Published:Updated:

`உத்தவ் தாக்கரே கார்ட்டூன்; கடற்படை முன்னாள் வீரர் மீது தாக்குதல்!’ - அடுத்த சர்ச்சையில் சிவசேனா

கடற்படை வீரர் மீது தாக்குதல்
கடற்படை வீரர் மீது தாக்குதல்

உள்ளூர் சிவசேனா தலைவரான கமலேஷ் கதம் உட்பட 6 பேர் மதன் சர்மாவை, அவரது குடியிருப்புப் பகுதிக்கு அருகில் வைத்துக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள்.

`மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைக் கவனிக்க முடியவில்லை என்றால் முதலமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யுங்கள்’ என்று மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவை கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார் சிவசேனா கட்சியினரால் தாக்கப்பட்ட முன்னாள் கடற்படை அதிகாரி மதன் சர்மா.

மும்பை பாலி ஹில் பகுதியில் உள்ள கங்கனா ரணாவத் அலுவலக கட்டடம் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி, மும்பை மாநகராட்சி கட்டடத்தை இடித்தது. இந்த விவகாரம் குறித்து பேசிய கங்கனா ரணாவத், ``இதுபோல், உங்கள் ஆணவம் நொறுங்கும்’’ என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்குக் கண்டனம் தெரிவித்திருந்தார். கங்கனாவுக்கு பலரும் ஆதரவு பெருகிறது. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை உத்தவ் தாக்கரே பாதுகாக்கத் தவறியதாகக் கூறி அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற ஹேஷ்டேக்கை (#UddhavResignNow) நெட்டிசன்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையிலுள்ள கன்டிவலி கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் மதன் சர்மா. கடற்படை முன்னாள் அதிகாரியான இவருக்கு, வாட்ஸ்-அப்பில் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே குறித்த கார்ட்டூன் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை வந்துள்ளது. இதை அவர் தன் குடியிருப்புவாசிகள் சிலருக்கு பகிர்ந்துள்ளார்.

கடற்படை அதிகாரி மீது தாக்குதல்
கடற்படை அதிகாரி மீது தாக்குதல்

அதைத்தொடர்ந்து, உள்ளூர் சிவசேனா தலைவரான கமலேஷ் கதம் உட்பட 6 பேர் மதன் சர்மாவை, அவரது குடியிருப்புப் பகுதி அருகில் வைத்துக் கடுமையாக தாக்கினர். இதுகுறித்து புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து அன்றிரவே அந்த 6 பேரையும் மும்பை போலீஸார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.

`சிவசேனா, சோனியா சேனாவாக மாறிவிட்டது!’ - கொதித்த கங்கனா ரணாவத்

இதுகுறித்து, சர்மா தனது புகாரில், ``கார்ட்டூனை பகிர்ந்த உடன் கமலேஷ் கதமிடமிருந்து அழைப்பு வந்தது. அவர் எனது பெயரையும் முகவரியையும் கேட்டார். பிற்பகலில், குடியிருப்புக்கு வெளியே ஒரு குழுவினரால் நான் தாக்கப்பட்டேன். இதில், எனக்குக் கண் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. ஒரு கண்ணில் பார்வையே தெரியவில்லை" என்று தெரிவித்திருந்தார். சர்மா தாக்கப்படும் வீடியோவை பா.ஜ.க எம்.எல்.ஏ அதுல் படகல்கர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து சர்மாவுக்கு ஆதரவாக தன் கருத்தைப் பதிவிட்டிருந்தார்.

மேலும், மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலேவைச் சந்தித்த மதன் சர்மா, ``ஒரு கடற்படை அதிகாரியாக இல்லாதிருந்தால், நான் உயிருடனே இருந்திருக்க மாட்டேன்" என்று கூறினார். இச்சம்பவம் குறித்து பேசிய மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், ``அரசு ஆதரவோடு நடந்த பயங்கரவாத செயல்" என்று தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

இதற்கு பதிலளிக்கும் விதமாக சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் பெயரில் அறிக்கை ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில்,``மகாராஷ்டிராவில் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளும் எவரும் காப்பாற்றப்பட மாட்டார்கள். இது உத்தவ் தாக்கரேவின் கொள்கை. அவர் முதல்வரைக் கொச்சைப்படுத்தும் கார்ட்டூனைப் பரப்பினார். இந்தத் தாக்குதல் சிவசேனா தொண்டர்களின், கோபமான மற்றும் தன்னிச்சையான எதிர்வினை. தாக்குதல் நடத்தியவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மதன் சர்மா, ``நான் காயமடைந்திருக்கிறேன். கடுமையான மனஉளைச்சலில் இருக்கிறேன். நடந்த சம்பவம் வருத்தத்திற்கு உரியது. `உங்களால் சட்டம் ஒழுங்கைக் பராமரிக்க முடியவில்லை என்றால், பதவி விலகிவிடுங்கள்’ என உத்தவ் தாக்கரேவிடம் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அவற்றை யார் கவனிக்க வேண்டும் என மக்கள் முடிவு செய்யட்டும்.

அவர்கள் எனது குழந்தைகளையும், எனது குடும்பத்தினரையும் மற்றும் என்னையும் துன்புறுத்தக் கூடும். அதனால், எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன். உத்தவ் தாக்கரேவின் தொண்டர்கள் மற்றும் அமைப்பினரும் இதுபோன்ற தாக்குதல் சம்பவம் வேறு யாருக்கும் மீண்டும் நடக்காது என்பதற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோரவேண்டும்’’ என தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு