Published:Updated:

இதய அறுவைசிகிச்சை... பாகிஸ்தான் சிறுமிக்கு விசா - கம்பீருக்கு குவியும் பாராட்டு!

இதய அறுவைசிகிச்சைக்காக இந்தியா வரவுள்ள பாகிஸ்தான் சிறுமியின் விசா நடைமுறைக்காக உதவிய கம்பீருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

கம்பீர்
கம்பீர்

முன்னாள் கிரிக்கெட் வீரரும் பா.ஜ.க எம்.பி-யுமான கெளதம் கம்பீர் பாகிஸ்தான் சிறுமி இந்தியாவில் சிகிச்சை பெறுவதற்கு உதவியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கம்பீர் ஓய்வு பெற்ற பின்னர், புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்தார். சமூக செயல்பாட்டிலும் அதிக அக்கறை எடுத்துக்கொண்டார். டெல்லியில், திருநங்கைகளால் கொண்டாடப்படும் ஹிஜ்ரா ஹப்பா விழாவில் பங்கேற்க, கம்பீருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்களின் அழைப்பை ஏற்று காம்பீர் விழாவில் பங்கேற்றார். திருநங்கைகளின் வாழ்க்கை குறித்தும் பேசினார். இந்திய ராணுவத்தில் பணியாற்றி உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதற்காக அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார்.

கம்பீர்
கம்பீர்

இந்தாண்டு மக்களவை தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட கம்பீர் எம்.பி-யாகிவிட்டார். இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த சிறுமியின் குடும்பத்தினர் இதய அறுவைசிகிச்சைக்காக கம்பீரிடம் உதவி கேட்டுள்ளனர். மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் மருத்துவச் செலவு குறைவு என்பதால் வெளிநாட்டவர்களின் தேர்வாக இந்தியா இருக்கிறது. அந்தச் சிறுமியின் விசா நடைமுறை தொடர்பாக கம்பீரிடம் உதவி கேட்கப்பட்டது. இதையடுத்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கருக்குக் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்தார்.

கம்பீரின் கடிதம் கிடைக்கப்பெற்றதையடுத்து அந்தச் சிறுமிக்கு விசா வழங்க மத்திய அரசு அனுமதித்துள்ளது. கம்பீருக்கு கடிதம் வாயிலாக இதனை தெரியப்படுத்தியுள்ளனர். அந்தக் கடிதத்தில், சிகிச்சைக்காக சிறுமி மற்றும் அவரின் பெற்றோர் இந்தியா வருவதற்கான விசா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதய அறுவைசிகிச்சை... பாகிஸ்தான் சிறுமிக்கு விசா - கம்பீருக்கு குவியும் பாராட்டு!

இந்தக் கடிதத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ள கம்பீர், இதய அறுவை சிகிச்சைகாக இந்தியா வரும் சிறுமிக்கு விசா வழங்கியதற்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் நன்றி எனப் பதிவிட்டுள்ளார். காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் வீரர்களுக்கும் அமைச்சர்களுக்கும் காரசாரமாகப் பதிலளித்து வருகிறார். இந்நிலையில் சிறுமியின் விசாவுக்காக கம்பீர் எடுத்த முயற்சியைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.