Published:Updated:

`சேவை செய்ய பதவி தேவையில்லை!’ -ஐ.ஏ.எஸ் பணிக்கு திரும்ப அழைப்பு.. மறுத்த கண்ணன் கோபிநாதன்

கண்ணன் கோபிநாதன் ஐ.ஏ.எஸ்
கண்ணன் கோபிநாதன் ஐ.ஏ.எஸ்

ராஜினாமா செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான கண்ணன் கோபிநாதனை மீண்டும் பணிக்கு வரும்படி அரசு அழைத்துள்ளது. அதில் அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் அதனால் உடனடியாக பணிக்குத் திரும்பும்படியும் குறிப்பிடப்பட்டிருந்தது.

கண்ணன் கோபிநாதன் ஐ.ஏ.எஸ். இந்தப் பெயரை நம்மில் பலரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த இவர், 33 வயதான இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரி. யூனியன் பிரதேசமான தாத்ரா நகர் ஹவேலி மின்சார வாரிய செயலராக இருந்தவர், தனது பதவியை ராஜினாமா செய்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது.

கண்ணன் கோபிநாதன்
கண்ணன் கோபிநாதன்

காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்ட விவகாரத்தில், மக்களுக்குக் கருத்து சுதந்திரம் மறுக்கப்படுவதால் ராஜினாமா செய்ததாக கண்ணன் கோபிநாதன் தெரிவித்தார். எனினும் கேரள மாநிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளப் பாதிப்பின்போது நேரடியாகச் சென்று பணியாற்றினார் என்றும் அது சம்பந்தமான தெளிவான தகவல்களை அரசுக்குத் தெரிவிக்கவில்லை என்றும், அரசு கொடுத்த பணிகளை உரிய காலத்தில் செய்து முடிக்கவில்லை என்றும் கடந்த வருடம் ஜூலை மாதமே கண்ணன் கோபிநாதனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

கலெக்டர் பதவியை ராஜினாமா செய்த கண்ணன் கோபிநாதன்... விலகினாரா... வீழ்த்தப்பட்டாரா?

அரசின் குற்றச்சாட்டுகளுக்கு அவர் சரியான பதில் அளிக்காமல் அதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக, ராஜினாமா செய்து நாடகமாடுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் இவரது பெயர் தொடர்ச்சியாக செய்திகளில் இடம் பெற்றது.

தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள், மருத்துவர்கள் என அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில், ராஜினாமா செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான கண்ணன் கோபிநாதனை மீண்டும் பணிக்கு வரும்படி அரசு அழைத்துள்ளது. அதில் அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் அதனால் உடனடியாக பணிக்குத் திரும்பும்படியும் குறிப்பிடப்பட்டிருந்தது.

பதவியை ராஜினாமா செய்த கண்ணன் கோபிநாதன்
பதவியை ராஜினாமா செய்த கண்ணன் கோபிநாதன்

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள கண்ணன் கோபிநாதன், ``மீண்டும் ஐ.ஏ.எஸ் பணிக்குத் திரும்பும்படி எனக்கு அரசாங்கத்திடம் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. நான் எனது சேவைகளை என்னால் இயன்றவரை அரசுக்குச் செய்வேன். ஆனால், அதை பொறுப்புள்ள குடிமகனாக செய்வேன்.. இனி நான் எப்போதும் ஐ.ஏ.எஸ் கிடையாது” என்றார்.

தொடர்ந்து, ``நான் எனது பதவியை ராஜினாமா செய்து கிட்டத்தட்ட 8 மாதங்கள் ஆகிவிட்டன. அரசங்கத்துக்கு தெரிந்ததெல்லாம் துன்புறுத்துவது மட்டும்தான். எனக்குத் தெரியும், அவர்களுக்கு என்னை மேலும் துன்புறுத்த வேண்டும். எனினும் நான் இந்த அரசாங்கத்துக்கு கடினமான காலத்தில் உதவ நினைக்கிறேன். ஆனால் மீண்டும் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பொறுப்பேற்கும் எண்ணமில்லை” என்றார்.

அரசாங்கத்துக்கு அவர் எழுதியுள்ள பதில் கடிதத்தில், ``அரசாங்கத்தின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக என்னை பணியில் சேர சொல்லி வந்த கடிதம் கிடைத்தது. அதில் எனது ராஜினாமா ஏற்கப்படவில்லை என குறிப்பிடபட்டிருந்தது. இந்த நேரத்தில் நான் ஒரு விஷயத்தை சொல்ல நினைக்கிறேன். நான் கடந்த ஆகஸ்ட் மாதம் எனது பதவியை ராஜினாமா செய்தேன். அப்போது முதலே அரசிடம் இருந்து எனக்கு ஊதியம் எதுவும் வரவில்லை. அதனால் இதற்கு நான் பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை.

ஊர் திரும்ப முடியாமல் சிக்கிய மகன்; ஸ்கூட்டரில் 1,400 கி.மீ! -நெகிழவைத்த தாயின் பாசப் பயணம்
கண்ணன் கோபிநாதனின் பதில் கடிதம்
கண்ணன் கோபிநாதனின் பதில் கடிதம்

எனினும் நான் எனது சக்திக்கு இயன்றவரை தனிப்பட்ட முறையிலும் அரசு மற்றும் அரசு சாரா தன்னார்வ நிறுவனங்கள் மூலம் எனது கடமையைச் செய்வேன். நான் ஏற்கெனவே எனது பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். நான் தொடர்ந்து சேவை செய்ய எனக்கு ஐ.ஏ.ஏஸ் என்னும் பெயர் தேவையில்லை. நான் எனது சேவையை சம்பளம் இல்லாமலே செய்கிறேன்” என்றார். கண்ணன் கோபிநாதனுக்கு இன்னும் 27 வருடம் சர்வீஸ் மீதம் இருந்தது குறிப்பிடதக்கது.

அடுத்த கட்டுரைக்கு