Published:Updated:

`வயதோ 32, முதியவர்போல் தோற்றம், 30 லட்சம் டீல்!’-விமான நிலைய அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த இளைஞர்

ராம் பிரசாத்

டெல்லி விமானநிலையத்தில் இளைஞர் ஒருவர் முதியவர் போல் வேடமிட்டு போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்ல வந்து மாட்டிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

Jayesh Patel
Jayesh Patel

டெல்லி இந்திரா காந்தி விமானநிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு அதிகாரி ஒருவரால் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் நேற்று தர்மசங்கடமான சூழலுக்குத் தள்ளப்பட்டார். விராலி மோடி என்ற பெண்ணுக்கு 16 வருடங்களுக்கு முன்பு நடந்த விபத்தில் முதுகுத் தண்டுவடம் பாதிப்படைந்தது. அவரால் எழுந்து நிற்கவோ, நடக்கவோ முடியாது. டெல்லியிலிருந்து மும்பைக்குச் செல்வதற்காக வந்தார். அப்போது பெண் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் எழுந்து நிற்கக் கூறியுள்ளார். தன்னால் முடியாது என மறுத்த போதும் எழுந்து நிற்க அதிகாரிகள் கட்டாயப்படுத்திய சம்பவம் இணையத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்தப் பெண் அதிகாரிக்கு எதிராக கண்டனங்கள் பதிவாகின.

Delhi airport
Delhi airport

இந்நிலையில், டெல்லி இந்திரா காந்தி விமானநிலையத்தில் நேற்று 32 வயது நபர் ஒருவர் வயதானவர் போல் வேடமிட்டு வெளிநாடு செல்ல வந்து மாட்டிக்கொண்ட சம்பவமும் நடந்துள்ளது. விமான நிலையத்தில் அதிகாரிகள் வழக்கம்போல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வயதான நபர், தன்னால் பாதுகாப்பு நடைமுறையை மேற்கொள்ள முடியாது என்றும் வயதான காரணத்தால் வீல் சேரிலிருந்தும் தன்னால் எழுந்திருக்க முடியாது என்றும் கூறியுள்ளார். அவரது பாஸ்போர்ட்டை வாங்கி அதிகாரிகள் சோதனை செய்தனர். பாஸ்போர்டில் அந்த நபரின் பெயர் அம்ரிக் சிங், வயது 81 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

பிறந்த தேதி பிப்ரவரி 2, 1938 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதிகாரிகளுடனான உரையாடலின் போது அந்த நபர் கண்களைப் பார்த்து பேசுவதை தவிர்த்துள்ளார். மேலும் வயதானவர்களுக்கான முகச் சுருக்கமோ, தோல்களில் எவ்வித மாற்றமோ இல்லாமல் இருந்துள்ளது. குரலும் வயதுக்கேற்றவாறு இல்லை. பார்ப்பதற்கு இளைஞர் போல் இருப்பதால் பாதுகாப்பு அதிகாரிகளுக்குச் சந்தேகம் வலுத்தது. இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்லவிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Jayesh Patel
Jayesh Patel

அந்த நபரின் உண்மையான பெயர் ஜெயேஷ் பட்டேல் என்பதும் அவர் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. வயதானவர் போல் தோற்றமளிக்க தலை முடி மற்றும் தாடிக்கு வெள்ளைநிற டை அடித்து வந்துள்ளார். தனது வயதை மறைப்பதற்காக ஜீரோ பவர் கண்ணாடி அணிந்து வந்துள்ளார். ஆள்மாற்றம் செய்ததற்காக அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. குடியுரிமை அதிகாரிகளிடம் அந்த நபர் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டார். எதற்காக ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து பேசிய விமான நிலைய அதிகாரிகள், “ ஜெயேஷ் படேல் அமெரிக்கா சென்று பணியாற்ற விரும்பியுள்ளார். அவருக்கு விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அம்ரிக் சிங் என்ற போலி பெயரில், போலியான முகவரி மூலம் பாஸ்போர்ட் மற்றும் விசா பெற்றுள்ளார். இதற்கு பாரத் என்ற ஏஜென்ட் உதவிபுரிந்துள்ளார். அமெரிக்கா செல்வதற்கு போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் கிடைக்க ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். டெல்லியில் உள்ள ஹோட்டலில் மேக் -அப் ஆர்டிஸ்டை வரவழைத்து பாஸ்போர்ட்டில் இருக்கும் முதியவர் போல் வேடமிட்டுள்ளனர். இதற்காக ரூபாய் 30 லட்சம் டீல் பேசியுள்ளார் பாரத். அமெரிக்க சென்று சேர்ந்ததும் பேசியபடி தொகையைத் தர இருவரும் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

passport
passport

அவரை நன்றாக தலைமுடியை வளர்க்க அறிவுறுத்தியுள்ளனர். பின்னர் தலைமுடி மற்றும் தாடிக்கு வெள்ளை நிற டை அடித்துள்ளனர். பார்வை குறைபாடு உள்ள வயதானவர்கள் அணியும் கண்ணாடி அணிவித்து தலைக்கு டர்பன் கட்டியுள்ளனர். வயதானவர் போல் நடப்பதற்கு பயிற்சி அளித்துள்ளனர். இதற்கு முன்பு இதே போல் ஒருநபரை விமானநிலையத்தில் பிடித்துள்ளதால் இந்த விவகாரத்தில் கவனமாக இருந்தோம்” என்கின்றனர்.

ஜெயேஷ் பட்டேல், அவருக்கு உதவி புரிந்த ஏஜென்ட் மற்றும் மேக் -அப் ஆர்டிஸ்ட் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.