Published:Updated:

கொரோனா வைரஸுக்குப் பலியான முதல் இந்திய மருத்துவர்!

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

கொரோனா நோய் சிகிச்சை பணியில் ஈடுபட்டு வந்த மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தியாவில், மருத்துவர் ஒருவர் கொரோனாவுக்குப் பலியாவது இதுவே முதல்முறை. மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்குப் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டு இருந்து வருகையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா வைரஸுடன் போராடி வந்த 62 வயதான மருத்துவர் வியாழக்கிழமையன்று உயிரிழந்துள்ளார். அவர் கடந்த ஐந்து நாள்களாக சிகிச்சை பெற்று வந்ததாக இந்தூர் மாவட்ட தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி (சி.எம்.எச்.ஓ) டாக்டர் பிரவீன் ஜாடியா தெரிவித்துள்ளார்.

கொரோனா சிகிச்சையில் மருத்துவர்கள்
கொரோனா சிகிச்சையில் மருத்துவர்கள்

``சிகிச்சையின் போது அவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டதாகத் தெரிகிறது. நோய்த்தொற்றின் மூலத்தைக் கண்டுபிடிக்க நாங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்'' என்று டாக்டர் பிரவீன் ஜாடியா கூறியுள்ளார். இதற்கிடையில், ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வலம் வருகிறது. அதில் மருத்துவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் அமர்ந்து அவர் முற்றிலும் ஆரோக்கியமாக இருப்பதாகக் கூறியுள்ளார்.

கொரோனாவுக்கு நிதி... எங்கே கைவைக்க வேண்டும் பிரதமர்?

இந்தூரில் இதுவரை 22 கோவிட்19 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இது மாநிலத்தில், மிக அதிகமான கொரோனா பாதிப்பைக்கொண்ட நகரமாக விளங்குகிறது. கடந்த புதன்கிழமை மட்டும் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், ஒரு பொது மருத்துவர், அவரின் மனைவி, மேலும் நான்கு பேர் என ஆகமொத்தம் ஆறு பேருக்குக் கொரோனா வைரஸ் சோதனையில் பாசிட்டிவ் என உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவர்கள் போபாலில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிவ்ராஜ் சிங் சவுகான்
சிவ்ராஜ் சிங் சவுகான்

மத்தியப்பிரதேச தலைநகர் போபாலில் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட 90 பேரில் 40-க்கும் மேற்பட்டவர்கள் சுகாதாரப் பணியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் எஸ்.பி ஒருவர், ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் மற்றும் ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் உள்ளனர். புதன்கிழமை மாலை மத்தியப்பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், இந்தூர், போபால் மற்றும் உஜ்ஜைன் மாவட்டங்களை முழுவதுமாக சீல் வைக்க உத்தரவிட்டதோடு, இந்த மாவட்டங்களுக்குள் நுழையவோ அல்லது வெளியேறவோ யாரும் அனுமதிக்கப்படமாட்டாது என்றும் உத்தரவிட்டார்.

அடுத்த கட்டுரைக்கு