இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மணாலி பல சாகசங்கள் நிறைந்த ஒரு மோஸ்ட் வான்டட் சுற்றுலாத் தளமாகும். அட்வென்ச்சர் அனுபவங்களை விரும்பக்கூடிய சுற்றுலாப் பயணிகள் இங்கு சுற்றலாவுக்குச் செல்வது வழக்கும். எனவே அவர்களுக்கு ஏற்றபடி இங்கு பனிச்சறுக்குகள், பாராகிளைடிங், ராஃப்டிங் மற்றும் மலையேறுதல் எனப் பல பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் சமீபத்தில் மணாலியில் அமைக்கப்பட்டுள்ள ‘பறக்கும் உணவகம்’ ஒன்று சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
‘Flying Restaurant’ என்றழைக்கப்படும் இந்தப் பறக்கும் உணவகம் கிரேன் எந்திரத்தின் உதவியுடன் சுமார் 160 அடி உயரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 20 முதல் 26 பேர் வரை அமர்ந்து சாப்பிடும் அளவிற்குப் பெரிய டைனிங் டேபிள் பொருத்தப்பட்டுப் பல வகையான உணவுகள் வழங்கப்படுகின்றன.
இப்படி அந்திரத்தில் அமர்ந்து சாப்பிடுவது ஒரு நல்ல அட்வென்ச்சர் அனுபவத்தைக் கொடுப்பதாகவும் 360 டிகிரி பார்வையில் மணாலியின் அழகை ரசித்தபடி உணவருந்தும் அனுபவம் இதன் மூலம் கிடைப்பதாகவும் சுற்றுலாப் பயணிகள் கூறுகின்றனர். மேலும் வித்தியாசமான இந்த அணுகுமுறை அப்பகுதியில் வாழும் மக்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
