Published:Updated:

`அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்’ - கோரக்பூர் குழந்தைகள் இறப்பு சம்பவத்தில் விடுவிக்கப்பட்ட மருத்துவர்

கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மருத்துவர் குற்றமற்றவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Doctor Kafeel khan
Doctor Kafeel khan

உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரியில் கொத்துக் கொத்தாகத் தொடர்ந்து குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்ட காரணத்தினால் இவ்வளவு குழந்தைகள் உயிரிழந்தன.

Child
Child

இந்தச் சம்பவத்தின் உண்மையைக் கண்டறிய சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து குழந்தைகள் இறந்தபோது பணியிலிருந்த மருத்துவர் கபீர் கான், மருத்துவக் கல்லூரியின் முதல்வர் ஆர்.கே மிஸ்ரா உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் மருத்துவர் கபீர் கானும், முதல்வர் மிஸ்ராவும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

ஆனால், மருத்துவர் கபீர் கான் மீது ஊழல், கடமையைச் சரியாகச் செய்யாதது, மருத்துவ அலட்சியம் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் 9 மாத சிறைத் தண்டனைக்குப் பிறகு ஜாமீன் பெற்று வெளியில் வந்தார். இந்தச் சம்பவத்தில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு தற்போது தன் அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.

Gorakhpur Hospital
Gorakhpur Hospital

அதில், குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவர் கபீர் கான் மீது எந்தத் தவறும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாததைக் கண்டு அவர் முன்னரே எச்சரித்ததாகவும், ஆக்சிஜன் தீர்ந்து குழந்தை இறந்தபோது தன் சொந்த செலவில் 7 ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி பல குழந்தைகளின் உயிர்களைக் காப்பாற்ற முயன்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் அலட்சியம்... 
பச்சிளம் குழந்தையின் உடலில் இருந்து 20 நாள்களாக அகற்றப்படாத ஊசி

இது பற்றிப் பேசியுள்ள கபீல் கான், “ குழந்தைகள் இறப்புக்குக் காரணமான உண்மையான குற்றவாளிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் நான் பலியாடு ஆக்கப்பட்டேன் என்பது மட்டும் எனக்குத் தெரியும். குழந்தைகளை இழந்த பெற்றோர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. உத்தரப்பிரதேச அரசு தன் தவறுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும், மேலும் பாதிக்கப்பட்ட பெற்றோர்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

Doctor Kafeel khan
Doctor Kafeel khan

மேலும், என்.டி.டி.விக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ``என் மகளை எனக்கு நிறைய பிடிக்கும். அவள் என்னுடன் மகிழ்ச்சியாக விளையாடுவாள். நான் சிறைக்குச் செல்லும்போது என் மகள் 10 மாத குழந்தையாக இருந்தாள். பின்னர் ஜாமீன் பெற்று வெளியில் வரும்போது, என் குழந்தைக்கு என்னை அடையாளம் தெரியவில்லை” என வருத்தமாகப் பேசியுள்ளார்.