Published:Updated:

சுதந்திர இந்தியாவுக்கான ரகசிய வானொலி... யார் இந்த உஷா மேத்தா?!

உஷா மேத்தா

``நான் சிறையிலிருந்து வெளியே வரும்போது பெருமையாக உணர்ந்தேன். செய் அல்லது செத்துமடி என்ற மகாத்மா காந்தியின் செய்தியைப் பலருக்கு பகிர்ந்த நிம்மதி எனக்கு இருந்தது” - உஷா மேத்தா

சுதந்திர இந்தியாவுக்கான ரகசிய வானொலி... யார் இந்த உஷா மேத்தா?!

``நான் சிறையிலிருந்து வெளியே வரும்போது பெருமையாக உணர்ந்தேன். செய் அல்லது செத்துமடி என்ற மகாத்மா காந்தியின் செய்தியைப் பலருக்கு பகிர்ந்த நிம்மதி எனக்கு இருந்தது” - உஷா மேத்தா

Published:Updated:
உஷா மேத்தா

ஆங்கிலேய அரசின் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மக்கள் போராடிய காலம் அது. நாட்டின் விடுதலை போராட்டங்களுக்கு யார் முக்கிய காரணம் என்று ஆங்கில அரசு சல்லடைப்போட்டு தேடித்தேடி கைது செய்தார்கள்.

1942 ஆகஸ்ட் 8-ம் தேதி மும்பை கொவாலியா டேங்க் மைதானத்தில் மகாத்மா காந்தியின் பேச்சைக் கேட்க ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். மேடையில் மகாத்மா காந்தி, 'நான் ஒன்றைச் சொல்கிறேன். செய் அல்லது செத்துமடி’ என்ற ஒற்றை வாசகத்தை கூறினார். காந்தியின் பேச்சைத் தழல் தெறிக்கும் கண்களுடன் கேட்டுக் கொண்டிருந்தார் 22 வயது கல்லூரி மாணவி உஷா மேத்தா.

இதைத்தொடர்ந்து, மும்மையில் மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டார். பெரிய தலைகளை எல்லாம் கைது செய்துவிட்டோம் இனி எல்லாம் நம் கட்டுப்பாட்டுக்குள் என ஆங்கிலேயர்கள் நினைத்தார்கள். ஆனால், நடந்ததோ வேறு. பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக பலர் தலைமை தாங்கி போராட்டத்தை முன்னெடுத்தார்கள். அவர்களில் ஒருவராக உருவானவர் தான் உஷா மேத்தா. இவரின் போராட்ட வடிவம் காலத்திற்கும் பேசக்கூடிய ஒன்றாக மாறியது.

உஷா மேத்தா - காந்தியடிகள்
உஷா மேத்தா - காந்தியடிகள்

காந்தியடிகளின் `வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்திற்கு உருவம் கொடுக்கும் வகையில் `ரகசிய வானொலி’ நிலையத்தை அமைத்தார். உஷா மேத்தாவின் கதையிலும் வரலாற்றுப் புத்தகங்களிலும் இது 'காங்கிரஸ் ரேடியோ' என்று அழைக்கப்படுகிறது. குஜராத்தில் 1920 மார்ச் 25-ம் தேதி பிறந்த உஷா மேத்தா சிறிய வயதிலிருந்தே விடுதலை உணர்வுடன் துண்டு பிரசுரங்களை விநியோகித்து போராட்டங்களில் கலந்துகொண்டார்.

பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகத் தனது நண்பர்களுடன் சேர்ந்து 1942 ஆகஸ்ட் 14-ம் தேதி அமைத்த ரகசிய வானொலி நிலையம் சுதந்திரப் போராட்டத்திற்கு மேலும் வலு சேர்த்தது. இது ரகசிய வானொலி இயக்கமாகவும் மாறியது. சுதந்திரப் போராட்டங்கள் குறித்த செய்தி ஒலிபரப்பவும், பிரிட்டிஷாருக்கு எதிராக மக்கள் அணிதிரளவும் இந்த ரகசிய வானொலி நிலையம் பெரிதும் உதவியது. பத்திரிகைகள் மற்றும் செய்திகள் வெளியிடத் தடை விதிக்கப்பட்டிருந்த நேரத்தில் டிரான்ஸ்மிட்டர் உதவியுடன் இந்தியாவின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் செய்திகளைக் கொண்டு சென்றார்.

உஷா மேத்தா ராட்டை
உஷா மேத்தா ராட்டை

சுதந்திரப் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியிருந்ததால் பண உதவிகள் செய்யும் குழுக்களைப் பிரிட்டிஷ் அரசு கண்காணித்து வந்தது. இதனால், பண உதவிகள் பெறுவதில் உஷா மேத்தாவிற்கு பெரும் சிரமங்களும் ஏற்பட்டது. பிரிட்டிஷ்காரர்களின் தீவிர கண்காணிப்பு இருந்ததால், மும்பையில் உள்ள செளபாட்டி என்ற இடத்திற்கு அருகே உள்ள கட்டடம் ஒன்றில் டிரான்ஸ்மிஷன் சென்டர் செயல்பட்டதாக கூறப்படுகிறது. ''இந்தியாவின் ஏதோ ஒரு இடத்திலிருந்து 42.34m இது காங்கிரஸ் ரேடியோ" என்று தான் ரகசிய வானொலி ஒலிபரப்புகள் நடைபெற்றுள்ளது.

காவல்துறை மற்றும் உளவுத்துறையிடம் சிக்கிக்கொள்ளாமல் இருக்க அடிக்கடி இடங்களை மாற்றியும் வந்தார்கள். ஆரம்பக் காலத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் ஒரு நாளைக்கு இருமுறை செய்திகள் ஒலிபரப்பாகியது. பின்னர், ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே என்று அதாவது இரவு 7 மணி முதல் 8 மணி வரை செய்திகள் ஒலிபரப்பாகியது. இந்த ரகசிய வானொலி நிலையம் மூலம் பல முக்கிய தலைவர்கள் நாட்டு மக்களிடம் உரையாற்றினார்கள்.

உஷா மேத்தா
உஷா மேத்தா

பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக பேசவும், எழுதவும் செய்தித்தாள்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் இருந்தநிலையில் காங்கிரசின் இந்த ரகசிய வானொலி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மக்களின் எழுச்சியான போராட்டங்களுக்கு தூண்டுகோலாகவும் அமைந்தது. இதனால், காங்கிரஸின் ரகசிய வானொலியை முடக்க பிரிட்டிஷ் அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்தவகையில், காவல்துறையினர் சல்லடை போட்டுத் தேட ஆரம்பித்தார்கள். சில முக்கிய வானொலி கடைகளை போலீஸார் சோதனை செய்தனர். இறுதியில் 1942-ம் ஆண்டு நவம்பர் 12-ம் தேதி கிர்கானில் ஒரு நிகழ்ச்சியை நடத்திய போது பிரிட்டிஷ் ராஜ்ய காவல்துறையிடம் உஷா மேத்தா மற்றும் அவர்கள் குழு பிடிபட்டது.

இரண்டுமாத விசாரணைக்குப் பிறகு உஷா மேத்தா உள்ளிட்ட 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உஷா மேத்தாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் 1946-ம் ஆண்டு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளியே வந்த உஷா மேத்தா 'நான் சிறையிலிருந்து வெளியே வரும்போது பெருமையாக உணர்ந்தேன். செய் அல்லது செத்துமடி என்ற மகாத்மா காந்தியின் செய்தியைப் பலருக்கு பகிர்ந்த நிம்மதி எனக்கு இருந்தது" என்றார்.

இளம் வயதில் உஷா மேத்தா
இளம் வயதில் உஷா மேத்தா

இதைத்தொடர்ந்து, 'அரசியல் மற்றும் சமூக சிந்தனை - மகாத்மா காந்தி' என்ற தலைப்பில் பிஎச்டி பட்டம் பெற்றார். இவருக்கு 1998-ம் ஆண்டு இந்திய அரசு பத்ம விபூஷன் விருது வழங்கி கெளரவித்தது. 2000 ஆகஸ்ட் 11-ம் தேதி உடல்நிலை குன்றிய நிலையில் தனது 80 வயதில் உஷா மேத்தா உயிரிழந்தார். தனது 8-வது வயதில் சைமன் குழுவுக்கு எதிராகக் குரல் எழுப்பியதும், கள்ளுக்கடை மறியலில் கலந்து கொண்டதும், தன்னுடைய வாழ்நாள் முழுவதும் கதர் புடவை மட்டுமே உடுத்தி வந்ததும் இவரின் வரலாற்றின் முக்கிய அடையாளங்கள் ஆகும்!