Published:Updated:

``பெண்களுக்கான சரியான திருமண வயது விரைவில் அறிவிக்கப்படும்!" - பிரதமர் மோடி

மோடி
மோடி

இந்திய மகள்களுக்கான திருமண வயது பற்றிய ஆய்வறிக்கை வந்ததும், அதுகுறித்து நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்படும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உணவு மற்றும் வேளாண் அமைப்பின் 75-வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆன்லைனில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, 75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார். பின்னர், சமீபத்தில் உருவாக்கப்பட்ட உயிரி செறிவூட்டிய 8 பயிர்களின் 17 ரகங்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த ரகங்கள் மற்ற உணவு வகைகளுடன் இந்திய உணவை ஊட்டச்சத்து மிக்கதாக மாற்றக்கூடியவை என கூறப்படுகிறது. இந்த செறிவூட்டப்பட்ட பயிர் வகைகள் அரசின் மதிய உணவுத் திட்டத்திலும் அங்கன்வாடிகளிலும் இணைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ``நாட்டின் உணவுப் பாதுகாப்பில் விவசாயிகள் உற்பத்தியை அரசே கொள்முதல் செய்வதும் அவர்களின் உற்பத்திப் பொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை அளிப்பதும் முக்கியமானவை. விவசாயிகளுக்கு அறிவியல்பூர்வமாகச் சிறப்பான வசதிகள் தொடர்ந்து கிடைக்க இந்த அரசு உறுதிகொண்டுள்ளது. கடந்த ஆறு வருடங்களாக வேளாண் உற்பத்தி சந்தைக் குழுக்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளைச் செய்து அதில் முதலீடும் செய்து வருகிறது மத்திய அரசு.

உலக உணவுத்திட்டத்துடன் நீண்டகாலமாக இந்தியா இணைந்து பணியாற்றி வருவதும், பங்களிப்பதும் இந்த நேரத்தில் மகிழ்ச்சியளிக்கிறது. அந்த அமைப்புடன் இந்தியாவுக்கு இருக்கும் தொடர்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது. இந்த ஆண்டு உலக உணவுத் திட்டத்துக்கு, அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதற்குப் பாராட்டுகள்” எனப் பேசிய அவர் தொடர்ந்து, பெண்களின் திருமண வயது தொடர்பாகவும் கருத்து தெரிவித்தார்.

மோடி
மோடி
பெண்ணின் திருமண வயது 18... 21... 23?

``நம் நாட்டு மகள்களின் திருமணத்துக்கான சரியான வயதை நிர்ணயிக்க குழு அமைத்தும் ஏன் இன்னும் அறிவிக்கவில்லை என்று கேட்டு பலரும் எனக்குக் கடிதம் எழுதி வருகின்றனர். நம் மகள்களின் திருமண வயதை நிர்ணயிக்க அமைக்கப்பட்ட குழு அது தொடர்பாக ஆய்வு செய்து வருகிறது. அந்த அறிக்கை விரைவில் வந்துவிடும். வந்ததும் நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்படும் என உறுதியளிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு