Published:Updated:

`உணவையும் உதவியையும் உடனடியாகக் கொண்டு சேர்க்கலாம்!’ - ப.சிதம்பரத்தின் 10 அம்சத் திட்டம்

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

`கடனுக்கான இ.எம்.ஐ கட்ட வேண்டிய கால அவகாசத்தையும் ஜூன் 30, 2020 வரை நீட்டிக்குமாறு வங்கிகளை அறிவுறுத்தலாம்.’

கொரோனா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், தினக் கூலிகள், ஏழை, எளிய மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாவார்கள் என்று கருதப்படுகிறது. இந்தநிலையில், நாட்டில் பாதிக்கப்படும் அனைவருக்கும் அரசு சார்பில் உதவிகள் உடனடியாகச் சென்று சேர 10 அம்ச கோரிக்கைகளை மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அளித்திருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

இதன்மூலம் பாதிக்கப்படும் மக்களிடம் உணவு மற்றும் பண உதவியை நேரடியாகக் கொண்டு சேர்க்கலாம் என்றும் இதை அரசின் பரிசீலனைக்கு விடுவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

ப.சிதம்பரம் அரசுக்கு முன்வைத்துள்ள 10 அம்ச திட்டம்

1. பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறத் தகுதியான விவசாயிகள் அனைவரும் உதவித் தொகையை இருமடங்காக (ரூ.12,000) அதிகரித்து, அதை உடனடியாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்துங்கள்.

2. மற்றொருவர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்துவரும் விவசாயிகளையும் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி சேருங்கள். அவர்கள் தொடர்பான பட்டியலை மாநில அரசுகளிடமிருந்து பெற்று, அவர்களுக்கு ரூ.6,000 +ரூ.6,000 என இரண்டு தவணைகளாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்துங்கள்.

விவசாயிகள்
விவசாயிகள்

3. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.3,000 வீதம் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.

4. நகர்ப்புறங்களில் உள்ள வங்கிக் கிளைகளில் தொடங்கப்பட்ட ஜன்தன் வங்கிக் கணக்குகள் மூலம் அந்தப் பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு அரசு சார்பில் தலா, ரூ.6,000 உதவித் தொகையை வங்கிக் கணக்குகளில் செலுத்தலாம். ஜன்தன் கணக்குகளை அடையாளம் காணும்போது அதற்கு முன்பாகத் தொடங்கப்பட்ட ஜீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்குகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

5. குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரேஷன் கடைகள் மூலம் விலையில்லாமல் தலா 10 கிலோ அரிசி அல்லது கோதுமையை வழங்கலாம். இந்த 21 நாள் ஊரடங்கில் ஒரே ஒருமுறை இதை அவர்களது வீடுகளுக்கே கொண்டுசேர்க்கும்படி திட்டமிடலாம்.

6. நாட்டில் பதிவு செய்யப்பட்ட அனைத்து நிறுவனங்களிடமும் அவர்கள் தங்கள் ஊழியர்களுக்குத் தற்போது வழங்கிவரும் ஊதியம் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை அப்படியே தொடரும்படி வலியுறுத்தலாம். அவர்களுக்கு 30 நாள் ஊதியத்தை அளித்துவிட்டு பின்னர், அரசிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கலாம்.

கொரோனா அட்டாக் - 21dayslockdown
கொரோனா அட்டாக் - 21dayslockdown

7. மேற்கூறிய எந்தவொரு நலத் திட்டத்தின்கீழும் உதவி பெறாதவர்களை அடையாளம் காணும்பொருட்டு நாடு முழுவதும் ஒவ்வொரு வார்டு\பிளாக்கிலும் ஒரு பட்டியலைத் தயார் செய்யலாம். பெயர், முகவரி மற்றும் ஆதார் கணக்கு விவரங்களோடு அவர்களைப் பதிவு செய்தால், ஆதரவற்றோர் மற்றும் தெருக்களில் வசிப்போர் இதன்கீழ் வகைப்படுத்தலாம். உரிய விசாரணைக்குப் பின்னர், அவர்களுக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கி, தலா ரூ.3,000 வீதம் அரசு உதவித் தொகை அளிக்கலாம்.

8. எந்தவிதமான வரி கட்டுவதற்குமான கால அவகாசத்தை ஜூன் 30, 2020 வரை நீட்டிக்கலாம்.

9. கடனுக்கான இ.எம்.ஐ கட்ட வேண்டிய கால அவகாசத்தையும் ஜூன் 30, 2020 வரை நீட்டிக்குமாறு வங்கிகளை அறிவுறுத்தலாம்.

10. அனைத்து விதமான பொருள்கள், அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் அதிக அளவில் மக்களால் நுகரப்படும் பொருள்களுக்கான ஜி.எஸ்.டி வரியை ஏப்ரல் 1 முதல் ஜூன் 30, 2020 வரையிலான காலகட்டத்துக்கு 5 சதவிகிதம் குறைக்கலாம்.

அடுத்த கட்டுரைக்கு