Published:Updated:

விநாயகர் சதுர்த்தி விழா ஆரம்பம்: மும்பையில் ஊர்வலம், நேரடி தரிசனத்தைத் தடுக்க 144 தடை உத்தரவு அமல்

 கணபதி சிலை
கணபதி சிலை

மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. விழாவில் விநாயகரை நேரில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு நகரில் போலீஸார் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

மும்பையில் ஒவ்வோர் ஆண்டும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழா, கொரோனா தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளாக களையிழந்து காணப்படுகிறது. நடப்பு ஆண்டில் விநாயகர் சதுர்த்தி விழாவைக் கட்டுப்பாடுகளுடன் கொண்டாட மாநில அரசு அனுமதித்துள்ளது. ஆரம்பத்தில் விநாயகர் ஊர்வலத்துக்கு மும்பை மாநகராட்சி நிர்வாகம் தடைவிதித்தது. அதோடு, கணபதி மண்டல்களில் சென்று பக்தர்கள் தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டது. தற்போது புதிதாக மும்பை போலீஸார் மும்பை முழுக்க 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

கணபதி சிலை
கணபதி சிலை

இதன்படி மும்பையில், வரும் 19-ம் தேதி வரை ஐந்து பேருக்கு மேல் ஓரிடத்தில் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. விநாயகர் ஊர்வலத்துக்கும், கணபதி மண்டல்களில் சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டிருப்பதாக போலீஸார் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மும்பை போலீஸ் செய்தித் தொடர்பாளர் சைதன்யா வெளியிட்டிருக்கும் அந்த அறிக்கையில், மாநில உள்துறை அமைச்சகம், மாநகராட்சி நிர்வாகம் பிறப்பித்திருக்கும் உத்தரவை சுட்டிக்காட்டி மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். மக்கள், விநாயகரை ஆன்லைன் மூலமாகவோ அல்லது சமூக வலைதளம் மூலமாகவோ தரிசனம் செய்யலாம் என்றும், உத்தரவை மீறி ஐந்து பேருக்கு மேல் கூடினால் 188-வது சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

விநாயகர் சதுர்த்தி பூஜை | எளிமையாகச் செய்வது எப்படி? | How to Worship on Vinayagar Chathurthi

மாநில உள்துறை அமைச்சகமும் இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், பக்தர்கள் கணபதி மண்டல்களுக்குச் சென்று தரிசனம் செய்ய தடைவிதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டிருக்கிறது. மாநகராட்சி, மும்பை போலீஸார், மாநில அரசுகளின் உத்தரவால் இந்த ஆண்டும் மக்கள் வழக்கமான உற்சாகத்துடன் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பக்தர்கள் வியாழக்கிழமை மாலையில் இருந்தே விநாயகர் சிலைகளைத் தங்களது மண்டல்கள் மற்றும் வீடுகளுக்கு எடுத்து செல்ல ஆரம்பித்தனர்.

விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி

பக்தர்கள் சிலைகளைக் கரைக்கவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. வழக்கமாக, வரலாற்று நிகழ்வுகளை மையமாகவைத்து விநாயகர் மண்டல்கள் அமைக்கப்படுவது வழக்கம். ஆனால் அரசின் கட்டுப்பாடு காரணமாக பெரும்பாலான கணபதி மண்டல்கள் சிறிய அளவில் விழாவைக் கொண்டாட முடிவு செய்திருக்கின்றன. சுதந்திரப் போராட்டத்தின்போது மக்களை ஒன்று சேர்க்க, லோக்மான்ய திலகர் கணபதி விழாவை அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாடும் முறையை 1800-களின் இறுதியில் அறிமுகம் செய்தார். அந்தப் பண்டிகை நாளடைவில் பிரபலமடைந்து ஒவ்வோர் ஆண்டும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி: எகிப்து, காபூல், சீனா - உமை மைந்தனை உலகெங்கும் எப்படியெல்லாம் கொண்டாடுகிறார்கள்?
அடுத்த கட்டுரைக்கு