Published:Updated:

`இனி போராட்டக்காரர்கள் பயம் கொள்வர்; ஏனெனில் இங்கு யோகி உள்ளார்!’ - உ.பி அரசைச் சுற்றும் சர்ச்சை

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரதேசத்தில் நடந்த வன்முறைக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சிறந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ட்விட்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துத் தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் நடந்த வன்முறையில் 18 பேர் கொல்லப்பட்டனர். ``வன்முறையில் ஈடுபட்டவர்களின் சிசிடிவி வீடியோக்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் மீது நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்துவோர்களின் சொந்த உடைமைகள் பறிக்கப்பட்டு, அரசின் இழப்பைச் சரிசெய்ய அவை ஏலத்தில் விடப்படும்” என முன்னதாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்தார்.

உ.பி வன்முறை
உ.பி வன்முறை

அவரின் அறிவிப்பைப் போலவே பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்த 130 பேருக்கு அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதில் ரூ.50 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த நோட்டீஸ் தற்போது 372 பேராக அதிகரித்துள்ளது. இதே உத்தரப்பிரதேச வன்முறையினால் ஏற்பட்ட சேதங்களைச் சரிசெய்ய அம்மாநிலத்தைச் சேர்ந்த இஸ்லாமிய அமைப்புகள் ரூ.6 லட்சத்தை அரசுக்கு வழங்கியுள்ளன.

யோகி ஆதித்யநாத்தின் இந்த நடவடிக்கைக்கு உத்தரப்பிரதேச எதிர்க்கட்சிகள் உட்பட நாடு முழுவதும் உள்ள பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. `உ.பி அரசே வன்முறை செய்தது. குழந்தைகளும் சிறுவர்களும் லத்தியால் தாக்கப்பட்டனர். தற்போது அவர்களிடமே பணம் பறிக்கிறது’ போன்ற சமூகவலைதளப் பதிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் உத்தரப்பிரதேச அரசு தங்கள் நடவடிக்கைக்கு விளக்கம் அளித்து பதிவு வெளியிட்டுள்ளது.

``எல்லா கலவரக்காரர்களும் அதிர்ச்சியடைக்கிறார்கள். பிரச்னை செய்யும் ஒவ்வொருவரும் அதிர்ச்சியடைகிறார்கள். யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தின் கண்டிப்பைக் கண்டு அனைவரும் அமைதியாகிவிட்டனர். பொதுச்சொத்துகளைச் சேதப்படுத்தும் அனைவரும் அதற்கான இழப்பீட்டைச் செலுத்த வேண்டிவரும் என முதல்வர் அறிவித்திருந்தார். உத்தரப்பிரதேசத்தில் இனி எல்லாப் போராட்டக்காரர்களும் அழுவார்கள். ஏனெனில் இங்கு யோகி ஆதித்யநாத்தின் ஆட்சி நடக்கிறது” என அம்மாநில அரசின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உ.பி அரசின் இந்தக் கருத்தால் சர்ச்சை உருவாகியுள்ளது.

`பொதுச் சொத்துக்கு ஈடாக உங்கள் சொத்து கைப்பற்றப்படும்!’ - யோகி ஆதித்யநாத் கடும் எச்சரிக்கை #CAA

மற்றொரு பதிவில், ``வன்முறை செய்தவர்கள் மற்றும் பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தியவர்கள் தற்போது அதற்கான இழப்பை ஈடுசெய்ய வேண்டும். வன்முறை, ஆர்ப்பாட்டங்களை எவ்வாறு கையாளப்படவேண்டும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் சிறந்த முதல்வர் யோகி என்ற ஹாஸ்டாக்கும் பகிரப்பட்டுள்ளது. தற்போது அந்த ஹாஸ்டாக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது. பல நெட்டிசன்களும் யோகி ஆதித்யநாத்தைப் பாராட்டியும் அவரை விமர்சித்தும் இந்த ஹாஸ்டாக்கைப் பயன்படுத்தி வருகின்றனர்.

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்தின் நடவடிக்கை பற்றி கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக், ``நம் நாட்டில் மக்கள் போராடுவதற்கு உரிமை உள்ளது. நாட்டின் பிற மாநிலங்களில் அமைதியான முறையில் போராட்டம் நடந்தது. ஆனால், உத்தரப்பிரதேச முதல்வர், வேண்டுமென்றே கட்டுக்கடங்காத நிலையை உருவாக்கி மதத்தின் அடிப்படையில் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்துகிறார்” எனக் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு