Published:Updated:

`நாங்கள் தயாராக இருந்தோம்; அரசு மறுத்துவிட்டது!’ - மனம் திறந்த முன்னாள் ஏர் சீஃப் மார்ஷல்

 ஏர் சீஃப் மார்ஷல்
ஏர் சீஃப் மார்ஷல்

பாகிஸ்தான் மீது விமானப்படை தாக்குதல் நடத்தத் தயாராக இருந்ததாகவும், அதற்கு அரசு ஒப்புதல் வழங்கவில்லை என்றும் முன்னாள் ஏர் சீஃப் மார்ஷல் தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப்படையின் முன்னாள் தளபதி பி.எஸ். தானோ, நேற்று மும்பையில் நடந்த வி.ஜே.டி.ஐ கல்லூரியில் நடந்த ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசியுள்ளார். அப்போது, தன் பணிக்கால அனுபவம் பற்றியும், அப்போது நடந்த பல்வேறு சம்பவங்கள் பற்றியும் மாணவர்களிடம் பகிர்ந்துள்ளார்.

பி.எஸ். தானோ
பி.எஸ். தானோ

நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் ஏர் சீஃப் மார்ஷல், ``2008-ம் ஆண்டு நவம்பர் 28-ம் தேதி, மும்பை தாஜ் ஹோட்டலில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு, நாங்கள் பாகிஸ்தானிலிருந்த தீவிரவாதிகள் முகாம் மீது வான்வழித் தாக்குதல் நடந்தத் தயாராக இருந்தோம். பாகிஸ்தானில் எங்கெல்லாம் தீவிரவாத முகாம் இருந்தன என்ற விவரம் அனைத்தையும் நாங்கள் அறிந்திருந்தோம். ஆனால், ஒரு நாட்டின்மீது தாக்குதல் நடத்துவதா வேண்டாமா என்பது அரசியல் முடிவு. தாக்குதல் நடத்த மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்தோம். ஆனால், விமானப்படையின் கோரிக்கையை அரசு நிராகரித்துவிட்டது.

Vikatan

அதேபோல, 2001-ம் ஆண்டு நாடாளுமன்றத்தின்மீது தாக்குதல் நடத்தப்பட்டபோதும் பாகிஸ்தான் மீது மிகப்பெரும் தாக்குதல் நடந்த நாங்கள் தயாரானோம். இந்தியா மீது பாகிஸ்தான் நடத்தும் இதுபோன்ற தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. திடீர் மற்றும் விரைவான போர்களை எதிர்கொள்ளும் திறன் இந்திய விமானப்படையிடம் உள்ளது. போர் என்பது வருங்காலத்தில் நிலம், கடல், வான் மற்றும் விண்வெளி போன்ற எதிலும் நடக்கலாம்.

மும்பைத் தாக்குதல்
மும்பைத் தாக்குதல்

இந்த ஆண்டு நடத்தப்பட்ட பால்கோட் தாக்குதல், பாகிஸ்தான் விமானப் படைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளில் கூட்டுத் திட்டமிடல் இல்லை மற்றும் அவர்களின் மன உறுதியும் குறைவாக உள்ளது” என்று பேசியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு