`அமேசான் மூலம் ஆர்டர்; இரவு முழுவதும் ரெய்டு!' - புல்வாமா வழக்கில் வளைக்கப்பட்ட தந்தை, மகள்

என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள பஷீரின் கடை புல்வாமா தாக்குதல் நடந்த இடத்துக்கு அருகில் உள்ளது.
புல்வாமா தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஷகீர் பஷீர் மாக்ரோ என்பவர் என்.ஐ.ஏ அதிகாரிகளால் 28-ம் தேதி கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மனித வெடிகுண்டாக மாறி ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது மோதி தாக்குதல் நடத்திய அடில் அகமது தார் என்பவருக்கு ஷகீர் பஷீர் மாக்ரோ அடைக்கலம் கொடுத்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இதே வழக்கில் தற்போது மேலும் இருவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். புல்வாமாவை அடுத்த லெத்போரா பகுதியைச் சேர்ந்த தாரிக் அஹ்மத் ஷா மற்றும் இன்ஷா தாரிக் என்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இருவரும் தந்தை - மகள் என்பதும் தெரியவந்துள்ளது. நேற்று இரவு முதல் அவர்கள் வீட்டில் ரெய்டு நடத்திய என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று அதிகாலை அவர்களைக் கைது செய்துள்ளனர்.
அவர்கள் என்ன குற்றம் புரிந்துள்ளார்கள் என்பது இதுவரை வெளியாகாவிட்டாலும், 28-ம் தேதி கைது செய்யப்பட்ட ஷகீர் பஷீர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று என்.ஐ.ஏ-வைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் ஐஏஎன்எஸ் தளத்துக்குப் பேட்டியளித்துள்ளார்.
இதற்கிடையே, ஷகீர் பஷீர் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக ஐஏஎன்எஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜெய்ஷ்-இ- முகமது தீவிரவாதிகளுக்குக் கடந்த சில ஆண்டுகளாகவே பஷீர் மறைமுகமாக உதவி செய்துவந்துள்ளார்.
பஷீர் புல்வாமா பகுதியைச் சேர்ந்தவர். இவர் அங்கு பர்னிச்சர் கடை நடத்தி வந்துள்ளார். ராணுவ வீரர்களின் நடமாட்டம் போன்ற தகவல்களை பயங்கரவாதிகளுக்குத் தெரிவிக்கும் பணியை மேற்கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள பஷீரின் கடை புல்வாமா தாக்குதல் நடந்த இடத்துக்கு அருகில் உள்ளது.
பஷீரின் செல்போனை ஆய்வு செய்ததில் வெடிகுண்டுகள் எப்படி தயார் செய்வது போன்ற வீடியோக்கள் இருந்ததாகவும் ஜெய்ஷ்-இ- முகமது அமைப்பைச் சேர்ந்த முக்கிய நபர்களின் தொலைபேசி எண்களும் இருந்ததும் தெரியவந்துள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் முகமது உமர் பரூக் மற்றும் அடில் அகமது தார் இருவருக்கும் 2018-ம் ஆண்டிலிருந்து தன்னுடைய இடத்தில் அடைக்கலம் கொடுத்துள்ளார்.
புல்வாமா தாக்குதல் நடந்த பிப்ரவரி 14-ம் தேதி வரை இருவரும் இந்தியாவில்தான் தங்கியிருந்துள்ளனர். இவர்கள் இங்கிருந்தபடியே தாக்குதலுக்குத் திட்டமிட்டுள்ளனர். 2019-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ராணுவ வீரர்களைக் கண்காணிக்கும் பொறுப்பை ஷகீர் பஷீருக்கு வழங்கியுள்ளனர். புல்வாமா தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தை மாற்றியமைத்து அதில் வெடிபொருள்களை நிரப்புவதற்கும் உதவி செய்தது என்.ஐ.ஏ அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
``தனது ஆரம்ப விசாரணையின் போது, பல சந்தர்ப்பங்களில் புல்வாமா தாக்குதலில் ஈடுபட்டவர்கள் உட்பட ஜெய்ஷ்-இ- முகமது பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள், வெடிமருந்துகள், பணம் மற்றும் வெடிக்கும் பொருள்களைச் சேகரித்து வழங்கியதை பஷீர் ஒப்புக்கொண்டார். தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரின் தயாரிப்பு, மாடல் மற்றும் எண் ஆகியவற்றை ஆய்வு நடத்தியதில் அந்த கார் மாருதி ஈகோ என்று கண்டறியப்பட்டது. அந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட காரின் சிறிய எச்சங்களை தடயவியல் பரிசோதனை மூலம் கண்டறிந்ததிலும் இது உறுதிப்படுத்தப்பட்டது.

பஷீரும் இதை விசாரணையில் உறுதிப்படுத்தியுள்ளார். தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருள்கள் அம்மோனியம் நைட்ரேட், நைட்ரோ-கிளிசரின் மற்றும் ஆர்.டி.எக்ஸ் எனத் தடயவியல் விசாரணையின் மூலம் கண்டறியப்பட்டது” என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் வெடிகுண்டு தயாரிக்கும்போது பயன்படுத்தப்படும் கையுறைகள், பேட்டரி மற்றும் அம்மோனியம் தூள் ஆகியவற்றை அமேசான் மூலம் ஆர்டர் செய்து வாங்கியுள்ளதாகவும் எல்லைக்கு அப்பாற்பட்ட பகுதியிலிருந்து இதை வாங்கியதாகவும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.