Published:Updated:

பாகிஸ்தான் தளபதியைக் கொன்ற டிராஃபிக் கான்ஸ்டபிளுக்கு உயர் பதவி... பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சத்பால் சிங் விருது பெறும் காட்சி
சத்பால் சிங் விருது பெறும் காட்சி

பாகிஸ்தானின் முக்கிய ராணுவ அதிகாரியை சுட்டுக் கொன்ற சத்பால் சிங், இப்போது டிராஃபிக் கான்ஸ்டபிள். பஞ்சாப்பில் உள்ள சிறிய நகரத்தில் போக்குவரத்தை ஒழுங்குசெய்கிறார்.

கார்கில் போரில் பாகிஸ்தான் ராணுவத்தை வழிநடத்திய கேப்டன் உள்ளிட்ட 4 பேரை, பனி மலையின் உச்சியில் வீர தீரத்துடன் போரிட்டுக் கொன்ற சத்பால் சிங் என்ற முன்னாள் ராணுவ வீரர், இப்போது சாதாரண டிராஃபிக் கான்ஸ்டபிளாகப் போக்குவரத்தை ஒழுங்கு செய்துகொண்டிருக்கிறார்.

பஞ்சாப்பில், பவானிகர் என்ற சிறிய நகரம் உள்ளது. இந்த நகரத்தில்தான், சத்பால் சிங் டிராஃபிக் கான்ஸ்டபிளாகப் பணியாற்றுகிறார். அவரை உற்றுக் கவனித்தால், மார்பில் 'வீர் சக்ரா' விருது தொங்கிக்கொண்டிருக்கும். வீர் சக்ரா, இந்தியாவில் வீர தீரச்செயல்களுக்காக வழங்கப்படும் விருது.

சத்பால் சிங்
சத்பால் சிங்
photo : express

வீர் சக்ரா விருது, சத்பாலுக்கு சும்மா கிடைத்துவிடவில்லை. 1999- ம் ஆண்டு ஜூலை மாதத்தில், பாகிஸ்தான் ராணுவம் டைகர் ஹில் பகுதியைப் பிடித்தது. இந்திய ராணுவம் பதிலடிகொடுத்துக் கொண்டிருந்தது. அப்போது சத்பால் சிங், '8 சீக்கியர் குழுவில் இடம் பெற்றிருந்தார். இந்தக் குழுவும் பாகிஸ்தான் ராணுவத்தை எதிர்த்து கார்கில் பகுதியில் போரிட்டுக்கொண்டிருந்தது. பாகிஸ்தான் ராணுவத்துக்கு தலைமைதாங்கியவர், கேப்டன் கர்னார் ஷெர் கான்.

1999-ம் ஆண்டு ஜூலை மாதம், சத்பால் சிங் குழுவுக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்குமிடையே டைகர் ஹில் பகுதியில் போர் மூண்டது. இரு தரப்பிலும் ஏராளமானோர் காயமடைந்தனர். தக்க தருணத்துக்காகக் காத்திருந்த சத்பால் சிங், தன்னிடமிருந்த இயந்திரத் துப்பாக்கியால் கேப்டன் ஷெர் கான் மற்றும் அவரைச் சுற்றியிருந்த மேலும் 3 பேரை சுட்டுக் கொன்றார். கண் இமைக்கும் நேரத்தில் கேப்டன் சுட்டுக் கொல்லப்பட்டதால், பாகிஸ்தான் வீரர்கள் தடுமாறத் தொடங்கினர். முடிவு, இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தது.

சத்பால் சிங்கின் உயர் அதிகாரிகள் சிலரும் காயமடைந்து கீழே கிடந்தனர். அவர்களின் கண் எதிரிலேயே ஷெர் கானை சாதாரண சிப்பாய் சத்பால் சிங் கொன்றுவிட்டார்.

ஷெர் கான்
ஷெர் கான்

எனினும், பாகிஸ்தான் அரசு ஷெர் கானுக்கு 'நிஷான் இ ஹைதர் ' என்ற அந்த நாட்டின் உயரிய விருதை வழங்கி கௌரவித்தது. ஆனால், அவரைக் கொன்று இந்திய வெற்றிக்கு உதவிய சத்பால் சிங்குக்கு, 'வீர் சக்ரா' விருதுடன் இந்திய அரசு முடித்துக் கொண்டது. இத்தனைக்கும் சத்பால் சிங் குழுவின் தலைவரான பிரிகேடியர் எம்.பி.எஸ். பாஜ்வா, சத்பால் சிங்குக்கு 'பரம்வீர் சக்ரா' விருது வழங்க பரிந்துரைத்திருந்தார். ஆனால், அவருக்கு அந்த விருது வழங்கப்படவில்லை.

2009-ம் ஆண்டு, ராணுவத்தில் இருந்து விலகிய சத்பால் சிங், ராணுவ வீரர்கள் கோட்டாவில் பஞ்சாப் போலீஸில் இணைந்தார். தற்போது, ஹெட் கான்ஸ்டபிளாகப்பணியாற்றுகிறார். இந்திய அரசு அளித்த 'வீர் சக்ரா' விருது பஞ்சாப் போலீஸில் அவர் நல்ல பதவியில் அமர உதவவில்லை. மத்திய மாநில அரசுகள், சத்பால் சிங்கை நடத்தியவிதம் இந்த கார்கில் ஹீரோவை காயப்படுத்தாமல் இல்லை.

எனக்கு வழங்கப்பட்ட வீர் சக்ரா விருதால் எந்த நன்மையும் கிடைக்கவில்லை. பதக்கம் வெல்லும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு நல்ல ரேங்க் வழங்கப்படுகிறது. நல்ல பதவி கிடைக்கிறது. டைகர் ஹில்லில் பாகிஸ்தான் ராணுவத்தை வழி நடத்தியவரையே நான் சுட்டுக்கொன்றேன். என்னால் கொல்லப்பட்டவருக்கு அந்த நாடு உயரிய விருது அளித்து கௌரவித்துள்ளது. ஆனால், என் நிலைதான் பரிதாபமாக உள்ளது!
சத்பால் சிங்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனிடம் இருந்து வீர் சக்ரா விருது பெறுவது போன்ற புகைப்படம் சத்பால் சிங்கின் வீட்டில் தொங்கிக்கொண்டிருப்பது மட்டுமே, கார்கில் போரில் உயிரைக் கொடுத்து போராடியதற்காக அவருக்குக் கிடைத்த ஒரே ஆறுதல்.

இந்நிலையில், கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு சத்பால் சிங்கின் அவல நிலை பற்றி மீடியாக்களில் செய்தி வெளியாகி, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

'கார்கில் வெற்றி வெற்றி என்று கூவுகிறீர்கள். கார்கில் வெற்றிக்குக் காரணமாக இருந்த மனிதரை இப்படியா நடத்துவது?’ எனச் சமூக வலைதளங்களில் பஞ்சாப் அரசுக்கு எதிராகக் கேள்வி எழுப்பப்பட்டது.

இதையடுத்து, பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங், சத்பால் சிங்குக்கு உடனடியாக உதவி ஆய்வாளர் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக ட்வீட் செய்துள்ளார்.

`சத்பால் சிங் இந்தப் பதவிக்குத் தகுதியானவர். 2010-ம் ஆண்டு, அவர் பஞ்சாப் போலீஸில் சேர்ந்தபோது, ஆட்சியில் இருந்த அகாலி தள அரசு அவருக்குத் தகுதியான பதவியை அளிக்க தவறிவிட்டது’ என அம்ரீந்தர் சிங் ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு