Published:Updated:

70,000 ஆபரேஷன்; ஆள்மாறாட்டம்; போன் மிரட்டல் - 10 வருடங்களுக்குப் பிறகு சிக்கிய போலி மருத்துவர்

போலிச் சான்றிதழ் மூலம் 10 ஆண்டுகளாக அரசு வேலை செய்துவந்த மருத்துவர், தான் அளித்த புகாரால் தானே சிக்கியுள்ளார்.

Om Pal
Om Pal ( ANI )

உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஓம் பால். 50 வயது மருத்துவரான இவர் அதே பகுதியில் உள்ள சமூக சுகாதார மையத்தில் நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளித்து வந்துள்ளார். பல்வேறு நோய்களுக்குச் சிகிச்சை அளித்து நோயைக் குணப்படுத்தியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் 70,000 அறுவை சிகிச்சைகள் வரை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Doctor
Doctor

சமீபத்தில் இவரிடம் பணம் கேட்டு ஒரு கும்பல் போனில் மிரட்டியுள்ளது. அதுதொடர்பாக சஹாரன்பூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற மருத்துவர் ஓம் பாலே காவலர்களிடம் சிக்கியுள்ளார். காரணம் அவர் ஒரு போலி மருத்துவர். இந்த விவகாரம் பற்றிப் பேசிய சஹாரன்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் வித்யாசாகர் மிஷ்ரா, ``கடந்த 2000-ம் ஆண்டு மங்களூருவில் உள்ள விமானப்படை மருத்துவமனையில் உதவியாளராக வேலை செய்துவந்துள்ளார் ஓம் பால். அதற்காக தற்போது வரை பென்சன் பெற்று வருகிறார்.

அந்த சமயம், ஓம் பாலுடன் மருத்துவர் ராஜேஷ் என்பவரும் பணியாற்றி வந்துள்ளார். அவர் வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். ராஜேஷ் எதிர்பார்த்தது போலவே அவருக்கு வெளிநாட்டு வாய்ப்பு கிடைக்க, அதைப் பயன்படுத்திக்கொண்ட ஓம் பால், தக்க சமயம் பார்த்து அவரது சான்றிதழை எடுத்து தன் புகைப்படத்தை மாற்றி போலி மருத்துவச் சான்றிதழ் தயார் செய்துள்ளார். பின்னர் கர்நாடக மருத்துவ கவுன்சிலில் ராஜேஷ்.ஆர் என்ற பெயரில் போலிச் சான்றிதழ்களைக் காட்டி தன்னையும் ஒரு மருத்துவர் எனப் பதிவு செய்துள்ளார்.

Saharanpur SP
Saharanpur SP
ANI

உண்மையான மருத்துவர் ராஜேஷும் வெளிநாடு சென்றுவிட்டதால், ஓம் பால் பற்றிய உண்மை பலருக்கும் தெரியாமலேயே இருந்துள்ளது. இதையடுத்து உத்தரப்பிரதேசம் வந்த ஓம் பால், சஹாரன்பூர் சுகாதார மையத்தில் ஒப்பந்த மருத்துவராக நியமிக்கப்பட்டுள்ளார். தான் உதவியாளராக இருந்தபோது கற்றுக்கொண்ட மருத்துவத்தின் மூலம் அங்கு வந்த நோயாளிக்கு அறுவை சிகிச்சையும் செய்து வந்துள்ளார்.

`இது வேலையல்ல; சேவை!' - ஒரேநாளில் 1.26 லட்சம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய ஜெகன்மோகன் #Andhra

அனைத்துச் சான்றிதழ்களிலும் ராஜேஷ்.ஆர் எனப் பெயர் இருந்துள்ளது. ஆனால் தன் கையொப்பம், மருத்துவர் சீட்டு ஆகியவற்றில் ராஜேஷ் சர்மா என இருந்ததால் யாருக்கும் பெரிய சந்தேகம் ஏற்படவில்லை. இது மட்டுமல்லாமல், தன்னிடம் உள்ள சான்றிதழ்களை வைத்து ஆர்.ராஜேஷின் பெயரில் தனியார் மருத்துவமனையும் நடத்தி வந்துள்ளார்.

Doctor Arrest
Doctor Arrest

இந்த நிலையில்தான், ஓம் பாலின் உண்மையை அறிந்த யாரோ சிலர் அவருக்குப் போன் செய்து, 40 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். சஹாரன்பூர் பகுதியில் தான் பிரபலமான மருத்துவர் என்பதால் தன் மீது எந்தச் சந்தேகமும் வராது என்ற நம்பிக்கையில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் சென்று அவரே மாட்டிக்கொண்டார்” எனக் கூறியுள்ளார் மிஷ்ரா.

ஓம் பாலை கைது செய்துள்ள காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.