Published:Updated:

India-China FaceOff: `வீரர்கள் தியாகம் வீணாகிவிடக் கூடாது; வரலாற்று அநீதி!’- மன்மோகன்சிங்

மன்மோகன் சிங்
மன்மோகன் சிங்

``சீனா, சட்டவிரோதமாக வெட்கமின்றி இந்திய எல்லைப் பகுதிகளான கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் பாங்கோங் சோ பகுதிகளைக் கடந்த ஏப்ரல் மாதம் முதல் உரிமை கொண்டாடி வருகிறது என்று மன்மோகன் சிங் குறிப்பிட்டார்.”

இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையேயான எல்லைப் பிரச்னை தொடர்ந்து அதிக பதற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. ஏறக்குறைய அரை நூற்றாண்டுகளுக்குப் பிறகு உயிர்சேதம் ஏற்படும் வகையில் வீரர்களுக்கு இடையே கடந்த சில நாள்களுக்கு முன்பு மோதல் நடந்தது. இதில் இந்திய ராணுவத்தின் 20 வீரர்கள் வீரமரணமடைந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

சீனாவைச் சேர்ந்த 35 வீரர்கள் இறந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், சீனா தரப்பில் இதுதொடர்பாக எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதையடுத்து லடாக் எல்லைப் பிரச்னை சர்வதேச அளவில் கவனிக்கப்பட்டு வருகிறது. உள்நாட்டிலும் இதுதொடர்பான கடுமையான விவாதங்கள் நடந்து வருகின்றன. பிரதமர் மோடியின் நிலைப்பாடு மற்றும் கருத்துகளும் விமர்சிக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், எல்லைப் பிரச்னை தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அறிக்கை
அறிக்கை

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் நம்முடைய 20 வீரர்களை ஜூன் 15, 16 ஆகிய தேதிகளில் நாம் இழந்துள்ளோம். நாட்டுக்காகத் தங்களுடைய உயிரை அவர்கள் தியாகம் செய்துள்ளனர். இறுதி மூச்சு இருக்கும் வரை தங்களுடைய தாய்நாட்டைக் காக்க தைரியமாக நின்று போராடியுள்ளனர். வீரர்களுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் நாம் கடமைப்பட்டுள்ளோம். அவர்களுடைய தியாகம் வீணாகிவிடக் கூடாது. இப்போது நாம் வரலாற்றின் குறுக்கு சாலைகளில் நின்றுகொண்டிருக்கிறோம்.

எல்லைப் பிரச்னையில் அரசு எடுக்கும் முடிவுகள், நடவடிக்கைகள் வருங்கால சந்ததியினர் நம்மை எவ்வாறு உணர்கிறார்கள் என்பதில் தாக்கத்தை ஏற்படுத்தும். எங்களை வழிநடத்தும் பதவிகளில் இருப்பவர்களுக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நமது ஜனநாயக நாட்டில் அந்தப் பொறுப்பு பிரதமர் பதவிக்கு உள்ளது. எனவே, பிரதமர் மோடி பேசும்போது தனது பேச்சினால் ஏற்படும் விளைவுகள், தேசத்தின் பாதுகாப்பு, நலன்களைக் கருத்தில் கொண்டு கவனமாகப் பேச வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

 India-China FaceOff: `நரேந்திர மோடி உண்மையில் சரண்டர் மோடி!’ - ராகுல் காந்தி

மேலும், சீனா, சட்டவிரோதமாக வெட்கமின்றி இந்திய எல்லைப் பகுதிகளான கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் பாங்கோங் சோ பகுதிகளை, கடந்த ஏப்ரல் மாதம் முதல் உரிமை கொண்டாடி வருகிறது என்றும் மன்மோகன் சிங் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்து அவர் அந்த அறிக்கையில், ``சீனாவின் அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் நாம் அடிபணிந்துவிடக் கூடாது. இந்திய இறையாண்மையை ஒருபோதும் சமரசம் செய்யக் கூடாது. அவர்கள் தங்களது நிலைப்பாட்டை உறுதிப்படுத்திக்கொள்ளும் வகையில் வார்த்தைகளைப் பயன்படுத்த பிரதமர் மோடி அனுமதியளிக்கக் கூடாது. இந்த நெருக்கடியான நிலையைச் சமாளிக்கவும் பிரச்னைகள் மேலும் வளருவதைத் தடுக்கவும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். வெட்ககேடான அச்சுறுத்தலுக்கு எதிராக ஒரு தேசமாக அனைவரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும்.

இந்தியா - சீனா
இந்தியா - சீனா

எல்லைப் பிரச்னைகள் தொடர்பான தவறான தகவல்களை வெளியிடுவதன் மூலமாக உண்மைகளை மறைக்க முடியாது என்பதை அரசுக்கு நினைவூட்ட விரும்புகிறோம். இது சரியான தலைமைக்கு அழகும் அல்ல. நாட்டுக்காகத் தங்களுடைய உயிரைத் தியாகம் செய்த கர்னல் சந்தோஷ் பாபு மற்றும் பிற வீரர்களுக்கு நீதி கிடைப்பதை பிரதமர் உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில், மக்களின் நம்பிக்கைக்கு எதிரான வரலாற்றுத் துரோகமாக அமைந்துவிடும்” என்று கூறியுள்ளார்.

எல்லைப் பிரச்னை தொடங்கிய நாள் முதல் லடாக் பகுதியில் நிலவி வரும் நிலைமைகள் குறித்து காங்கிரஸ் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகிறது. இதற்கு, சரியான நேரத்தில் பதிலளிக்கப்படும் என்று மத்திய அரசு கூறி வந்ததும் குறிப்பிடத்தக்கது. தாக்குதல்கள் நடந்த பிறகு, மோடி தலைமையிலான அரசு எல்லைப் பிரச்னை பற்றிய தகவல்களைத் தெரிவித்தது. எனினும், இதுதொடர்பான குழப்பங்கள் தொடர்ந்து நிலவி வருகிறது.

India-China FaceOff : `என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம்!’ - மோடிக்கு ஆதரவளிக்கும் ட்ரம்ப்?
அடுத்த கட்டுரைக்கு