Published:Updated:

`ரயில்ல போனாலும் சைக்கிளோடதான் போவோம்!’ - கொரோனா ஊரடங்கும் பீகார் தொழிலாளர்களும்

இடம்பெயர்ந்த தொழிலாளர்கள்
இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் ( AP )

நாலாயிரம் ரூபாய் கொடுத்து இந்த சைக்கிளை வாங்கியிருக்கோம். உங்களுக்கு இது பார்க்க வெறும் சைக்கிளா தெரியலாம். இந்த ஊரடங்கு காலத்துல இந்த சைக்கிள் வாங்க எவ்வளவு கஷ்டப்பட்டோம்ன்னு எங்களுக்குத்தான் தெரியும் என்கிறார்கள் நான்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்.

ஊரடங்கு காரணமாக சொந்த ஊர்களுக்கு சைக்கிளில் சென்ற நான்கு புலம்பெயர் தொழிலாளர்களை உத்தரப்பிரதேச போலீஸார் மாநில எல்லையில் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதற்கு மேல் நீங்கள் சைக்கிளில் செல்ல வேண்டாம் உங்களுக்காக சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என போலீஸார் கூறியுள்ளனர். மேலும், அவர்களை அதற்கு மேல் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். இவர்களைப்போல் சொந்த ஊர்களுக்குப் பயணமாக தொழிலாளர்களுடன் காத்திருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். அதிகாரிகளின் வார்த்தைகள் தொழிலாளர்கள் நான்கு பேருக்கும் நம்பிக்கை இல்லை. ரயில் நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட மக்கள் குறித்த செய்திகளும் நண்பர்களின் அனுபவங்களும் இவர்களுக்கு தெரியும் என்பதால் அரைமனதோடு காத்திருந்தனர்.

சைக்கிள்
சைக்கிள்

``எங்களிடம் இருந்த கடைசி பணமும் தீர்ந்துவிட்டது. கான்ட்ராக்டரிடம் 1,000 ரூபாய் கேட்டோம். அதை வைத்துக்கொண்டு ஒருநாளைக்கு இரண்டு வேளையாவது உணவு சாப்பிடலாம் என நினைத்தோம். ஆனால், அவர் எங்களுக்குப் பணம் கொடுக்கவில்லை. உயிர் வாழ்வதே கடினமாகிவிட்டது. இந்த நகரத்தில் இதற்கு மேல் இருக்கமுடியாது எனத் தெரிந்ததால் பீகாரில் உள்ள எங்களது சொந்த ஊருக்கே திரும்பி விடலாம் என முடிவு செய்தோம்” என்றார் புலம்பெயர் தொழிலாளியான ஷாக்‌ஷி. இவருக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். குழந்தைகளின் நினைப்பு வந்ததால் சரி சைக்கிளிலாவது சென்றுவிடலாம் என முடிவு செய்துள்ளார்.

`கணவரைக் காணவில்லை..’ - புகார் அளித்த பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த மருத்துவமனை நிர்வாகம்

வினோத் என்ற இளைஞர் பேசுகையில், ``என் குடும்பத்தினரிடம் பணம் கேட்பதற்கு எனக்கு வெட்கமாக இருந்தது. அவர்கள் வேலை எதுவும் செய்யவில்லை. நான் அனுப்பும் பணத்தில்தான் அவர்களின் வாழ்க்கையே நகர்கிறது. அவர்களுக்கு வேறு எந்த வருமானமும் இல்லை. ஆனால், எனக்கு வேறு வழிதெரியவில்லை. உள்ளூரைச் சேர்ந்த பெரிய புள்ளி ஒருவரிடம் கடன் வாங்கித்தான் எனக்குப் பணம் அனுப்பினர். நான் ஊருக்குச் சென்றதும் அவரைப் போய்ப் பார்க்க வேண்டும். அவருக்குச் சொந்தமாக நிலங்கள் இருக்கிறது” என்றார்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

நான்கு தொழிலாளர்களுக்கும் பணம் கிடைத்தவுடன் இருவர் புதிய சைக்கிள்களை வாங்கியுள்ளனர். இருவர் பழைய சைக்கிளை வாங்கிக்கொண்டு பயணமாகியுள்ளனர். மாநில எல்லைகள் திறந்திருக்கிறது என்ற தகவலைக் கேட்டு நால்வரும் சைக்கிளில் பயணமாகியுள்ளனர். ஆனால், உத்தரப்பிரதேச மாநில எல்லையை அடைந்தபோது எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது.

காவல்துறையினர் நால்வரையும் தடுத்து விசாரித்துள்ளனர். அப்போது எங்கு செல்கிறீர்கள் என விசாரித்துள்ளனர். பீகார் என நால்வரும் பதிலளிக்க நடைபாதையில் உட்காருமாறு கூறியுள்ளனர். அங்கு ஏற்கெனவே நூற்றுக்கணக்கான மக்கள் பீகாரில் தடுத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர். பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் எனக் காத்திருந்தனர். போலீஸார் அந்தக்கூட்டத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தனர்.

ஊரடங்கு
ஊரடங்கு

``பீகாருக்கு அனுப்புவதாகக் கூறினார்கள். அவர்கள் எங்களை எங்களது வீடுகளுக்கு அனுப்ப மாட்டார்கள். பாட்னா அல்லது மாநில எல்லையில் இறக்கிவிடுவார்கள் அங்கிருந்து மறுபடியும் இந்த சைக்கிளில் சொந்த ஊர்களுக்குச் செல்ல வேண்டும் என்றார்கள்” ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்குச் சென்றால் அவர்களை 14 நாள்கள் தனிமையில் வைத்திருப்பார்கள் என்ற விவரம் அறியாமல் வீட்டுக்கு சீக்கிரம் செல்ல வேண்டும் என்ற ஆவலில் அவர்கள் இருந்தனர்.

`மொபைல் சுவிட்ச் ஆஃப், கிணற்றில் 9 சடலங்கள்' - வடமாநில தொழிலாளர்கள் மரணத்தில் நீடிக்கும் மர்மம்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கென ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு ரயில் மற்றும் பேருந்துகளில் இவர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். சைக்கிளைக் கொண்டு செல்ல அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இங்கேயே பத்திரமாக விட்டுவிட்டு செல்லுமாறு கூறியுள்ளனர். இந்த நகரத்தில் யாரைத் தெரியும் யாரை நம்பி சைக்கிளை விட்டுச்செல்வது. எங்கள் குடும்பத்தினர் கடன் வாங்கி அனுப்பிய பணத்தில் இந்த சைக்கிளை வாங்கியுள்ளோம் எனக் கூறியுள்ளனர்.

ஊரடங்கு
ஊரடங்கு

அதன்பின்னர் பேருந்தில் சென்றவர்கள் சைக்கிளைப் பேருந்தின் கூரையிலும், ரயிலில் சென்றவர்கள் ரயிலிலும் கொண்டு சென்றுள்ளனர். பீகார் வந்ததும் அங்கிருந்த காவலர்கள் சைக்கிளைக் கொண்டு செல்ல யார் அனுமதியளித்தது எனக் கேட்டுள்ளனர். உத்தரப்பிரதேசத்திலிருந்து வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது வீடு திரும்புவதற்கான தேதியை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு