Published:Updated:

`ககன்யான் திட்டத்தில் முழுக்கவனம் செலுத்திவருகிறோம்!' - `இஸ்ரோ' தலைவர் சிவன்

விக்ரம் லேண்டரிலிருந்து ஏன் தகவல்களைப் பெற முடியவில்லை என்பதை ஆய்வு செய்துவருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் பேசியுள்ளார்.

sivan
sivan

நிலவின் தென்முனையை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய `சந்திரயான் - 2' விண்கலம் ஜூலை 22-ம் தேதி வெற்றிகரமாக அனுப்பப்பட்டது. இதுவரை எந்த நாடும் நிலவின் தென் துருவத்துக்கு விண்கலத்தை அனுப்பியதில்லை என்பதால், மற்ற நாடுகளின் கவனம் `சந்திரயான் -2' மீது விழுந்தது. பூமியின் சுற்றுவட்டப்பாதையிலிருந்து விலகி ஆகஸ்ட் 14-ம் தேதி நிலவை நோக்கிப் பயணமானது.

`ககன்யான் திட்டத்தில் முழுக்கவனம் செலுத்திவருகிறோம்!' - `இஸ்ரோ' தலைவர் சிவன்

சுமார் 3.84 லட்சம் கிலோமீட்டர் எந்தச் சிக்கலுமின்றிப் பயணித்த `சந்திரயான் - 2' ஆர்பிட்டரிலிருந்து விக்ரம் லேண்டர் தனியாகப் பிரிந்து நிலவின் தரைப்பகுதியை நோக்கிப் பயணமானது. கடைசி 2.1 கிலோமீட்டர், தூரத்தைக் கடப்பதற்கு முன் சிக்னல் அனுப்பத் தவறியது. விக்ரம் லேண்டரிலிருந்து வெளிவரும் `பிரக்யான் ரோவர்’ நிலவில் 14 நாள்கள் ஆய்வு செய்வதாக இருந்தது. விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளும், அமெரிக்காவின் நாசாவும் தொடர்ந்து முயன்று வந்தன. ஆனால், அந்த முயற்சி பலனளிக்கவில்லை. விக்ரம் லேண்டரின் ஆயுள்காலம் நேற்றுடன் முடிவடைந்தது.

இந்த நிலையில், புவனேஷ்வரில் இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியவர், ``விக்ரம் லேண்டருக்கு உண்மையில் என்ன நடந்தது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதுதான், இப்போது எங்கள் முதல் முன்னுரிமை. அறிவியல் ஆய்வில் முழுமையான மனநிறைவு அடையும்வரை ஆர்பிட்டர் தொடர்ந்து இயங்கும். 8 கருவிகள் ஆர்பிட்டரில் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு கருவியும் எதற்காக வடிவமைக்கப்பட்டதோ அந்தப் பணிகளைச் சிறப்பாக செய்துவருகின்றன.

Sivan
Sivan

அறிவியல் ரீதியிலாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக ஆர்பிட்டர் அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு இயங்குமாறு திட்டமிடப்பட்டுள்ளது. விக்ரம் லேண்டரிலிருந்து ஏன் தகவல்களைப் பெற முடியவில்லை என்பதை ஆய்வு செய்துவருகிறோம். ககன்யான் திட்டத்தில் தற்போது இஸ்ரோ கவனம் செலுத்திவருகிறது. அடுத்த ஆண்டுக்குள் ஆளில்லா விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம். 2021-ம் ஆண்டு இந்திய ராக்கெட்டின் மூலம் மனிதன் நிலவுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளோம்'' என்றார்.