Published:Updated:

`ரயில், விமான சேவைகள்; மே 3க்குப் பிறகு உடனடியாகத் தொடங்குமா...’- என்ன சொல்கிறது மத்திய அரசு?

பிரகாஷ் ஜவடேகர்
பிரகாஷ் ஜவடேகர்

மே 3-ம் தேதிக்கு பின்னர் ரயில் மற்றும் விமான சேவைகள் தொடங்குமா என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வீட்டுக்குள்ளே முடங்கியிருக்கின்றனர். இந்தியாவில் முதலில் 21நாள்கள்தான் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. அதனை தற்போது மே 3-ம் தேதி வரை பிரதமர் நீட்டித்துள்ளார். முதலில் ஊரடங்கு உத்தரவு நீட்டித்தபோது விமான, பேருந்து, ரயில் சேவைகளுக்கான முன்பதிவு எல்லாம் நிறுத்தப்பட்டது.

விமானப் போக்குவரத்து
விமானப் போக்குவரத்து

இதற்கிடையில் ஏப்ரல் முதல் வாரத்தில் ஏப்ரல் 15-ம் தேதிக்கும் பின்னரான முன்பதிவினை ரயில்வே தொடங்கியது. ஏப்ரல் 15-ம் தேதிக்கு பின்னர் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என நினைத்த பொதுமக்கள் ரயில்களில் முன்பதிவு செய்தனர். ஆனால் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை தளர்த்தவில்லை. இந்நிலையில் மகாராஷ்டிராவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஊரடங்கு உத்தரவை மீறி ரயில்நிலையத்தில் திரண்டது அம்மாநில அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. காவல்துறையினர் தடியடி நடத்தி அவர்களை அப்புறப்படுத்தினர். ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்தியா முழுவதும் பயணிகள் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

`கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில், நான் எனது இல்லத்தில்...!’ - விஜயகாந்த் வைரல் வீடியோ

மே 3-ம் தேதிக்கு பின்னர் ரயில் மற்றும் விமான சேவைகள் தொடங்குமா என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்தவர், ``ரயில் மற்றும் விமான சேவை நிச்சயம் ஒருநாள் தொடங்கும். எந்த நாளில் அவை தொடங்கும் என தெரியாது. அதைப்பற்றிய விவாதமும் இப்போதைய சூழ்நிலையில் பயனற்றது. ஒவ்வொரு நாளும் சூழலை பொறுத்து ஆய்வு செய்து வருகிறோம்.

இயங்காமல் ஓடுதளத்தில் நிற்கும் விமானங்கள்
இயங்காமல் ஓடுதளத்தில் நிற்கும் விமானங்கள்

சில விமான நிறுவனங்கள் மே 4-,ம் தேதிக்கு பிறகான விமானசேவைக்கு அவர்களாகவே புக்கிங்கை தொடங்கிவிட்டார்கள். விமான போக்குவரத்து தொடங்கப்படுவது குறித்து அரசாங்கம் எந்த முடிவையும் எடுக்கவில்லை என விமான போக்குவரத்துதுறை அமைச்சர் ஹர்தீப் சிங் ஏற்கெனவே தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் அரசாங்கம்தான் இறுதி முடிவு எடுக்கும் என தெளிவாக கூறியுள்ளார். அரசின் முடிவைக் கேட்டு டிக்கெட் முன்பதிவை விமான நிறுவனங்கள் தொடங்கலாம்”என்றார்.

ஊரடங்கு காலத்தில் கடைபிடிக்கப்படும் சமூக இடைவெளி (Social Distancing) கவலையளிப்பதாகவும் மே 3-ம் தேதிக்கு பின்னர் ரயில், விமான சேவைகள் இயங்குவதற்கு வாய்ப்புகள் குறைவுதான் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு