானை ( Facebook | Mohan Krishnan )

``சட்டவிரோதமாக, மனிதாபிமானமற்ற முறையில் நடந்திருக்கும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன.”

கேரளாவில், கருவுற்றிருந்த யானை கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில், தொடர்புடையவர்கள்மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்துவந்தனர். இதையடுத்து, மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால், ஆரம்பம் முதலே இந்த வழக்கில் தொடர்ந்து குழப்பம் நிலவிவருகிறது. முதலில், மலப்புரம் மாவட்டத்தில் யானை கொல்லப்பட்டது என்று வெளியான தகவல், பின்னர் பாலக்காட்டில் நடந்ததாக திருத்தப்பட்டது.

அடுத்தபடியாக, யானை அன்னாசிப் பழம் தின்றதா இல்லை தேங்காய் தின்றதா... என்ற குழப்பம் நிலவியது. இதையடுத்து, யானைக்கு பழம் தெரிந்தே கொடுக்கப்பட்டதா அல்லது வேறு விலங்குகளுக்கு வைத்ததை யானை எடுத்து சாப்பிட்டதா? போன்ற பல கேள்விகள் எழுந்தன. இந்தச் சம்பவத்தை வைத்து கேரளாவுக்கு எதிராக, குறிப்பாக மலப்புரத்துக்கு எதிராக தேசிய அளவில் திட்டமிட்டு பிரசாரம் நடத்தப்படுகிறது என்றும் சர்ச்சைகள் எழுந்தன. இந்த நிலையில் தற்போது, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், யானை தற்செயலாக வெடி மருந்து நிரப்பப்பட்ட பழத்தை சாப்பிட்டிருக்கலாம் என ட்விட்டரில் தகவல் வெளியிட்டுள்ளது.

அன்னாசிப் பழத்தில் வெடி வைத்த கொடூரம்.. கர்ப்பிணி யானையின் இறுதி நிமிடங்கள்! -மனதை உலுக்கும் சம்பவம்

இதுதொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், ``முதற்கட்ட விசாரணையின்படி, யானை தற்செயலாக வெடிமருந்து நிரப்பப்பட்ட பழத்தை சாப்பிட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. மத்திய அமைச்சகம், கேரள அரசாங்கத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துவருகிறது. யானை உயிரிழந்ததற்குக் காரணமான குற்றவாளிகளை உடனடியாகக் கைதுசெய்யவும், இந்தச் சம்பவம் நடைபெற வழிவகுத்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவும் மாநில அரசுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது வரை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமாக, மனிதாபிமானமற்ற முறையில் நடந்திருக்கும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைதுசெய்வதற்கான முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன” என்று கூறப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட யானை
பாதிக்கப்பட்ட யானை
Facebook | Mohan Krishnan

வனவிலங்கு குற்ற தடுப்புப் பிரிவு, விரைவாகச் செயல்பட்டு நடவடிக்கைகளை எடுக்கவும் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. மேலும், ``சமூக வலைதளங்களில் வதந்திகள் மற்றும் போலியான செய்திகள் பரப்பப்படுவதை யாரும் நம்ப வேண்டாம். கேரள அரசு மற்றும் அனைத்து துறைகளும் எந்தவித சார்பும் இன்றி இந்த விஷயத்தைக் கையாளுகின்றன. எதிர்காலத்தில் இந்த மாதிரியான சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்கும் வகையில் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்படும். விரைவில் இந்த விசாரணையை முடிப்போம் என உறுதியுடன் உள்ளோம்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

`அன்னாசிப் பழமல்ல... தேங்காய்; தேடப்படும் எஸ்டேட் உரிமையாளர், மகன்!’ -யானை மரணத்தில் என்ன நடந்தது?
அடுத்த கட்டுரைக்கு