Published:Updated:

பூஜை போட்டு இடிப்பு... 800 கிலோ வெடி பொருள்... மளமளவென சரிந்த கேரள கட்டடங்கள்!

‘நான் கட்டிய கட்டடங்களுக்கு பேசும் சக்தி இருந்தால், நான் குற்றமற்றவன் என்று ஆயிரம் முறைக்கு மேலாகச் சொல்லியிருக்கும். இந்த விஷயத்தில், கேரள அரசு அதிகாரிகள் என்னைத் தவறாக வழிநடத்திவிட்டனர்'

பூஜை நடத்தி இடிக்கப்பட்ட கட்டடம்
பூஜை நடத்தி இடிக்கப்பட்ட கட்டடம்

கொச்சியில் குந்தானூர்- தேவரா பாலத்தில் இருந்து பார்த்தால், மாரடு என்ற இடத்தில் பிரமாண்டமான வானூயர்ந்த கட்டடங்கள் எழுந்து நிற்கும். ஆல்ஃபா ஷெரீன், ஹோலி ஃபெயித், ஜெயின்ஸ் கோரல் கேவ், கோல்டன் காயலோரம் என்பது இந்தக் கட்டடங்களின் பெயர். கட்டுமான நிறுவனத்தார் செய்த தவற்றால் இந்தக் கட்டடங்கள் இடிக்கப்படவுள்ளன. இந்த நான்கு கட்டடங்களிலும் 345 பிளாட்டுகளில் 240 குடும்பங்கள் இருந்தன. கடற்கரை ஒழுங்கு முறை சட்டத்தை மீறி, கடலோரத்தில் இந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டதால், இவற்றை இடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

கொச்சியில் இடிக்கப்பட்ட கட்டடம்
கொச்சியில் இடிக்கப்பட்ட கட்டடம்

இதனால், இந்த பிளாட்டுகளில் குடியிருந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, குடியிருப்புகளை வாங்கியவர்களுக்குத் தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த செப்டம்பர் மாதம் 19-ம் தேதி, இந்த விவகாரத்தில் இறுதித் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், 138 நாள்களுக்குள் கட்டடங்களை இடிக்க ஆணையிட்டது. தொடர்ந்து கட்டடங்களை இடிக்கும் பணி, மும்பையைச் சேர்ந்த எடிஃபைஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இதில், ஆல்ஃபா ஷெரீன், ஹோலி ஃபெயித் கட்டடங்கள் முதலில் இடிக்கப்பட்டன. இடிப்பதற்கு முன் சிறப்பு பூஜையும் நடத்தப்பட்டது. கட்டடங்கள் எந்த விதமான அசம்பாவிதமும் இல்லாமல் இடிக்கப்பட வேண்டுமென்று இந்தப் பணியில் ஈடுபட்டவர்கள் வேண்டிக்கொண்டனர். முதலில் இடிக்கப்பட்ட ஹோலி ஃபெயித் கட்டடம், 18 மாடிகளுடன் 60 மீட்டர் உயரம் கொண்டது. ஒரு கட்டடத்துக்கு தலா 200 கிலோ வெடிபொருள்கள் வீதமாக இந்தக் கட்டடங்களை இடிக்க மொத்தம் 800 கிலோ வெடிபொருள்கள் பயன்படுத்தப்பட்டன. இடிக்கும் பணியையொட்டி, அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

நொறுங்கும் கட்டடம்
நொறுங்கும் கட்டடம்

காலை 11.18 மணிக்கு முதல் கட்டடம் தகர்க்கப்பட்டது. அப்போது, அருகே இருந்த மற்ற கட்டடங்களில் வசித்த மக்களிடத்தில் , 'வீட்டில் எந்த ஒரு மின் சாதனத்தையும் பயன்படுத்த வேண்டாம்' என்று ஏற்கெனவே அறிவுரை வழங்கப்பட்டிருந்தது. கதவு மற்றும் ஜன்னல்களையும் அடைத்துவிட வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. 100 மீட்டர் தொலைவிலிருந்து வெடிகுண்டுகளை வெடிக்கவைக்கும் பட்டன் தட்டப்பட, ஆறே விநாடிகளில் ஹோலி ஃபெயித் கட்டடம் அப்படியே நொறுங்கிக் கீழே விழுந்தது. அடுத்த 15 நிமிடங்களில், இரண்டாவது கட்டடமான ஆல்ஃபா ஷெரீன் தகர்க்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை, எஞ்சியிருந்த இரு கட்டடங்களும் இடிக்கப்பட்டன. கட்டடங்களை இடிப்பதைப் பல கட்டடங்களின் மேல்மாடிகளில் இருந்து பொதுமக்கள் வேடிக்கைபார்த்தனர். கான்கிரீட் , இரும்புக் கம்பிகளை அகற்ற 45 நாள்கள் பிடிக்கும். தினமும் 20 ட்ரக்குகள் கான்கிரீட், இரும்புக்கம்பிகளை அகற்ற பயன்படுத்தப்படவுள்ளன. இந்தக் கட்டடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள இரும்புக் கம்பிகளை சென்னையைச் சேர்ந்த நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த நான்கு கட்டடங்களையும் இடிக்க ரூ. 2.43 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

மஸ்கட் வாழ் என்.ஆர்.ஐ.ஜெயக்குமார் என்பவரால் இந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டன. கட்டடங்கள் இடிக்கப்படுவது குறித்து ஜெயக்குமார் கூறுகையில், ‘‘நான் கட்டிய கட்டடங்களுக்கு பேசும் சக்தி இருந்தால், நான் குற்றமற்றவன் என்று ஆயிரம் முறைக்கு மேலாகச் சொல்லியிருக்கும். இந்த விஷயத்தில், கேரள அரசு அதிகாரிகள் என்னைத் தவறாக வழிநடத்திவிட்டனர். நமக்குப் பிடித்த ஒருவர் இறந்துபோய்விட்டால், நாம் மனமுடைந்து அழுவோம். அதே நிலையில்தான் நான் இருக்கிறேன். நான் கட்டிய கட்டடங்கள் இடிக்கப்படுவதை நானும் ஒரு ஓரத்தில் நின்று பார்த்தேன். பல குடும்பங்கள் வீடுகளை இழந்துள்ளன. எங்களுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது. இந்தப் படிப்பினையால் கேரளாவில் முதலீடுசெய்ய வேண்டுமென்கிற எண்ணம் போய் விட்டது. இனி, என்னைப்போன்றே பலரும் கேரளாவில் முதலீடு செய்ய யோசிப்பார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

கொச்சியில் இடிக்கப்பட்ட கட்டடம்
கொச்சியில் இடிக்கப்பட்ட கட்டடம்

இந்தக் கட்டடங்களில் வீடு வாங்கிய நூர் முகமது என்பவர் கூறுகையில், ''வாழ்நாள் சேமிப்பைக் கொட்டி இந்த வீட்டை வாங்கினேன். கண் எதிரே அந்தக் கட்டடங்கள் பொடிப்பொடியாய் நொறுங்கி விழுவதைக் கண்டு மனம் தாங்க முடியவில்லை. அரசால் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இதற்கு, கேரள அரசே பொறுப்பு. எனக்காவது கொச்சி நகரில் இன்னொரு பிளாட் உள்ளது. நான் அங்கே குடியேறிவிட்டேன். பலர், இன்னும் வீடு கிடைக்காமல் பரிதவித்துவருகின்றனர். உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட இழப்பீட்டையும் பெற முடியாமல் இங்கு குடியிருந்தவர்கள் கஷ்டப்படுகின்றனர் '' என்று குமுறினார்.

இந்த நான்கு கட்டடங்களில் வீடுகள் வாங்கியவர்கள், குறைந்த பட்சம் ரூ.40 லட்சம் முதல் ரூ. 80 லட்சம் வரை வங்கிகளில் கடன் வாங்கியுள்ளனர். அந்த வகையில், கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் வரை வங்கிகளால் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த லோன் தொகையைத் திரும்பப் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடற்கரை, ஆறு, ஏரி, குளம் மற்றும் மலை போன்ற இயற்கையை அழித்து அல்லது சேதப்படுத்தி, கட்டடங்கள் கட்டுவோர்க்கு கொச்சியில் இடிக்கப்பட்டுள்ள கட்டடங்கள் நல்லதொரு பாடம்.

``திகார் சிறை, ஜனவரி 22  காலை 7 மணி!" - நிர்பயா பாலியல் வன்கொடுமைக் கொலை வழக்கு கடந்து வந்த பாதை