Published:Updated:

அறை எண் 14-ல் புரட்சிக்காரன்; இடிபோல் முழங்கிய இறுதி வார்த்தைகள்! - பகத் சிங் பிறந்த தினப் பகிர்வு

பகத் சிங்

சிறை கழிவறையைச் சுத்தம் செய்யும் 'பெபே போகா' எனும் இஸ்லாமியப் பெண்மணியின் கையால் ஒரு வாய் சாப்பிட வேண்டும் என்பதுதான் அவரின் இறுதி ஆசை. அது, நிறைவேறாமலேயே மார்ச் 23, 1931-ல் தூக்கிலடப்பட்டார்.

அறை எண் 14-ல் புரட்சிக்காரன்; இடிபோல் முழங்கிய இறுதி வார்த்தைகள்! - பகத் சிங் பிறந்த தினப் பகிர்வு

சிறை கழிவறையைச் சுத்தம் செய்யும் 'பெபே போகா' எனும் இஸ்லாமியப் பெண்மணியின் கையால் ஒரு வாய் சாப்பிட வேண்டும் என்பதுதான் அவரின் இறுதி ஆசை. அது, நிறைவேறாமலேயே மார்ச் 23, 1931-ல் தூக்கிலடப்பட்டார்.

Published:Updated:
பகத் சிங்

'நாளை காலை மெழுகுவத்தி ஒளி மங்குவதுபோல் நானும் மறைந்துவிடுவேன். ஆனால் நம்முடைய நம்பிக்கைகள், குறிகோள்கள் இந்த உலகத்தைப் பிரகாசிக்கச் செய்யும். மீண்டும் பிறப்போம்... எண்ணற்ற இந்நாட்டு வீரர்களின் உருவில்' என்று முழங்கிவிட்டு தூக்குக் கயிற்றுக்கு முத்தமிட்டனர் அந்த மாவீரர்கள். அதில் முதன்மையானவரான தோழர் பகத் சிங்கின் பிறந்ததினம் இன்று.

செப் 28, 1907-ம் ஆண்டு அஸ்ஸாமின், லைலாப்பூர் மாவட்டத்தில் பங்கா கிராமத்தில் வித்யாவதி - கிஷான்சிங் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் பகத் சிங். அந்த பங்கா கிராமம் , தற்போது பாகிஸ்தானில் இருக்கிறது.

பகத் சிங், இந்த மண்ணில் 23 ஆண்டுகள்தான் வாழ்ந்தார். ஆனால் அவர் விதைத்துச் சென்றது ஏராளம்!

அப்படிப்பட்ட புரட்சியாளர் வாழ்வோடு இணைந்த பத்து முக்கியமான விஷயங்களை இங்கு பார்ப்போம்.

1) ஜாலியன்வாலா பாக்கில் உதித்த வீரன்!

ஏப்ரல் 13, 1919 அன்று ஒட்டுமொத்த அகிலத்தையும் உலுக்கிய, இந்திய மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட ஓர் அநீதி நடந்தேறியது. ஜாலியன்வாலா பாக் என்ற பகுதியில் நிராயுதபாணியாக நின்ற பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மக்களை, ஜெனரல் டயர் என்ற கொடூர அதிகாரியின் ஆங்கிலேயப் படை, 1,600 சுற்றுகள் சுட்டது. அதிகாரபூர்வமாக 379 பேர் கொல்லப்பட்டதாகக் கூறினாலும், அங்கே இந்திய மண்ணில் ரத்தம் சிந்திய மக்கள் ஆயிரத்துக்கும் மேல். அப்போது லாகூரில் படித்துக்கொண்டிருக்கும் பகத் சிங்குக்கு வயது 12. அங்கிருந்து ஜாலியன்வாலா பாக் வந்து, இந்திய மக்களின் ரத்தம் தோய்ந்த அந்த மண்ணை ஒரு கைப்பிடி எடுத்து, தான் கொண்டுவந்திருந்த கண்ணாடி பாட்டிலில் போடுகிறார். ``இந்திய விடுதலையே எம் லட்சியம்..." என அந்த மண்ணின்மீது சத்தியம் செய்கிறார். அதன் பிறகு நடந்ததெல்லாம் வரலாறு...

பகத்சிங்
பகத்சிங்

2) பேச்சலர் பகத் சிங்

திருமணம் செய்துகொள்ளச் சொல்லி வீட்டில் கட்டாயப்படுத்தியபோது, ``இது திருமணத்துக்குரிய நேரமல்ல. நாடு என்னை அழைக்கிறது" என்று அவரின் தந்தை கிஷான் சிங்குக்குக் கடிதம் எழுதுகிறார். ``உன் பாட்டிக்காக (தன்னுடைய தாயார்) நீ ஒப்புக்கொள்" என்கிறார் தந்தை. அவருக்கு மீண்டும் கடிதம் எழுதுகிறார். ``நீங்கள் பாட்டிக்காகக் கவலைப்படுகிறீர்கள். நான் 33 கோடி மக்களின் தாயான நம் இந்திய மாதாவுக்காகக் கவலைப்படுகிறேன். அவளின் நலனுக்காக நான் எல்லாவற்றையுமே தியாகம் செய்கிறேன்” என்கிறார். நாட்டுக்காக சொந்த நலன்களை, ஆசைகளைத் துறந்த தேசத்துறவி பகத்சிங்.

3) 'கேளாத செவிகள் கேட்கட்டும்' இடி முழக்கம் பகத் :

நாடு முழுக்கவே இளைஞர்களிடையே ஏற்பட்டிருந்த எழுச்சியை ஒடுக்க, ‘பொதுப் பாதுகாப்புச் சட்டம், தொழில் தாவா சட்டம்’, கொண்டு வந்தது ஆங்கிலேயே அரசு. மேலும், மீரட் சதி வழக்கின் பெயரால் 31 கம்யூனிஸ்ட் தலைவர்களை ஆங்கிலேயே அரசு கைதுசெய்தது. இதற்கு பதிலடி கொடுக்க முற்பட்டதே ‘நாடாளுமன்றத்தில் ஒலித்த வெடிகுண்டு முழக்கம்.’

ஏப்ரல் 28, 1929-ல் வெள்ளை ஏகாதிபத்திய நாடாளுமன்றத்தில் குண்டு வீசினார்கள் பகத்சிங்கும் அவர் தோழர்களும்.

`கேளாத செவிகள் கேட்கட்டும்... உறங்கும் செவிகளில் கேட்க உரத்த சத்தம் தேவைப்படுகிறது' என்றார் பகத் சிங். பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் இயங்கிய இயக்கத்தின் பெயர் ‘இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சங்கம்’ ( HRSA). இதன் தொடர்ச்சியாகத்தான் ஏற்கெனவே இருந்த சாண்டர்ஸ் கொலை வழக்கை தூசுதட்டி எடுத்து பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய தோழர்களுக்கு தூக்குத் தண்டனை விதித்தது ஆங்கிலேயே அரசு.

4) புத்தகப் புழு பகத்சிங்

ஆசாத், சிவவர்மா உள்ளிட்ட நண்பர்கள் பகத் சிங்குக்கு, காரல் மார்க்ஸை அறிமுகம் செய்கின்றனர். அதன் பிறகு மார்க்ஸின் 'மூலதனம்' வாசிக்கிறார். இது 1924-ல் நடக்கிறது. அதன் பிறகே முழு கம்யூனிஸ்டாக பகத் சிங் மாறுகிறார்.

அறை எண் 14-ல் புரட்சிக்காரன்; இடிபோல் முழங்கிய இறுதி வார்த்தைகள்! - பகத் சிங் பிறந்த தினப் பகிர்வு

பிறகு சிறைவாசத்தில் சுமார் 151 புத்தகங்களை வாசித்து முடித்தார். ஆறு சிறு புத்தகங்களையும் வெளியிட்டார். கையில் புத்தகம் இல்லாமல் அவரைப் பார்க்கவே முடியாது. தூக்கு மேடைக்குச் செல்வதற்கு முன்புகூட வாசித்துக்கொண்டிருந்தார். அப்போது சிறைக் காவலர்கள், தூக்கு மேடைக்கு அழைத்தபோது, ``இருங்கள் ஒரு புரட்சியாளன், மற்றொரு புரட்சியாளனுடன் உரையாடிக்கொண்டிருக்கிறான்" என்றார். அவர் வாசித்துக்கொண்டிருந்த புத்தகம் லெனினின் 'அரசும் புரட்சியும்.’ சிறைச்சாலையையும் பாடசாலையாக மாற்றிய மாவீரன் பகத்.

5) பகத் சிங் சிறைக் குறிப்புகள்

பள்ளிப் பக்கம் அதிகம் ஒதுங்காதவராக இருந்தாலும், பஞ்சாபி, உருது, இந்தி, ஆங்கில மொழிகளில் புலமை உடையவர் பகத் சிங். அவர் எழுத்துகளில் நேர்த்தி, வீரியம் இருப்பதை உணர முடியும். அதற்கு அவரின் அதீதமான புத்தக வாசிப்பும் காரணம்.

அவரின் சிறைக் குறிப்புகளில் 108 படைப்பாளிகள் எழுதிய 43 படைப்புகளைப் பற்றிய குறிப்புகள் காணப்பட்டன. அந்த அளவுக்கு வாசித்திருக்கிறார் அந்த விடுதலை வீரன்.

6) தமிழ்நாட்டின் தோழன் பகத்

ஏகாதிபத்திய எதிர்ப்போடு , மூட நம்பிக்கைகளையும் எதிர்த்தார் பகத். அந்த வகையில் 'நான் ஏன் நாத்திகன் ஆனேன்?' என்ற புத்தகத்தை எழுதினார். இதை தோழர் ஜீவா மூலம், தந்தை பெரியார் தமிழில் கொண்டு வந்தார். பட்டிதொட்டியெங்கும் பகத் சிங்கை பரவச் செய்தார். அந்த வகையில் தமிழ்நாட்டின் தோழனானார் பகத்.

7) பகத் சிங் அறை எண் - 14

சிறைச்சாலையில், பகத்சிங் இருந்த அறை (செல்) எண் 14. தரை, புல் முளைத்த கட்டாந்தரைதான் அந்த அறை. சுமார் ஐந்து அடி, பத்து அங்குல உயரம்கொண்ட பகத்சிங், படுக்கும் அளவிலான அறை அது. அந்தச் சிறிய அறையிலிருந்துதான், விடுதலைக்கான சிந்தனையை, அகிலமெங்கும் தூவினார் பகத்.

8) மன்னிப்புக் கேட்காத பகத் சிங்

சிறைவாச காலத்தில், பலர் கேட்டும் மன்னிப்புக் கேட்காதவர். மன்னிப்புக் கேட்டால் தண்டனை குறையும் என்றபோதும், கேட்காத மாவீரன். ஒருமுறை பஞ்சாப் காங்கிரஸின் தலைவர் பீம் சென் சச்சார் உரத்த குரலில் பகத் சிங்கிடம், "நீங்களும், உங்கள் நண்பர்களும் லாகூர் சதி வழக்கில் தவறு செய்யவில்லை என்று ஏன் நீதிமன்றத்தில் முறையிடவில்லை?" என்று கேட்டார்.

அறை எண் 14-ல் புரட்சிக்காரன்; இடிபோல் முழங்கிய இறுதி வார்த்தைகள்! - பகத் சிங் பிறந்த தினப் பகிர்வு

அதற்கு பகத் சிங் என்ன சொன்னார் தெரியுமா... "போராட்டக்காரர்கள் என்றாவது ஒருநாள் இறந்துதான் ஆக வேண்டும், நீதிமன்றத்தில் முறையிடுவதால் மட்டுமே அமைப்பு ஒருபோதும் வலுவாகாது. அவர்களின் உயிர்த் தியாகம்தான் அமைப்பை வலுவாக்கும்" என்றார். அவர்தான் பகத்!

9) பகத் சிங்கின் இறுதி ஆசை

சிறைக் கழிவறையைச் சுத்தம் செய்யும் 'பெபே போகா' எனும் இஸ்லாமியப் பெண்மணியின் கையால் ஒரு வாய் சாப்பிட வேண்டும் என்பதுதான் அவரின் இறுதி ஆசை. அது, நிறைவேறாமலேயே மார்ச் 23, 1931-ல் தூக்கிலடப்பட்டார். அப்போது அவருக்கு வயது 23-தான்.

10) பகத் சிங்கின் இறுதி முழக்கம்

விவசாயிகள், தொழிலாளர்களின் குடியரசை நிறுவுவது... ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகத்தை உருவாக்குவதே பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் சகாக்களின் லட்சியமாக இருந்தது. அதற்காகவே களமாடி வீரமரணமும் அடைந்தார்கள். அந்த வகையில்தான் பகத் சிங்கைத் தூக்கில் இடுவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பு, அவருடைய வழக்கறிஞர் பிராண்நாத் மேத்தா சிறைக்கு வந்தார். நாட்டுக்கு ஏதாவது சொல்ல விரும்புறீங்களா? என்று கேட்டார். `ஆம்' என்ற பகத், மெல்லக் கண்களை மூடி திறந்து,

``ஏகாதிபத்தியம் ஒழிக.... இன்குலாப் ஜிந்தாபாத் (புரட்சி ஓங்குக)"

என ஓங்கி முழங்கினார். அன்றைக்கு ஒலித்த இந்த இரண்டு முழக்கங்களின் பேரொலி, இன்றைக்கும் கேட்டுக்கொண்டேயிருக்கிறது. அதன் தேவை இன்றைக்கும் இருக்கிறது என்பதை உணர்த்துவதாக இருக்கிறது.

``இந்தப் போர் எங்களோடு தொடங்கவும் இல்லை... எங்களோடு முடியப்போவதுமில்லை... நாளைய இளைஞர்கள் தொடர்வார்கள்" என்றார் பகத் சிங். அந்த நம்பிக்கையை நிஜமாக்கும் ஒளி, இந்திய இளைய சமூகத்தின் கண்களில் பிரகாசமாக எரிகிறது.