Published:Updated:

India-China FaceOff: `சீனா 40-க்கும் மேற்பட்ட வீரர்களை இழந்திருக்கும்!’ - ஜெனரல் வி.கே.சிங்

வி.கே.சிங்
வி.கே.சிங்

கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் சீனா 40-க்கும் மேற்பட்ட வீரர்களை இழந்திருக்கும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணையமைச்சரும் இந்திய ராணுவத்தின் முன்னாள் தளபதியுமான ஜெனரல் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இருநாட்டு வீரர்கள் இடையே ஏற்பட்ட கைகலப்பில் இந்திய ராணுவத்தின் கர்னல் சந்தோஷ் பாபு, தமிழகத்தின் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஹவில்தார் பழனி உள்ளிட்ட 20 பேர் வீரமரணமடைந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அதேநேரம் சீனா தரப்பிலும் வீரர்கள் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது. சீனா தரப்பில் அதிகாரபூர்வமாகக் காயமடைந்தவர்கள் பற்றியோ இறந்தவர்கள் பற்றியோ தகவல் வெளியிடப்படவில்லை. ஆனால், சீன ராணுவ வீரர்கள் 45 பேர் வரை படுகாயமடைந்திருக்கலாம் அல்லது உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியானது. சீன வீரர்கள் தொடர்பாக இந்தியா தரப்பிலும் எந்தவொரு தகவலும் உறுதிசெய்யப்படாமல் இருந்தது.

கல்வான் பள்ளத்தாக்கு
கல்வான் பள்ளத்தாக்கு
AP

இந்தநிலையில், சீனா, 40-க்கும் மேற்பட்ட வீரர்களை இழந்திருக்கிறது என மத்திய அமைச்சரும் இந்திய ராணுவ முன்னாள் தளபதியுமான ஜெனரல் வி.கே.சிங் தெரிவித்திருக்கிறார். சீன வீரர்கள் இறப்பு தொடர்பாக இந்தியா தரப்பில் முதல்முறையாகக் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய அவர், ``நாம் 20 வீரர்களை இழந்திருக்கிறோம் என்றால், அவர்கள் (சீனா) தரப்பில் அதைவிட இரு மடங்கு வீரர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள்’’ என்றார். மேலும், ``சீனா எண்ணிக்கையை மறைக்கிறது. 1962-ம் ஆண்டு போரில்கூட இறந்தவர்கள் தொடர்பான தகவல்களை அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை’’ என்றார்.

இதுதொடர்பாக ஹிந்துஸ்டான் டைம்ஸ் ஊடகத்திடம் பேசியிருக்கும் அவர், ``1962-ம் ஆண்டு போரின்போது இழப்புகள் குறித்து பேசுவதை அவர்கள் தவிர்த்தார்கள். 2000-ம் ஆண்டுவாக்கில் நாங்கள் சில நூறு வீரர்களை இழந்தோம் என்று அவர்கள் கூறினார்கள். ஆனால், போரில் ஈடுபட்டவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் சீனா, எவ்வளவு வீரர்களை இழந்தது என்பது. கவனத்தைத் திசைதிருப்புவதில் அவர்கள் கவனம் செலுத்துகிறார்கள். ஏனென்றால் அரசுக்கு எதிரான மனநிலை உருவாவதை அவர்கள் விரும்புவதில்லை.

கல்வான் பள்ளத்தாக்கு
கல்வான் பள்ளத்தாக்கு
`ஆணியடிக்கப்பட்ட இரும்புக் கம்பிகளால் தாக்குதல்?’- சீனாவுக்கு வலுக்கும் கண்டனம்

உயிரிழந்தவர்களை வெளியில் தெரியாமல் அடக்கம் செய்வார்கள் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். தொடக்கத்தில் சீனா 43 வீரர்களை இழந்திருக்கலாம் என்று பேசப்பட்டது. ஊடகங்களில் இதுகுறித்து தகவல் வெளியானது. குறிப்பிட்ட அந்த எண்ணிக்கை என்பது வீரர்கள் தரப்பில் கொடுக்கப்பட்ட தகவலை வைத்தே முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதுவும், மிகவும் குறைந்த அளவே அது. நிச்சயம் சீனா தரப்பில் உயிரிழப்புகள் அதைவிட அதிகமாக இருந்திருக்கும்.

அடுத்த கட்டுரைக்கு