மகாராஷ்டிரா அரசு குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தை ஊக்குவிக்க விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி இருக்கிறது. மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தவும், ஹெச்.ஐ.வி நோய் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாதுகாப்பான, சுகாதாரமான தாம்பத்யம் குறித்தும் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய கடைநிலை சுகாதாரப் பணியாளர்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு பிரசார சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த சாதனங்களைப் பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவற்றில், ரப்பரில் செய்யப்பட்ட ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகள் இடம் பெற்று இருந்ததுதான் அதற்குக் காரணம்.
`இந்தப் பொருள்களை எடுத்துச்சென்று எப்படி நாங்கள் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட முடியும்? எங்களுக்கு தர்மசங்கடமாக உள்ளது' என்று ஊழியர்கள் தெரிவித்தனர். மேலும், பிரசார பொருள்களில் இருந்து செயற்கை இனப்பெருக்க உறுப்புகளை அகற்றவேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த எதிர்ப்புகள் குறித்து புல்தானா சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ``தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குடும்பக் கட்டுப்பாடு சாதனங்கள் சிறந்த முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடியவை. விழிப்புணர்வு பிரசாரத்தில் ஆண்களுக்கு ஆண் ஊழியர்களும், பெண்களுக்கு பெண் ஊழியர்களும் இவற்றை பற்றி விளக்குவார்கள். புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட சாதனங்கள் குறித்து சில ஊழியர்கள் சந்தேகம் மட்டுமே கேட்டனர். யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை" என்று தெரிவித்தார்.