Published:Updated:

பயிற்சிக்குச் சென்ற மாணவிக்குப் பாலியல் தொல்லை; முன்னாள் ராணுவ வீரர் கைது!

கைது செய்யப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் சிவக்குமார்
கைது செய்யப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் சிவக்குமார்

``பயிற்சி என்ற பெயரில் சிவக்குமார் மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். அத்துடன் இரட்டை அர்த்தங்களுடன் கூடிய ஆபாச வார்த்தைகளையும் தொடர்ச்சியாகப் பேசியிருக்கிறார்.”

சென்னை, பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆனந்தன், சென்னை தடகளப் பயிற்சி மையத்தின் பயிற்சியாளர் நாகராஜன் போன்ற ஆசிரியர்களின் வரிசையில், புதுச்சேரியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான சிவக்குமார் என்பவரும் மாணவிக்குப் பாலியல் தொல்லை தந்த குற்றச்சாட்டில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். புதுச்சேரியைச் சேர்ந்த மாணவி நிஷா(பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) காலாப்பட்டிலுள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு படித்து வருகிறார்.

பாலியல் வன்கொடுமை - Representational Image
பாலியல் வன்கொடுமை - Representational Image

பள்ளிப்பருவத்தில் இருந்தே காவல் துறையில் இணைந்து அதிகாரியாகப் பணியாற்ற வேண்டும் என்ற கனவில் இருந்த மாணவி நிஷா, தனது விருப்பத்தை பெற்றோரிடம் தெரிவித்தார். அதையடுத்து சீருடைப் பணிக்கு தேவையான நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பயிற்சிப் பள்ளியை நடத்தி வந்த முன்னாள் ராணுவ வீரர் சிவக்குமாரிடம் நிஷாவை சேர்த்துவிட்டனர் அவரின் பெற்றோர். ஆனால் அங்கு சென்ற சில நாள்களிலேயே பயிற்சிப் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்ட நிஷா, அதையடுத்து படிப்பிலும் சரியாக கவனம் செலுத்த முடியாமல் தவித்துவந்தார்.

அதனை கவனித்த அவரின் பெற்றோர், ``போலீஸ் ஆக வேண்டும் என்பதுதானே உன் கனவு... இப்போ ஏன் பயிற்சிக்குப் போகமாட்டேன்னு சொல்ற?" என்று கேள்வி எழுப்பியிருக்கின்றனர். அதற்கு நிஷா எதுவும் பதிலளிக்காததால் பெற்றோர்களும் மகளுக்குப் பிடிக்காததை வற்புறுத்த வேண்டாம் என்று நிறுத்திவிட்டனர். இந்நிலையில் நேற்று முன் தினம் பயிற்சிப் பள்ளியின் ஆசிரியரான முன்னாள் ராணுவ வீரர் சிவக்குமார் மாணவி நிஷாவுக்கு போன் செய்திருக்கிறார். அதன் பிறகு, அறைக்குள் இருந்த நிஷா தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்திருக்கிறார்.

Girl - Representational Image
Girl - Representational Image
Pixabay

மகள் திடீரென அழ ஆரம்பித்ததும் பதறிப்போன பெற்றோர் அவரிடம் காரணம் கேட்டிருக்கிறார்கள். அப்போது, சிவக்குமார் தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததுடன் அவரது ஆசைக்கு இணங்கும்படி மிரட்டுகிறார் என்றும், அதனால்தான் தான் பயிற்குச் செல்வதை நிறுத்தியதாகவும் கூறிவிட்டு கதறி அழுதிருக்கிறார். அத்துடன் சிவக்குமாரின் செல்போன் பதிவையும் காட்டியிருக்கிறார். அதனை கேட்டு அதிர்ச்சியடைந்த நிஷாவின் பெற்றோர் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த வில்லியனூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரபு, அவர்கள் கொடுத்த செல்போன் உரையாடல்கள் உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்தார். அதையடுத்து சிவக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர் காவல் துறையினர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய விசாரணை அதிகாரிகள், ``அந்த மாணவிக்கு போலீஸ் ஆக வேண்டும் என்று ஆசை. அதற்காகத்தான் அந்தப் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்திருக்கிறார். ஆனால் பயிற்சி என்ற பெயரில் சிவக்குமார் மாணவியின் உடல் பாகங்களை தொட்டு பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். அத்துடன் இரட்டை அர்த்தத்துடன் ஆபாச வார்த்தைகளையும் தொடர்ச்சியாகப் பேசியிருக்கிறார். நான் உங்கள் மகள் மாதிரி என்று மாணவி கூறியதையும் அவர் பொருட்படுத்தவில்லை.

கைது செய்யப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் சிவக்குமார்
கைது செய்யப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் சிவக்குமார்
Vikatan

அதனால்தான் பயிற்சிப் பள்ளியில் இருந்து நின்றிருக்கிறார். ஆனால் பெற்றோர் வருத்தப்படுவார்கள் என்று உண்மைக் காரணத்தை மறைத்திருக்கிறார். அன்றைய தினம் நிஷாவுக்கு போன் செய்த சிவக்குமார், தனது விருப்பத்திற்கு இணங்க வேண்டும் என்றும், இல்லையென்றால் உடை மாற்றும்போது தான் எடுத்து வைத்திருக்கும் போட்டோக்களை வெளியிட்டுவிடுவேன் என்றும் மிரட்டியிருக்கிறார். புத்திசாலித்தனமாக அந்த உரையாடலை ரெக்கார்டு செய்துவிட்டார் நிஷா. அந்த பயிற்சிக் கூட்டத்தில் மேலும் சில மாணவிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறாரா என்பது குறித்து விசாரணையை மேற்கொண்டு வருகிறோம்” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு