Published:Updated:

`வெளியே சென்று தும்முவோம்.. வைரஸை பரப்புவோம்!’ - சர்ச்சைப் பதிவால் கைதான பெங்களூரு இளைஞர் #Corona

கொரோனா
கொரோனா

``எங்களது ஊழியரின் முகநூல் பதிவானது இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நன்நடத்தைக்கு எதிராகவும் சமூக பொறுப்புக்கு எதிராகவும் உள்ளது. இந்த மாதிரியான விஷயங்களில் எங்கள் நிறுவனமானது சகிப்புத்தன்மையுடன் செயல்படாது” - இன்ஃபோசிஸ்

உலக அளவில் பரவி வரும் கொரோனா வைரஸ் மக்களிடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸால் இதுவரை 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 28,000-க்கும் அதிகமானவரகள் இறந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவிலும் 900-க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். எளிதாக பரவக்கூடிய இந்த கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும், மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தொடர்ந்து விழிப்புணர்வுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பெங்களூரைச் சேர்ந்த இன்ஃபோசிஸ் ஊழியர் ஒருவர் `எல்லோரும் வெளியே சென்று தும்ம வேண்டும்’ என்று கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் உள்ள இன்ஃபோஸிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார், முஜீப் முகமது. 25 வயதான இவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், ``வீடுகளை விட்டு வெளியே சென்று, பொது இடங்களில் நின்று முகங்களை மூடாமல் தும்முங்கள். கொரோனா வைரஸைப் பரப்புங்கள்” என்று பதிவிட்டுள்ளார். மக்கள் வீட்டைவிட்டு வெளியேறக்கூடாது என அரசாங்கம் வலியுறுத்திக் கொண்டிருக்கும் வேளையில் முகநூலில் இப்படியான பதிவை எழுதியதற்காக, அவரை பெங்களூரு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது தொடர்பாக காவல்துறை இணை ஆணையர் சந்தீப் பட்டீல் பேசும்போது, ``பொதுமக்கள், தங்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்றும் வைரஸை பரப்ப வேண்டும் என்றும் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்ட இளைஞரை கைது செய்துள்ளோம். முஜீப் என்ற இந்த இளைஞர் மென்பொறியியல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறோம்”என்று கூறியுள்ளார்.

இந்த செய்தியை அறிந்த பிரபல இன்ஃபோசிஸ் நிறுவனமானது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``எங்களது ஊழியரின் முகநூல் பதிவானது இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நன்நடத்தைக்கு எதிராகவும் சமூக பொறுப்புக்கு எதிராகவும் உள்ளது. இந்த மாதிரியான விஷயங்களில் எங்கள் நிறுவனமானது சகிப்புத்தன்மையுடன் செயல்படாது. எனவே, அவரை பணிநீக்கம் செய்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.

சமூக வலைதளங்களிலும் இந்த இளைஞரை விமர்சித்து பதிவுகள் வரத்தொடங்கின. அரசாங்கம் கொரோனா வைரஸ் தொடர்பான முறையற்ற தகவல்களைப் பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டும் என எச்சரிக்கை விடுத்ததும் கவனிக்கத்தக்கது. கர்நாடகாவில் இதுவரை 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

`மருத்துவருக்கு பாசிட்டிவ்; தனிமைப்படுத்தப்பட்ட 8 பேர்’ - அமேசான் பழங்குடிகளையும் துரத்தும் கொரோனா?
அடுத்த கட்டுரைக்கு