Published:Updated:

`அவர்களை எங்களிடம் ஒப்படையுங்கள்... பேசலாம்!’ - பாகிஸ்தான் விவகாரத்தில் ஜெய்சங்கர் ஓப்பன் டாக்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய பல முறை விரும்பினார். அந்த முடிவை வெளிப்படையாக அவரே தெரிவித்தும் அதை இந்தியா ஏற்க மறுத்துவிட்டது.

ஜெய்சங்கர்
ஜெய்சங்கர்

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் முடிவுக்குப் பின்னர் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின் உறவு உலகம் முழுவதும் விவாதப் பொருளானது. பாகிஸ்தான் இந்த விவகாரத்தில் உலக நாடுகள் தலையிட வேண்டும் என விரும்பியது. ஆனால், இந்தியா உறுதியாக இது இருநாட்டு விவகாரம், நாங்கள் பேசிக்கொள்கிறோம் என முடித்துக்கொண்டது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய பல முறை விரும்பினார். அந்த முடிவை வெளிப்படையாக அவரே தெரிவித்தும் அதை இந்தியா ஏற்க மறுத்துவிட்டது.

இந்தியா- பாகிஸ்தான்
இந்தியா- பாகிஸ்தான்

மேலும், பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஆதரிக்கும் வரை அவர்களிடம் பேசப் போவதில்லை என்னும் நிலைப்பாட்டையும் மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தி வந்தது. இந்த நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியா பாகிஸ்தான் விவகாரங்கள் தொடர்பாக பேசியுள்ளார். ப்ரெஞ்ச் நாளிதழான `லே மோண்டே'வுக்கு அவர் அளித்த பேட்டியில், ``இந்தியா, பாகிஸ்தான் இடையே சுமுகமான உறவு ஏற்படாததற்கு காரணம், பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்குப் பயிற்சி வழங்கி இந்தியாவில் தாக்குதல்கள் நடத்த அனுப்பி வைக்கிறது என்பதுதான். இதை பாகிஸ்தானால்கூட இல்லை என மறுக்க முடியாது.

பயங்கரவாதத்தை ஆதரித்து வளர்க்கும் ஓர் அண்டை நாட்டுடன் எந்த நாடு பேச்சுவார்த்தை நடத்தும்? தீவிரவாதத்தை ஒழிப்பதில் அவர்கள் ஒத்துழைக்க வேண்டும். உதாரணமாக, இந்தியாவுக்கு தேவையான `மோஸ்ட் வான்டெட்’ சிலர் அங்கு பதுங்கி இருக்கிறார்கள். பாகிஸ்தானிடம் நாங்கள் சொல்வது எல்லாம் இதைதான். `அவர்களை எங்களிடம் ஒப்படையுங்கள்... பேசலாம்’ என்பதைதான்” என்றார்.

ஜெய்சங்கர்
ஜெய்சங்கர்

தொடர்ந்து காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பேசிய ஜெய்சங்கர், ``காஷ்மீரில் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்கள் காரணமாக பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெச்சரிக்கையாக எடுக்கப்பட்டது. தற்போது நிலைமை சீரான வேகத்தில் சரியாகி வருகிறது. தொலைத்தொடர்புகள் இயல்பு நிலைக்கு வந்துவிட்டன. கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆப்பிள் அறுவடைகூட நடந்துவருகிறது” என்றார். மேலும், விரைவில் வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் காஷ்மீரில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். மேலும், தற்போது சீனாவுடனான உறவு மேம்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.