Published:Updated:

‘காவலர்கள்தான் நிஜ ஹீரோக்கள்!’ -மகனுக்கு போலீஸ்காரரின் பெயர் வைத்த உ.பி பெண்

குழந்தை
குழந்தை

பரேலி எஸ்.எஸ்.பி சைலேஷ் பாண்டேவுக்குக் கர்ப்பிணிப் பெண் வீடியோ மெசேஜ் மூலம் தன் நிலையை எடுத்துக் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு அமலில் இருக்கும்போது பிரசவத்துக்கு உதவிய காவலரின் பெயரை தன் மகனுக்குச் சூட்டியுள்ளார் தாய் ஒருவர். உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியைச் சேர்ந்த தமன்னா என்ற பெண் தன்னுடைய முதல் குழந்தையை எதிர்நோக்கிக் காத்திருந்த வேளையில்தான் ஊரடங்கு அமலுக்கு வந்தது. தமன்னாவின் கணவர் அனீஸ் கான் நொய்டாவில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பரேலி எஸ்.எஸ்.பி சைலேஷ் பாண்டேவுக்கு வீடியோ மெசேஜ் மூலம் தன் நிலையை எடுத்துக் கூறியுள்ளார்.

Representation image
Representation image

இவரது வீடியோ மெசேஜைப் பார்த்ததும் உடனடியாக துரித நடவடிக்கையில் காவல்துறையினர் இறங்கியுள்ளனர். நொய்டாவில் இருந்த அவரது கணவரை உரிய நேரத்தில் கொண்டு வந்து அந்தப்பெண்ணிடம் சேர்த்துள்ளனர். தற்போது அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. நொய்டாவைச் சேர்ந்த துணைக் காவல் ஆணையர் ரன்விஜய் சிங்தான் அந்தப் பெண்ணின் கணவரை உரிய நேரத்தில் கொண்டு வந்து சேர்ந்துள்ளார். இதன்காரணமாக தன்னுடைய குழந்தைக்கு முகமது ரன்விஜய் கான் எனப் பெயர்சூட்டியுள்ளார்.

‘எதிர்காலத்தின் மீது நம்பிக்கை பிறக்கிறது!’ -கொரோனாவிலிருந்து மீண்ட 101 வயது இத்தாலிக்காரர்

இதுகுறித்து பேசிய தமன்னா, “ நான் இந்த வீடியோவை எடுக்கும்போது காவல்துறையினரிடம் எனக்கு உதவி கிடைக்கும் என்ற உறுதியான நம்பிக்கை இல்லை. ஆனால் நான் வீடியோ அனுப்பிய பிறகு சைலேஷ் பாண்டே சார் என்னைத் தொடர்புகொண்டார். அதன்பின்னர் என் கணவரையும் தொடர்புகொண்டு பேசினார். ரன்விஜய் சார் எங்கள் வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகிக்கிறார். அவருக்குப் பல வேலைகள் மற்றும் பொறுப்புகள் இருந்தபோது இந்தக் கடினமான நேரத்தில் என் கணவரை நேரில் சென்று சந்தித்து, அவர் உரிய நேரத்தில் பரேலி வருவதற்கு உதவி புரிந்துள்ளார். என்னைப் பொறுத்தவரையில் காவலர்கள்தான் உண்மையான ஹீரோக்கள். அதனால்தான் என் மகனுக்கு முகமது ரன்விஜய் கான் எனப் பெயரிட்டுள்ளேன்” என்றார்.

குழந்தை
குழந்தை

பரேலி எஸ்எஸ்பி சைலேஷ் பாண்டே கூறுகையில், ‘ தமன்னா கான் என்ற பெண் போலீஸாரின் உதவியை வேண்டி பதிவிட்ட வீடியோ சமூகவலைதளம் மூலம் என்னை வந்தடைந்தது. இதையடுத்து நான் அந்தப் பெண்ணைச் சந்தித்துப் பேசினேன். அந்தப்பெண்ணின் கணவர் அனீஸ் உரிய நேரத்தில் பரேலி வந்து சேருவதற்காக நொய்டா போலீஸாரின் உதவியை நாடினோம். நொய்டா போலீஸார் கார் ஏற்பாடு செய்து மருத்துவமனைக்கு உரிய நேரத்துக்கு வரும்படி ஏற்பாடு செய்தனர். வியாழக்கிழமை அந்தப்பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது" என மகிழ்ச்சியுடன் கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு