Published:Updated:

குடியரசுத் தலைவர் திறந்து வைத்தது நேதாஜி ஓவியமா, நடிகர் ஓவியமா... வெடிக்கும் சர்ச்சை! #FactCheck

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
குடியரசுத் தலைவர் திறந்து வைத்தது நேதாஜி ஓவியமா?
குடியரசுத் தலைவர் திறந்து வைத்தது நேதாஜி ஓவியமா?

'President of India' இந்திய அளவில் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட்டாகி வருகிறது. 'இந்த அளவுக்கா அலட்சியமாக இருப்பது?' என சிலர் விமர்சித்து வருகின்றனர். ஆனால், உண்மையில் இது நேதாஜி படமில்லையா?

நேற்று முன்தினம் (ஜனவரி 23) நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்தநாள் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இந்திய விடுதலை போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய சுபாஷ் சந்திர போஸை பெருமைப்படுத்தும் வகையில் ஜனாதிபதி மாளிகையில் அவரது உருவப்படத்தைத் திறந்துவைத்தார் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். இந்தப் படங்கள் அவரது அதிகாரப்பூர்வ சமூக வலைதள கணக்குகளில் வெளியிடப்பட்டது.

ஆனால், அது உண்மையில் சுபாஷ் சந்திர போஸின் படமல்ல, அது அவர் வேடத்தில் நடித்த நடிகர் ஒருவரின் படம் என சிலர் தெரிவிக்கின்றனர். 2019-ல் ஆண்டு ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கத்தில் சுபாஷ் சந்திர போஸின் மர்மமான மரணம் பற்றி 'கும்னாமி' என்னும் பெங்காலி திரைப்படம் வெளியானது. இதில் சுபாஷ் சந்திர போஸாக நடித்தார் ப்ரோசென்ஜித் சாட்டர்ஜி. இவரது படத்தைத்தான் ராஷ்டிரபதி பவனில் திறந்து வைத்திருப்பதாகச் சிலர் குறிப்பிட இது சர்ச்சையாக வெடித்திருக்கிறது.

Gumnaami Proseinjit Chatterjee
Gumnaami Proseinjit Chatterjee

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 'President of India' இந்திய அளவில் ட்ரெண்ட்டாகி வருகிறது. 'இந்த அளவுக்கா அலட்சியமாக இருப்பது?' என சிலர் விமர்சித்து வருகின்றனர். சிலர் அது நேதாஜி ஓவியம்தான் என்கின்றனர்.

நெட்டிசன்கள் இதை மீம் கன்டென்ட்டாக மாற்றி 'காந்தி ஜெயந்திக்கு பென் கிங்ஸ்லி போட்டோ ஓபன் பண்ணுவீங்களா ப்ரோ!' என சோசியல் மீடியாவில் செம கலாட்டா செய்துவருகின்றனர்.

சிலர் உண்மையில் இது சந்திர போஸ் ஓவியம்தான் என ஆதாரத்துடன் நிரூபிக்க முயன்று வருகின்றனர். கடந்த வருடம் சுபாஷ் சந்திர போஸின் பேரனான சந்திர குமார் போஸ் வெளியிட்ட புகைப்படத்தை வைத்தே இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். இந்த ஓவியத்தின் கீழ் இருக்கும் கையெழுத்து பத்மஸ்ரீ வென்ற ஓவியரான பரேஷ் மேத்திதான் இந்த ஓவியத்தை வரைந்திருக்கிறார் என்பதையும் உறுதிப்படுத்துகிறது. அதனால் இது உண்மையான நேதாஜி படம் என்றே தெரிகிறது.

பரேஷ் மேத்தி
பரேஷ் மேத்தி
இதுகுறித்து குடியரசுத் தலைவர் அலுவலகத்திலிருந்து விளக்கம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்டேட்:

மொத்த சர்ச்சையையுமே 'fake' என முற்றிலுமாக மறுத்திருக்கிறது அரசு தரப்பு. "நிஜ புகைப்படம் ஒன்றை மையப்படுத்தியே நேதாஜியின் ஓவியம் வரையப்பட்டிருக்கிறது. கொஞ்சம் கூட ஆராயாமல் போலியாக விவாதித்து கொண்டிருக்கிறார்கள்" என்றிருக்கிறது அரசு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு