Election bannerElection banner
Published:Updated:

கைநழுவிப் போகிறதா கருத்துரிமை?! OTT, சமூக வலைதளங்களுக்கான புதிய சட்டத்திருத்தம் சொல்வது என்ன?

IT Act 2000
IT Act 2000

இதுவரை பெரிய கட்டுப்பாடுகள் இல்லாமல் இயங்கி வந்த OTT தளங்கள், ட்விட்டர் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி நிறுவனங்கள் என அனைத்திற்கும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

சமூக வலைத்தளங்கள், ஒடிடி தளங்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி நிறுவனங்களுக்கான புதிய விதிமுறைகளை வெளியிட்டிருக்கிறது மத்திய அரசு.

2018-ல் இருந்தே இது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வந்த நிலையில் தற்போது அது முழுவடிவம் பெற்று அமலுக்கு வரும் நிலையில் இருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. 'Information Technology (Intermediary Guidelines (Amendment) Rules) 2018' என்ற பெயரில் கடந்த ஆண்டு மக்களின் கருத்துக்களையும் கேட்டிருந்ததது. ஆனால் தற்போது அதில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு 'Information Technology [Guidelines for Intermediaries and Digital Media Ethics Code] 2021 என்ற பெயரில் சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்தி தளங்கள் என அனைத்திற்குமான விதிமுறையாகச் சேர்த்து வடிவமைத்துள்ளது. மத்திய அரசின் இந்த வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றுவது பொது மக்களின் கருத்து சுதந்திரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

இதுவரை பெரிய கட்டுப்பாடுகள் இல்லாமல் இயங்கி வந்த OTT தளங்கள், டிவிட்டர் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி நிறுவனங்கள் என அனைத்திற்கும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. பத்திரிகைகள் மற்றும் செய்தித் தொலைக்காட்சிகளை நிர்வகிக்கின்ற Press Council of India Act 1978 மற்றும் Cable Television Network Regulation Act 1995, ஆகியவை டிஜிட்டல் செய்தி நிறுவனங்களுக்கும் பொருந்துமாறு புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

புதிய பிரைவசி பாலிஸியை ஏற்காவிட்டால் வாட்ஸ்அப் கணக்கு நீக்கப்படுமா? உண்மை என்ன?
OTT தளங்கள்
OTT தளங்கள்

அதே போல் இதுவரை OTT தளங்களுக்குத் தணிக்கைச் சான்றிதழ் பெறத் தேவையில்லை என்றே விதிமுறைகள் இருந்து வந்தன. ஆனால், தற்போது வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் அமலுக்கு வந்தால், OTT தளங்களில் வெளியாகும் உள்ளடக்கங்களுக்கும் தணிக்கைச் சான்றிதழ் பெற வேண்டும்.

சமூக வலைத்தளங்கள் மற்றும் OTT நிறுவனங்கள் இரண்டும் மூன்றடுக்கு தரக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும். அதன்படி, அந்தந்த நிறுவனங்களே அமைக்கும் குழு முதல் நிலையில் இருக்கும். பத்திரிகைகளுக்கான Press Council of India போன்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு, அது இரண்டாம் நிலையிலும், மூன்றாம் நிலையில் அரசின் நேரடி அமைப்பு இருப்பது போன்ற ஒரு கட்டமைப்பு உருவாக்கப்படும் வகையிலும் புதிய விதிமுறைகள் இருக்கின்றன.

மேலும் சமூக வலைத்தள நிறுவனங்கள் அரசு உத்தரவை அமல்படுத்துவதற்கான அதிகாரியை நியமிக்க வேண்டும் எனவும் அந்த விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய வரைவைப் படிக்க, கீழே கிளிக் செய்யவும்.

download

இந்த புதிய விதிமுறைகள் சமீபத்தில் நிகழ்ந்த சில நிகழ்வுகளின் எதிரொலியாக இருக்கலாம். சமீபத்தில் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளமான ட்விட்டரில் சர்ச்சைக்குரிய கருத்து என சில ட்விட்களை நீக்கச் சொல்லியும், சில ட்விட்டர் கணக்குகளை நீக்கச் சொல்லியும் ட்விட்டர் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. ஆனால், அது ட்விட்டர் அரசு கூறிய சில நடவடிக்கைகளை மட்டும் மேற்கொண்டு, சில நடவடிக்கைகளை மறுத்துவிட்டது. அதன் எதிரொலியாக இந்தப் புதிய விதிமுறைகளைப் பார்க்கலாம். மேலும், சில வாரங்களுக்கு முன்பு OTT தளத்தில் வெளியான ஒரு தொடரில் இ்ந்து மத நம்பிக்கைகளைப் புண்படுத்தியதாகக் கூறி சில பிரச்சனைகள் எழுந்தன, அதனைத் தொடர்ந்தே OTT தளங்களுக்கான கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

சமூக வலைத்தளங்கள்
சமூக வலைத்தளங்கள்

இந்தத் தளங்கள் மட்டுமல்லாது, வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட குறுஞ்செய்தித் தளங்களில் ஒரு குறிப்பிட்ட குறுஞ்செய்தியை உருவாக்கியது யார் எனத் தடமறிந்து கண்டுபிடிக்கவும் புதிய விதிமுறைகளில் இடமிருக்கிறது. இதன் மூலம் பொய்யான தகவல்களைப் பரப்புபவர்களைக் கண்டறிய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதன் மூலம் end-to-end encryption-ஐ உடைத்து பயனர்களின் குறுஞ்செய்திகளைப் படிக்க முடியும். இதனால் பயனர்களது தனியுரிமை பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. மேலும், இதன் மூலம் மக்களின் கருத்துச் சுதந்திரமும் பாதிக்கப்பட வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு