Published:Updated:

`கோத்ரா கலவரத்தின் முகங்கள்!' - இப்போது எப்படி இருக்கிறார்கள் தெரியுமா?

ராம் பிரசாத்

`அது என் கோபத்தின் வெளிப்பாடுதான். ஆனால், அது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது' என்கிறார், அசோக் பர்மர்.

 Ashok Parmar and Qutbuddin Ansari
Ashok Parmar and Qutbuddin Ansari

கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ம் தேதி, அயோத்தியிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த சபர்மதி ரயில், கோத்ரா ரயில்நிலையம் அருகே தீவைத்துக் கொளுத்தப்பட்டது. அதில், ரயிலில் பயணித்த 57 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து, குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கலவரம் வெடித்தது. ஏறக்குறைய மூன்று மாதங்கள் நீடித்த அந்த கலவரத்தில் பலர் கொல்லப்பட்டனர். அந்தச் சம்பவம், இந்திய வரலாற்றின் கறுப்புப் பக்கம் என்று வர்ணிக்கப்படுகிறது.

 Ashok Parmar and Qutbuddin Ansari
Ashok Parmar and Qutbuddin Ansari

கடந்த 2002ல் அகமதாபாத் நகரில், இப்படியான சூழலில்தான் அசோக் பர்மர் மற்றும் குத்புதீன் அன்சார் சிக்கித்தவித்தனர். ஒரு புகைப்படம், கோத்ரா கலவரத்தின் முகத்தை உலகுக்கு அப்பட்டமாகக் காட்டியது. கண்களில் நிறைந்த கண்ணீருடன் கலவரக்காரர்களிடம் இரு கரங்களையும் கூப்பி, அச்சத்துடன் நிற்கும் ஒருவர்; கைகளில் இரும்புக்கம்பி, முகத்தில் கோபத்துடன் கத்தும் இளைஞரின் இன்னொரு புகைப்படம். இந்திய நாளிதழ்களின் தலையங்கத்தை இந்தப் புகைப்படங்கள் ஆக்கிரமித்தன. கலவரத்தின் தீவிரத்தை மக்களுக்கு விளக்க இந்தப் படங்களே போதுமானதாக இருந்தது.

Vikatan

அசோக் பர்மர் மற்றும் குத்புதீன் அன்சாரின் புகைப்படங்கள் கோத்ரா கலவரத்தின் முகமாகப் பதிவாகின. இந்த முகங்கள் தற்போது மீண்டும் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன. கோத்ரா கலவரம் நடந்து 17 வருடங்கள் கடந்துவிட்டன. இந்த இரு முகங்களும் தற்போது, ஒற்றுமையின் அங்கமாக மாறியுள்ளன. அசோக் பர்மர் டெல்லியின் தர்வஜா பகுதியில் செப்டம்பர் 6-ம் தேதி சொந்தமாக காலணி கடையைத் திறந்துள்ளார். இந்தக் கடையின் திறப்புவிழாவில், சிறப்பு விருந்தினராக குத்புதீன் அன்சாரின் கலந்துகொண்டார். அந்த காலணிக் கடைக்கு இந்தியில் ``Ekta Chappal Ghar” எனப் பெயரிட்டுள்ளனர். ஒற்றுமை காலணிக் கடை என்பதே இதன் பொருளாகும்.

Ashok Parmar and Qutbuddin Ansari
Ashok Parmar and Qutbuddin Ansari
Vikatan

வறுமை அசோக்கின் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியது. பத்தாம் வகுப்பு படிக்கும்போது அதை நிறுத்திவிட்டு, அப்பாவுக்கு உதவி செய்ய வேலைக்குச் சென்றுவிட்டார். கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வந்தவர், செருப்பு தைக்கும் தொழிலாளியாகத் தனது வாழ்க்கையை நகர்த்திவந்தார். கலவரத்தை நினைவுகூர்ந்து ஆங்கில ஊடத்தில் பேசிய அசோக், ''அந்த நாள்கள் சரியாக நினைவில் இருக்கிறது. பிப்ரவரி 28, 2002ல் இந்து மக்கள் ஒரு கூட்டமாக என்னை நோக்கி வந்தனர். அவர்கள் என்னை மாற்று மதத்தைச் சேர்ந்தவர் என்று கருதி தாக்கத் தொடங்கினர். நான் நடைபாதையில்தான் நாள்களைக் கழித்துவந்தேன். என்னுடன் அந்தத் தெருக்களில் தங்கியிருந்த சிலர், அந்தக் கும்பலிடம் இருந்து என்னை மீட்டனர். அவர்கள்தான் என் தலையில் ஆரஞ்சு நிறத்திலான துணியைக் கட்டினர். ஒரு புகைப்படக்காரர் என்னைப் படமெடுத்தார். நான் இந்துகளின் முகமாக மாறினேன். அது என் கோபத்தின் வெளிப்பாடுதான். ஆனால், அது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டது. நான் ஒரு தினக்கூலி. ஒரு கும்பலால் தாக்கப்பட்டேன். என் வாழ்வாதாரமே போனதே என்ற கோபம்தான் அது” என்று பேசியுள்ளார்.

இந்த இருவரும் 2012-ம் ஆண்டு, கேரளாவில் ஒருவரை ஒருவர் சந்திக்கின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சித்திக் என்பவரால் இந்த சந்திப்பு நடக்கிறது. இருவரும் நண்பர்களாகப் பழகத் தொடங்கினர். கோத்ரா கலவரத்துக்குப் பின்னர், மேற்குவங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் முகமது சலீம் உதவியால் அன்சாரி குடும்பத்துடன் கொல்கத்தா செல்கிறார். சிறிது காலம் அங்கு இருந்துவிட்டு மீண்டும் அகமதாபாத் திரும்பிவிட்டனர். அன்சார், தனது குடும்பத்துடன் டெய்லராக அகமதாபாத்தில் வசித்துவருகிறார். 2012ல் நடந்த சந்திப்புக்குப் பின் இருவரும் தொடர்பில் இருந்துவந்துள்ளனர்.

Vikatan
‘Ekta Chappal Ghar’ Ashok shop
‘Ekta Chappal Ghar’ Ashok shop

இந்நிலையில்தான், செப்டம்பர் 6-ம் தேதி நடந்த கடைத் திறப்பு விழாவில் கலந்துகொண்டார். அப்போது பேசிய குத்புதீன் அன்சாரி, ``அசோக், சிறப்பாக வருவார் என நம்புகிறேன். அவரைப்போல் சாலையில் அமர்ந்து வேலை செய்வது என்பது கடினமான ஒன்று. கடுமையான நாள்களைக் கடந்து, காலங்களைக் கடந்து வந்துள்ளோம். நான் அவருக்காக பிராத்திக்கிறேன் என்றார்.

அசோக் பேசும்போது, ``கேரளாவில் எனக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறினார்கள். மொழி ஒரு பிரச்னையாக இருக்கும் என்பதால் நான் செல்லவில்லை. இந்தக் கடை, எனது வாழ்வை மாற்றும் என நம்புகிறேன். ரூ.6,500 மாத வாடகைக்கு இந்தக் கடையை எடுத்துள்ளேன். இது, என் வாழ்வின் மிகப்பெரிய தருணம். எனக்கு வீடு கிடையாது. நான் இங்கு இருக்கும் பள்ளிக்கு அருகில்தான் உறங்குவேன். மாணவர்கள் வருவதற்கு முன்பு அங்கிருந்து சீக்கிரம் எழுந்துவிடுவேன். இந்தக் கடைதான் எனக்கு எதிர்காலத்தை அளிக்கப்போகிறது” என்றார்.