Published:Updated:

Diesel Price: `19 நாள்கள்; லிட்டருக்கு ரூ.10.63!' -டெல்லியில் ரூ.80-ஐக் கடந்த டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை
பெட்ரோல், டீசல் விலை

டெல்லியில் தொடர்ந்து 19 நாள்களாக விலையேற்றம் செய்யப்பட்டது. முதல்முறையாக டீசல் விலை லிட்டருக்கு ரூ.80-ஐக் கடந்திருக்கிறது.

கொரோனா ஊரடங்கால் பொதுப்போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. அதேபோல், தனிநபர் வாகனப் பயன்பாடும் வெகுவாகக் குறைந்தது. இதனால், பெட்ரோல், டீசல் பயன்பாட்டில் திடீரெனப் பெரும் சரிவு ஏற்பட்டது. இந்தநிலையில், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்தது. கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையில், கூடுதல் நிதி திரட்டும் பொருட்டு பெட்ரோல், டீசல் மீதான சுங்க வரியை மத்திய அரசு உயர்த்தியது.

பெட்ரோல், டீசல்
பெட்ரோல், டீசல்

ஊரடங்கால் பெட்ரோல், டீசல் விலைமாற்றம் செய்யப்படுவதை பொதுத் துறை நிறுவனங்கள் கடந்த மார்ச் மாத மத்தியில் நிறுத்தின. இதனால், 82 நாள்களாக விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல், டீசல் விற்கப்பட்டு வந்தன. ஊரடங்கில் தளர்வுகள் விதிக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் வாகனப் பயன்பாடு ஓரளவுக்கு அதிகரித்தது. இந்தநிலையில், பெட்ரோல், டீசல் விலையைப் பொதுத் துறை நிறுவனங்கள் கடந்த 7ம் தேதி முதல் மாற்றியமைக்கத் தொடங்கின.

அதன்படி, தொடர்ந்து 19வது நாளாக விலையேற்றப்பட்டதால், தலைநகர் டெல்லியில் முதல்முறையாக டீசல் விலை ரூ.80-ஐக் கடந்தது. இந்த விலையேற்றத்தால், நேற்று முதல்முறையாக பெட்ரோல் விலையை விட டீசல் விலை அதிகமானது. டெல்லியில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.79.76 என்ற விலையில் விற்கப்பட்ட நிலையில், ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.79.88-க்கு விற்கப்பட்டது.

Petrol Price:`18-வது நாளாக விலையேற்றம்’- டெல்லியில் பெட்ரோலைவிட டீசல் விலை அதிகம்!

இந்தநிலையில், எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து 19வது நாளாக டீசல் விலையை ஏற்றின. 14 காசுகள் விலை உயர்ந்த நிலையில், டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80.02 என்ற விலையில் விற்கப்படுகிறது. பெட்ரோல் விலையில் நேற்று மாற்றம் செய்யப்படாத நிலையில், இன்று 16 காசுகள் உயர்த்தப்பட்டன. அதனால், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.79.92 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல் விலை
பெட்ரோல் விலை

டெல்லியில் தொடர்ச்சியாக 19 நாள்களில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.10.63 என்ற அளவிலும், பெட்ரோல் விலை ஒருநாளைத் தவிர 18 நாள்கள் உயர்த்தப்பட்ட நிலையில், லிட்டருக்கு ரூ.8.66 என்ற அளவிலும் விலை அதிகமாகியிருக்கிறது. மாநில அரசுகள் விதிக்கும் வாட் வரியைப் பொறுத்து பெட்ரோல், டீசல் விலை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். மற்ற மாநிலங்களில் டீசல் விலை பெட்ரோல் விலையை விடக் குறைவாக இருக்கும் நிலையில், டெல்லியில் வாட் வரியை மாநில அரசு உயர்த்தியது. இதனால், அங்கு பெட்ரோலை விட டீசல் விலை அதிகமாக விற்பனையாகிறது.

சென்னையில் நேற்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாத நிலையில் இன்று ஏற்றம் கண்டிருக்கின்றன. பெட்ரோல் 14 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.83.18 என்ற விலையில் விற்கப்படுகிறது. டீசல் 52 காசுகள் அதிகரிக்கப்பட்டு லிட்டருக்கு ரூ.77.29 என்ற விலையில் விற்பனையாகிறது.

அடுத்த கட்டுரைக்கு