Published:Updated:

`திருடப்பட்ட அஸ்தி; தேசத் துரோகி வாசகம்’ - காந்தி பிறந்த நாளில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள காந்தி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த காந்தியின் அஸ்தி சில மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது.

இந்தியாவின் தேசத் தந்தை எனப் போற்றப்படும் மகாத்மா காந்தி, கடந்த 1948-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ம் தேதி, நாதுராம் கோட்சேவால் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். காந்தி இறந்த பிறகு அவரது உடல் எரியூட்டப்பட்டு அவரின் அஸ்தி இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு காந்தி நினைவிடங்களுக்கு அனுப்பப்பட்டது.

Mahatma Gandhi
Mahatma Gandhi

அப்படி, மத்தியப்பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் உள்ள `பாபு பவன்’ என்ற காந்தி அருங்காட்சியகத்திலும் அவரின் அஸ்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2-ம் தேதி காந்தியின் 151-வது பிறந்தநாள் விழா இந்தியா முழுவதும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அதே நாளில் ரேவா அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியின் அஸ்தி திருடுபோயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு #GandhiJayanti

அங்கிருந்த அஸ்தியைத் திருடிய சில மர்ம நபர்கள், காந்தியின் புகைப்படத்துக்குக் கீழே `தேசத் துரோகி’ எனப் பச்சை மையால் எழுதிவிட்டுச் சென்றுள்ளனர். ரேவா மாவட்டத்தின் காங்கிரஸ் தலைவர் குர்மீத் சிங் நேற்று முன் தினம் தன் தொண்டர்களுடன் காந்தி அருங்காட்சியகத்துக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த காந்தியின் அஸ்தி திருடு போயுள்ளதைப் பார்த்து அதிர்ந்துள்ளார்.

rewa museum
rewa museum
Twitter/@kashifkakvi

பின்னர் இது தொடர்பாக குர்மீத் சிங் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரை ஏற்ற காவல்துறையினர், சட்டப் பிரிவு 295-ன் (புனித தளத்தை அவமதித்தல்) கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தச் சம்பவம் பற்றி பேசிய ரேவா மாவட்டத்தின் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சிவ்குமார் வர்மா, ``பாபு பவனில் உள்ள காந்தியின் அஸ்தி திருடப்பட்டுள்ளதாக ரேவா மாவட்ட காங்கிரஸ் தலைவர் புகார் அளித்தார். அதன் பேரில் நாங்கள் வழக்கு பதிவு செய்துள்ளோம். அருங்காட்சியகத்தில் இருக்கும் சிசிடிவி கேமராக்களின் உதவியுடன் அஸ்தியைத் திருடியவர்களைக் கண்டுபிடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

திருட்டு தொடர்பாகப் புகார் அளித்த குர்மீத் சிங் பேசும்போது, `` காந்தியின் சித்தாந்தம் மீண்டும் இழிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டவிரோதச் செயலை, காந்தியைக் கொலை செய்த கோட்சேவின் ஆதரவாளர்களே செய்திருக்க வேண்டும். இது போன்ற செயல்கள் முற்றிலும் நிறுத்தப்படவேண்டும்” எனக் கூறியுள்ளார்.

rewa museum
rewa museum
ANI

காந்தி அஸ்தி திருடப்பட்டதற்கு பல அரசியல் தலைவர்கள் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இது பற்றி ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், ``எம் காந்தியின் திருநீற்றை களவுற்ற பக்தர்கள் உம் நெத்தியில் பூசிடவைத்த அச்சாம்பலை ஏற்றதில் மகிழ்கிறோம். இன்னமும் உளது நீர் சுட்டதின் பிணக்குவியல் கூடிடக்கூடிட உம்பக்தியின் அடிநாதம் காந்தியின் சாம்பலுடன் கைலாயமெய்தவே கணக்கிலா இந்தியர்கள் வழிகோலுகின்றோம் வாழ்த்துடன்கூடியே” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு