கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் அச்சம் அடைந்திருக்கும் நிலையில், கேரள மாநிலத்தில் ராஜநாகம் ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து மக்களை அச்சம் அடைய வைத்தது. பல மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னரே ராஜநாகம் பிடிபட்டது.
எர்ணாகுளம் மாவட்டம் வட்டத்துப்பாரா என்ற இடத்தில் வசிப்பவர் கௌசல்யா. பள்ளியின் அருகில் உள்ள அவரது வீட்டின் காம்பவுண்டு சுவரில் ராஜநாகம் ஏறியுள்ளது. அங்கிருந்து குடியிருப்புக்குள் நுழைந்த பாம்பு, வளாகத்தில் இருந்த புளியமரத்தில் ஏறியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சுவர் மீது ஏறி ராஜநாகம் வந்ததையும் மரத்தில் ஏறியதையும் பார்த்து அலறிய கௌசல்யா உதவிக்கு ஆட்களைக் கூப்பிட்டார். பின்னர் வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. வனவர் தலைமையில் வந்த குழுவினர், உள்ளூர் மக்களின் உதவியுடன் ராஜநாகத்தைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோதிலும் பாம்பைப் பிடிக்க முடியவில்லை.

அதனால், கோதமங்கலம் தீயணைப்புப் படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் பாம்பு மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். ஆனால், தலையை உயர்த்தி படம் எடுத்து அச்சுறுத்திய பாம்பு, பின்னர் அசைந்து கொடுக்காமல் மரக்கிளையில் சுருண்டு கொண்டது.
ராஜநாகத்தைப் பிடிக்க முடியாமல் வனத்துறையினரும் தீயணைப்புப் படையினரும் திணறிய நிலையில், காப்ரிகாடு வனப்பாதுகாப்பு சிறப்புக் குழுவினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. வன அதிகாரி எஸ்.வி.சாபு தலைமையில் வந்த குழுவினர் பாம்பைப் பிடிக்க முயன்றனர். அதற்குள்ளாக இரவாகிவிட்டது.
அதனால் பாம்பைப் பிடிக்கும் முயற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மரத்தில் இருக்கும் பாம்பு கீழிறங்கி வீட்டுக்குள் நுழைந்துவிடுமோ என்ற அச்சத்தில் இரவு முழுவதும் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் இருந்தார்கள்.
பின்னர் விடிந்த பிறகு மீண்டும் ராஜநாகத்தைப் பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கினர். முடிவில், பாம்பு இருந்த மரக்கிளையை மின்சார ரம்பம் மூலம் அறுத்தனர். அதனால் அந்தக் கிளையானது பாம்புடன் கீழே விழுந்தது. அதன் பின்னர் அதைப் பிடிக்க முயன்றபோது ஆக்ரோஷமாக சீறியது.

வனத்துறையினர் திறமையாகச் செயல்பட்டு ராஜநாகத்தைப் பிடித்தார்கள். அது 13 அடி நீளமும் ஒன்பது கிலோ எடையும் கொண்டதாக இருந்தது. பின்னர் அந்த ராஜநாகத்தை வனத்துறையினர் அடர்ந்த காட்டுப் பகுதிக்குக் கொண்டு சென்றார்கள்.