Published:Updated:

`அந்த வடுக்கள் என்றும் என்னுடன் இருக்கும்!’- ஒடிசா காவலர்களை அதிரவைத்த பிச்சைக்காரரின் ஃப்ளாஷ் பேக்

பிச்சைக்காரர் மிஸ்ரா
பிச்சைக்காரர் மிஸ்ரா

பி.எஸ்ஸி மற்றும் டிப்ளோமா படித்த ஒருவர் ஒடிசா, பூரி ஜெகன்நாத் கோயிலில் பிச்சை எடுத்து வந்துள்ளார். காவலர்கள் நடத்திய விசாரணையில் இது தெரியவந்துள்ளது.

அடக்க முடியாத ஆனந்தம், கோபம், சோகம் போன்ற சமயங்களில்தான் ஒருவரின் இன்னொரு முகம் வெளிவரும் எனப் பலர் கூறி நாம் கேட்டதுண்டு. இப்படிக் கட்டுக்கடங்காத கோபத்தால் ஒடிசாவில் ஒரு பிச்சைக்காரரின் வியக்கவைக்கும் மறுபக்கம் வெளிவந்துள்ளது. அவரின் ஃப்ளாஸ்பேக்கை கேட்டு ஆடிப்போயுள்ளனர் அம்மாநில காவல்துறையினர்.

சண்டை
சண்டை

ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜெகன்நாத் கோயில் வாசலில் பல பிச்சைக்காரர்கள் அமர்ந்து பிச்சையெடுத்துக்கொண்டிருப்பர். அவர்களில் ஒரு பிச்சைக்காரருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரிக்‌ஷா இழுக்கும் தொழிலாளிக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. முதலில் வாய் வார்த்தையாகத் தொடங்கிய இவர்களின் சண்டை இறுதியில் அடிதடியாக மாறியுள்ளது. இருவரும் நடு ரோட்டில் கட்டிப் பிடித்து உருண்டு சண்டை போட்டுள்ளனர். இது பற்றித் தகவல் அறிந்த பூரி பகுதி காவலர்கள், சம்பவ இடத்துக்கு விரைந்து இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு இருவரிடமும் விசாரணை நடத்தி சண்டை தொடர்பாகப் புகார் அளிக்கும் படி கேட்டுள்ளனர். அப்போது ரிக்‌ஷா இழுப்பவர் புகார் எழுத மிகவும் சிரமப்பட்டுள்ளார். ஆனால், அந்தப் பிச்சைக்காரர் நடந்த விஷயங்கள் அனைத்தையும் சில நிமிடங்களில் எழுதிக் கொடுத்துள்ளார். இதில் சிறப்பு என்னவென்றால் அந்தப் பிச்சைக்காரர் மொத்த புகாரையும் பிழை இல்லாமல் அழகாக ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இதைப் பார்த்ததும் காவலர்கள் அனைவரும் அசந்துபோயுள்ளனர்.

பிச்சைக்காரர் மிஸ்ரா
பிச்சைக்காரர் மிஸ்ரா

பின்னர், அந்தப் பிச்சைக்காரரிடம் அவரின் கடந்த காலம் பற்றி விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணை பற்றிப் பேசியுள்ள போலீஸ் அதிகாரிகள், ``நாங்கள் பிடித்து வந்த பிச்சைக்காரர் 51 வயதான கிரிஜா சங்கர் மிஸ்ரா. அவரின் தந்தை முன்னாள் போலீஸ் அதிகாரியாக இருந்துள்ளார். புவனேஷ்வரைச் சேர்ந்த மிஸ்ரா பி.எஸ்ஸி மற்றும் பொறியியல் கல்லூரியில் டிப்ளோமா முடித்துள்ளார். பின்னர், மும்பையில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்துள்ளார். இறுதியாக ஹைதராபாத்தில் ஒரு நிறுவனத்தில் நிறைவான சம்பளத்தில் வேலையிலிருந்துள்ளார். அதன் பிறகே, அங்கிருந்து வெளியே பூரி நகருக்கு வந்து பிச்சை எடுத்து வருகிறார்.

Vikatan

மிஸ்ரா எதற்காகத் தன் வேலையை விட்டார், தற்போது எதற்குப் பிச்சை எடுத்து வருகிறார் என்பது குறித்துக் கேட்டோம். ஆனால் அதற்கு அவர், `அது என் தனிப்பட்ட விஷயம். நான் சிபெட்டில் (CIPET - Central Institute of Plastic Engineering and Technology) படித்து முடித்த பிறகு, மில்டன் நிறுவனத்தில் வேலை செய்தேன். அங்கு மூத்த அதிகாரிகளுடன் ஏற்பட்ட பிரச்னையால் என் வேலையை இழக்க நேர்ந்தது. இதைவிடச் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. வெளிப்படுத்த முடியாத சில விஷயங்கள் என் வாழ்வில் உள்ளன. அந்த வடுக்கள் என்றும் என்னுடன் இருக்கும்” என்று மட்டும் கூறினார்.

பிச்சைக்காரர் மிஸ்ரா
பிச்சைக்காரர் மிஸ்ரா

அவர் எப்போதாவதுதான் பேசுகிறார். மேலும், மன சமநிலையற்றவர் போலக் காணப்படுகிறார். வழக்கு தொடர வேண்டாம் என மிஸ்ரா வேண்டுகோள் விடுத்ததால் நாங்கள் சண்டை தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை” எனத் தெரிவித்துள்ளனர். கோயில் வாசலில், மிஸ்ரா செய்தித்தாள் படிப்பதை அடிக்கடிப் பார்க்க முடியும் என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

பின் செல்ல