Published:Updated:

நீரஜ் சோப்ராவின் தங்கம் வென்ற ஒலிம்பிக் ஈட்டியை ஏலம்விடும் மோடி... காரணம் என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நீரஜ் சோப்ரா ஈட்டியுடன் மோடி
நீரஜ் சோப்ரா ஈட்டியுடன் மோடி

ஒலிம்பிக், பாராலிம்பிக் வீரர்கள் பரிசாகத் தந்த அனைத்துப் பொருள்களுமே ஏலம் விடப்படுகின்றன. ஏலத்தில் அதிக விலை வைக்கப்பட்டுள்ளவை இவைதான்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, சமீப மாதங்களில் அவர் வாங்கிய பரிசுகள் மற்றும் நினைவுப் பொருள்கள் ஏலம் விடப்படுகின்றன. இந்த ஏலத்தில் கிடைக்கும் பணம் முழுக்க, கங்கையைத் தூய்மைப்படுத்தும் 'நமாமி கங்கா' திட்டத்துக்குத் தரப்படும்.

மத்திய கலாசார அமைச்சகம் இந்த ஏலத்தை நடத்துகிறது. கொரோனா காலம் என்பதால் இணையவழியில் மட்டும் ஏலம் நடைபெறும். http://pmmementos.gov.in என்ற இணையதளத்தில் இந்த ஏலம் நடைபெறும். அதிகபட்சமாக ஒரு கோடி ரூபாயிலிருந்து குறைந்தபட்சம் 200 ரூபாய் வரை ஏராளமான பொருள்கள் உள்ளன. செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 7-ம் தேதி வரை ஏலம் நடைபெறும். இந்தக் காலத்துக்குள் யார் அதிக தொகைக்கு ஏலம் கேட்கிறாரோ, அவருக்கு அந்தப் பொருள் ஏலம் விடப்படும்.

நீரஜ் சோப்ரா ஈட்டி
நீரஜ் சோப்ரா ஈட்டி

இந்த ஏலத்தில் சுவாரஸ்யமான பல பரிசுகள் விற்பனைக்குக் காத்திருக்கின்றன. டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற ஒரே ஒரு தங்கப் பதக்கம், நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் பெற்றது. தங்கம் வென்று கொடுத்த அந்த ஈட்டியில் ஆட்டோகிராப் போட்டு, மோடிக்கு அதைப் பரிசாகக் கொடுத்திருந்தார் நீரஜ். ஏலத்தில் அதற்கு ஒரு கோடி ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல பாராலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற சுமித் அன்ட்டில், தன் ஈட்டியில் கையெழுத்து போட்டு மோடிக்குப் பரிசளித்தார். அதற்கு ஒரு கோடி ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மோடி - பி.வி.சிந்து
மோடி - பி.வி.சிந்து

ஒலிம்பிக் பேட்மின்டனில் பி.வி.சிந்து வெண்கலம் வென்றார். அந்தப் போட்டியில் தான் பயன்படுத்திய பேட்மின்டன் ரேக்கெட் மற்றும் அதன் பை ஆகியவற்றில் ஆட்டோகிராப் போட்டு மோடிக்கு நினைவுப் பரிசாகக் கொடுத்தார். அவை 80 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதேபோல பாராலிம்பிக் பேட்மின்டன் போட்டியில் தங்கம் வென்ற கிருஷ்ணா நாகரின் ஆட்டோகிராப் போட்ட ரேக்கெட்டும் 80 லட்சம் விலையுடன் ஏலத்தில் பங்கேற்கிறது.

கிருஷ்ணா நாகரின் ஆட்டோகிராப் போட்ட ரேக்கெட்
கிருஷ்ணா நாகரின் ஆட்டோகிராப் போட்ட ரேக்கெட்
மோடி பிறந்தநாள்: தனது 20 ஆண்டுக்கால அரசியல் வாழ்வில் சந்தித்த, சறுக்கிய, சாதித்த இடங்கள்?

ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய ஆண்கள் அணி நீண்ட இடைவெளிக்குப் பிறகு பதக்கம் வென்றது. இந்த அணியில் இருந்த எல்லோரும் ஆட்டோகிராப் போட்ட ஹாக்கி ஸ்டிக்குக்கு 80 லட்ச ரூபாய் விலை. இந்திய பெண்கள் ஹாக்கி அணி பதக்கம் வெல்லாமல் நான்காவது இடம் பிடித்தாலும், போராட்ட உணர்வை வெளிப்படுத்தியது. அவர்களின் ஆட்டோகிராப் உள்ள ஹாக்கி ஸ்டிக்குக்கும் 80 லட்ச ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா பயன்படுத்திய கிளவுஸ்களும் மோடிக்குப் பரிசாக அளிக்கப்பட்டன. ஏலத்தில் அவற்றின் விலை 80 லட்ச ரூபாய்.

இப்படி ஒலிம்பிக், பாராலிம்பிக் வீரர்கள் பரிசாகத் தந்த அனைத்துப் பொருள்களுமே ஏலம் விடப்படுகின்றன. ஏலத்தில் அதிக விலை வைக்கப்பட்டுள்ளவை இவைதான்.

இந்த விளையாட்டுப் பொருள்கள் தவிரவும் ஏராளமான பரிசுகள் ஏலம் விடப்படுகின்றன. உத்தரகாண்டில் இருக்கும் கேதார்நாத் புனிதத் தலத்தின் மினியேச்சர் மாடலை மோடிக்குப் பரிசளித்தார், அம்மாநில அமைச்சர் ஒருவர். அதற்கு ஏலத்தில் 10 லட்ச ரூபாய் விலை வைக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்காளத்தில் தேர்தல் பிரசாரத்துக்குப் போன மோடிக்கு வெற்றி கிடைக்காவிட்டாலும், நிறைய பரிசுகள் கிடைத்தன. திருப்பதி வெங்கடாசலபதி சிலை ஒன்றை ஃபிரேம் செய்து பா.ஜ.க-வினர் மோடிக்குக் கொடுத்தனர். அழகிய அந்த சிலைக்கு ஐந்து லட்ச ரூபாய் விலை.

டொனால்ட் ட்ரம்ப்பும் மோடியும் கைகுலுக்கும் காட்சியை அழகிய ஓவியமாக வரைந்து மோடிக்குப் பரிசளித்தார் ஐதராபாத் ஓவியர் ஒருவர். அதற்கு மூன்றரை லட்சம் ரூபாய் விலை. மோடியை பலரும் பலவிதமாக வரைந்த ஓவியங்கள் அனைத்துமே ஏலம் விடப்படுகின்றன. இவற்றில் மோடி தன் அம்மாவுடன் இருக்கும் ஓவியங்கள் நிறைய உள்ளன. அழகிய கலப்பை ஒன்றும் ஏலம் விடப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருச்சி - ஊறும் வரலாறு 10:  `துறவியின் திராவிட மாளிகை' - திருச்சி பெரியார் மாளிகைக்கு ஒரு விசிட்!
இப்படிப் பல பரிசுகளின் விலை லட்சங்களில் இருக்க, மரியாதை நிமித்தமாகத் தரப்படும் சால்வை, அங்கவஸ்திரம், பா.ஜ.க கரை போட்ட துண்டுகள் போன்றவை ஆயிரம் ரூபாய்க்குக் குறைவாக ஏலம் விடப்படுகின்றன.

ஏலத்தில் மிகக் குறைவாக 200 ரூபாய்க்கும் பொருள்கள் இருக்கின்றன. ஃபிரேம் போட்ட உடுப்பி கிருஷ்ணர் ஓவியம், விநாயகர் உருவம் அச்சிட்ட கீ ஹோல்டர் போன்றவை 200 ரூபாய் ஏல விலை வைக்கப்பட்டுள்ளன. யாராவது போட்டி போட்டு விலையை ஏற்றிவிட்டால்தான் உண்டு.

தனக்குப் பரிசாக வந்த பொருட்களில் புத்தகங்களை மட்டும் ஏலம் விடவில்லை மோடி.

கடந்த 2019-ம் ஆண்டிலும் இதேபோல மோடிக்கு வந்த 2,772 பரிசுப் பொருள்கள் ஏலம் விடப்பட்டன. அவற்றில் 1,800 பொருட்கள் நல்ல விலைக்குப் போயின. அந்த ஏலத்தொகை முழுக்க கங்கையைத் தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கே தரப்பட்டது.

பிரதமர், ஜனாதிபதி, அமைச்சர்கள் ஆகியோர் பரிசுப்பொருள்கள் வாங்குவது தொடர்பாக கடுமையான விதிகள் உள்ளன. வெளிநாட்டுப் பயணங்களிலும், வெளிநாட்டுத் தலைவர்கள் இந்தியா வரும்போதும் தரும் பரிசுகளை மட்டுமே வாங்க வேண்டும். இந்தியர்கள் தருவதில் நினைவுப்பரிசுகள் தவிர வேறு விலை உயர்ந்த பொருள்கள் எதையும் வாங்கக்கூடாது.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியா வந்தபோது மோடி அணிந்த 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள கோட் பற்றி பெரும் விமர்சனம் எழுந்தது. வெளிநாடு வாழ் குஜராத் தொழிலதிபர் ஒருவர் அதை மோடிக்குப் பரிசாக அளித்திருந்தார். 'இந்தப் பரிசை பிரதமர் வாங்கியது சட்ட மீறல்' என்று சர்ச்சைகள் எழுந்தன. உடனே அந்த கோட்டை ஏலம்விட்டார் மோடி. அதை சூரத் தொழிலதிபர் ஒருவர் ஒரு கோடியே 21 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். இந்த ஏலத்துக்கு மோடி முறைப்படி அனுமதி வாங்கினாரா என்ற சர்ச்சையும் எழுந்து பின்னர் அமுங்கிப் போனது.

பிரதமர், அமைச்சர்கள் போன்றவர்கள் பெறும் பரிசுகளில் 5,000 ரூபாய்க்கு மேல் மதிப்புள்ளவற்றை அரசு கஜானாவுக்குக் கொடுத்துவிட வேண்டும் என்பது விதி. அவை அருங்காட்சியகத்தில் வைக்கப்படும்.

இப்படி அருங்காட்சியகத்தில் சேகரித்து வைக்கப்பட்ட பரிசுகளையே பிரதமர் மோடியின் உத்தரவுப்படி இப்போது ஏலம் விடுகிறார்கள்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு