Published:Updated:

`எதுவும் பேச விரும்பவில்லை, கையை இழந்துவிட்டேன்!' - போலீஸ் தாக்குதலால் அலறிய உ.பி மாணவர்கள்

கண்ணீர்ப்புகை குண்டுகளை வெறும் கைகளால் சேகரித்து, அவற்றை வாளித்தண்ணிரீல் நனைத்தேன். அது, எங்களைக் காப்பாற்றும் என நினைத்தோம்.

போராட்டத்தில் மாணவர்கள்
போராட்டத்தில் மாணவர்கள்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டிசம்பர் 11-ம் தேதி முதல் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது.

குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெற்று சட்டமானது. இந்தச் சட்டத்துக்கு எதிராக, டிசம்பர் 13-ம் தேதி 1,500 மாணவர்கள் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். டிசம்பர் 15-ம் தேதி, டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்களின்மீது டெல்லி போலீஸார் நடத்திய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்வகையில், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் குவிந்தனர்.

இதையடுத்து, அலிகார் பல்கலைக்கழகத்தில் உத்தரப்பிரதேச போலீஸார் தாக்குதல் நடத்தினர். போலீஸார் நடத்திய தடியடியில் காயமடைந்த மாணவர்கள், மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக வளாகம்
ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக வளாகம்
Ani

இதுகுறித்து மாணவர் நஷீர், ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்துள்ளார். அதில், ``டிசம்பர் 15-ம் தேதி மாலை 5.30 மணிக்கு மேல் ஜாமியா பல்கலைக்கழகத்தில் போலீஸார் நடத்திய தாக்குதல் குறித்து மெசேஜ் வந்தது. சில மணிநேரம் கழித்து ஜாமியா போராட்டம் தொடர்பான வீடியோக்கள், போட்டோக்கள் வந்தன. கல்லூரி வளாகம், மசூதிகளில் போலீஸார் நுழைந்து கண்ணீர்ப்புகை குண்டுகளைக்கொண்டு தாக்குதல் நடத்திய புகைப்படங்களும் வெளியாகின.

`எதுவும் பேசக்கூடாது; தாடியைப் பிடுங்கி எறிவோம்!’- உ.பி-யில் செய்தியாளருக்கு நேர்ந்த துயரம்

ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் திரண்டோம். கல்லூரி வளாகத்துக்குள் பேரணியாகச் சென்றோம். ஜாமியா பல்கலைக்கழகத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், இரண்டு மாணவர்கள் உயிரிழந்துவிட்டதாகத் தகவல் வெளியானது. ஆனால், அது வதந்தி என்பதைப் பின்னால் அறிந்துகொண்டோம்.

ஆனால், அந்தச் செய்திதான் எங்களைப் போராடத் தூண்டியது. போலீஸார் தாக்குதல் நடத்தியபோது, விருந்தினர் மாளிகையில் ஒளிந்திருந்தோம். போலீஸார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசினர். மாணவர்கள் சிலர் உப்பைக் கொண்டுவந்தனர். வாளித் தண்ணீரில் உப்பைக் கலந்துவைத்தனர், கண்ணீர் புகைக்குண்டுகளை வெறும் கைகளால் சேகரித்து, அவற்றை வாளித்தண்ணிரீல் நனைத்தேன். அது எங்களைக் காப்பாற்றும் என நினைத்தோம்” என்றார்.

போலீஸாரின் தாக்குதலில் காயமடைந்த மாணவர்
போலீஸாரின் தாக்குதலில் காயமடைந்த மாணவர்

முகமது தாரீக் பேசுகையில், ``நான் இங்கே எதையும் சொல்ல விரும்பவில்லை. என்னுடைய கையை இழந்துவிட்டேன், இதுதான் உண்மை” என்றார் விரக்தியுடன்.

19 வயதான முகமது பேசுகையில், ``அமைதியான முறையில் நாங்கள் எங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்தோம். காவல்துறையினர் எங்கள்மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினர். விருந்தினர் மாளிகையில் இருந்து எங்களை இழுத்து வந்து தாக்கினர்” என்றனர்.

`நான் வரலாறு படைக்கிறேன் என அவர்களுக்குத் தெரியாது!’ - போராட்டத்தில் கவனம் ஈர்த்த மாணவி

மற்றொரு மாணவர் கூறுகையில், ``காவல்துறையினர் தாக்குதல் நடத்தத் தொடங்கியதும் மாணவர்கள் அங்கும் இங்கும் ஓடினர். போலீஸார் எங்களைத் துரோகிகள் எனக் கூறி தாக்கத் தொடங்கினர். நானும் மற்ற மாணவர்களும் பயத்துடனே ஓடினோம். நாங்கள் ஒளிந்துகொள்ள கழிவறைதான் கிடைத்தது. அங்குதான் மறைந்திருந்தோம். போலீஸார் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே வர முயன்றனர். நாங்கள் 11 பேரும் கதவுகளைத் தாங்கிநின்றோம். மாணவர்களின் அலறல் சத்தம் எங்களுக்கு பயத்தை ஏற்படுத்தியது. நாங்கள் மேலும் அச்சமடைந்திருந்தோம். அதன் காரணமாகக் கதவுகளைத் திறக்கவில்லை. நீண்ட நேரத்துக்குப் பிறகு, கதவுகளைத் திறக்குமாறு காவல்துறையினர் கூறினர். அந்த நேரத்தில், அங்கிருந்த மாணவர்கள் மற்றவர்களுக்கு போன் செய்து உதவி கேட்டனர்.

அலிகார் பல்கலைக்கழக  போராட்டத்தில் மாணவர்கள்
அலிகார் பல்கலைக்கழக போராட்டத்தில் மாணவர்கள்

‘'போலீஸார் தாக்குகிறார்கள், நாங்கள் கழிவறையில் ஒளிந்துகொண்டிருக்கிறோம். மாணவர்களின் அலறல் சத்தங்களைக் கேட்கவே பயமாக இருக்கிறது. தயவுசெய்து எங்களைக் காப்பாற்றுங்கள். இல்லையென்றால் இறந்துவிடுவோம்’' என வாட்ஸ் அப் மூலம் வாய்ஸ் மெசேஜ் அனுப்பினோம்.

இறுதியில், காவல்துறையினர் கதவை உடைத்துக்கொண்டு 11 பேரையும் வெளியில் இழுத்துப்போட்டனர். துப்பாக்கிகள் மற்றும் லத்தியைக்கொண்டு தாக்கினர். மருத்துவமனையில் போலீஸார் எங்களுக்கு தண்ணீர்கூட தர மறுத்தனர்” என்றார்.

மாணவர்களும் போலீஸாரும் மாறி மாறி குற்றம் சாட்டிவரும் நிலையில், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர போலீஸாரை பல்கலைக்கழகத்துக்குள் அழைத்தோம் என அலிகார் பல்கலைக்கழகப் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

``அப்போது நாங்கள் குழப்பத்தில் இருந்தோம். ஒன்று, நிலைமை மோசமடைவதை அனுமதிக்க வேண்டும் அல்லது போலீஸாரை அழைக்க வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பில் அக்கறை கொண்டு, நாங்கள் சிறந்த விருப்பத்தைத் தேர்வு செய்தோம்” என அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகப் பதிவாளர் தெரிவித்துள்ளார்.