Published:Updated:

`5 மருத்துவமனைகள்... உயிருக்குப் போராட்டம்; அனுமதி மறுப்பு’ -அலட்சியத்தால் இறந்த பெண்

மருத்துவமனைகள்
மருத்துவமனைகள் ( மாதிரிப்படம் )

``மருத்துவமனை நிர்வாகங்களின் அலட்சியம் காரணமாக, எனது இரண்டு குழந்தைகளும் அவர்களது தாயை இழந்துவிட்டார்கள்.”

உலகில் உள்ள பல நாடுகளும் கொரோனா வைரஸால் தனது இயல்பு நிலையை இழந்து திணறிவருகின்றன. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்தவண்ணம் உள்ளன. பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கையும் 4 லட்சத்தை நெருங்கியுள்ளது.

வைரஸால் பாதிப்படைந்து இறந்தவர்களின் எண்ணிக்கை 12,000 -த்தைக் கடந்துள்ளது. இந்த நிலையில், பல மருத்துவமனைகளிலும் புதிதாக வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு வருபவர்களுக்கு சிகிச்சையளிக்க போதுமான வசதிகள் இல்லை எனத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. அதுமட்டுமல்லாது, சில மருத்துவமனைகள் பலவும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் பல சம்பவங்களும் நடந்துவருகின்றன.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

அதிகரித்துவரும் நோயாளிகளின் எண்ணிக்கையால் பல மருத்துவமனைகளிலும் நிலைமையை சமாளிக்க முடியாமல் திணறிவருவதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, முறையான சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகளில் பலரும் இறப்பதாகத் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இந்த மாதிரியான சம்பவம் ஒன்று தற்போது தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் நடந்துள்ளது. அம்மாநிலத்தில், அரசு மருத்துவமனையான காந்தி மருத்துவமனை உட்பட ஐந்து மருத்துவமனைகள் ஒரு பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி மறுத்ததால் அவர் இறந்துள்ளதாக, அவரது கணவர் குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளார். இறுதிவரை அந்தப் பெண் கொரோனா பரிசோதனைகூட செய்யப்படாமல் அடக்கம் செய்யப்பட்டதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா நிலவரம்: ஒரே நாளில் 2,396 பேருக்கு தொற்று   #NowAtVikatan

தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்தவர், ஸ்ரீகாந்த். இவர், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். இவரது மனைவி, கடந்த ஜூன் 17-ம் தேதி அன்று இருமல் மற்றும் சுவாசக்கோளாறு காரணமாக பாதிப்படைந்துள்ளார். உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், ஸ்ரீகாந்த் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அருகில் இருந்த இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கு அவரை அழைத்துச்சென்றதாக ஸ்ரீகாந்த் குறிப்பிடுகிறார்.

மருத்துவமனையில் அவர், மனைவியிடம் காணப்பட்ட நோய் அறிகுறிகளைத் தெரிவித்தபோது, அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கும் என்ற அச்சத்தில் அவரை அனுமதிக்க மறுத்துள்ளனர். பரிசோதனையைக்கூட மேற்கொள்ளாமல் உஸ்மானியா என்ற மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு செல்லும்படி கூறியுள்ளனர்.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை
மாதிரிப்படம்

இதுதொடர்பாக ஸ்ரீகாந்த் பேசும்போது, ``நான் உஸ்மானியா மருத்துவமனைக்குச் சென்றபோது, கொரோனா பரிசோதனை குறித்து என்னிடம் கேட்டார்கள். பின்னர், கோட்டி மருத்துவமனைக்கு அவரை அழைத்துச்செல்லும்படி கூறினர். ஆனால், என் மனைவியை அங்கு அழைத்துச்சென்றபோது, அவரது உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டது. அவர்கள் என்னை காந்தி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக் கூறினர்” என உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மனைவியுடன் அலைக்கழிக்கப்பட்டதை வேதனையுடன் தெரிவித்தார். ஆனால், கொரோனா வைரஸ் பரிசோதனைச் சான்றிதழ் இல்லாமல் காந்தி மருத்துவமனை ஊழியர்கள் அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டதாகக் குறிப்பிட்டார்.

``நான் தொடர்ந்து அங்கேயே நின்றுகொண்டிருந்தேன். அதன்பிறகு, மருத்துவமனை ஊழியர்கள் ஆக்ஸிஜன் ஏற்பாடு செய்யச் சொன்னார்கள். ஆனால், ஏற்பாடு செய்வதற்குள் எனது மனைவி இறந்துவிட்டார்” என்று கவலையுடன் தெரிவித்தார்.

காந்தி மருத்துவமனை ஊழியர்கள், அவரது மனைவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததாகக் கூறியதாகவும் எனினும் அவரை சிகிச்சைக்காக அனுமதிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

``மருத்துவமனை நிர்வாகங்களின் அலட்சியம் காரணமாக எனது இரண்டு குழந்தைகளும் அவர்களது தாயை இழந்துவிட்டார்கள்” என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதனிடையே, காந்தி மருத்துவமனை நிர்வாக அதிகாரி ஒருவர், ``இதுபோன்ற சம்பவம் எதுவும் எங்களது கவனத்துக்கு வரவில்லை" எனக் கூறியுள்ளார். மருத்துவமனை மற்றும் மருத்துவர்களின் அலட்சியம் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதோடு, அவர்கள் நோயாளிகளைக் கையாளும் விதம் மற்றும் அலட்சியம் தொடர்பான விவாதங்களையும் கிளப்பியுள்ளது.

கிங் இன்ஸ்டிடியூட் ஊழியர்களுக்கு கொரோனா பாசிட்டிவா? -உண்மை நிலவரம் என்ன?
அடுத்த கட்டுரைக்கு