Published:Updated:

`கொரோனா 100% குணம்; பதஞ்சலி மருந்து கண்டுபிடிப்பு?’ -தடைவிதித்த மத்திய அரசு

'பதஞ்சலி' பாபா ராம்தேவ்
'பதஞ்சலி' பாபா ராம்தேவ்

பதஞ்சலி நிறுவனம் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆயுர்வேத முறையில் கொரோனாவைக் குணப்படுத்த முடியும் என்றும் இதனால் இதற்கான மருந்தை கண்டுபிடித்துவிட்டதாகவும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கொரோனா வைரஸால் உலகமே திணறிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா, பிரேசில், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர். இதனால், வைரஸ் பாதிப்பைக் குணப்படுத்த மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எனினும், ஆராய்ச்சியாளர்களின் முயற்சிகள் உரிய பலனளிக்கவில்லை என்றே கூறலாம்.

உலக சுகாதார அமைப்பும் இதற்கான மருந்தை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல் உள்ளிட்டவற்றைக் கடைப்பிடிக்க வலியுறுத்தி வருகிறது. இந்தநிலையில், பதஞ்சலி நிறுவனம் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆயுர்வேத முறையில் கொரோனாவைக் குணப்படுத்த முடியும் என்றும் இதனால் இதற்கான மருந்தைக் கண்டுபிடித்துவிட்டதாகவும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பதஞ்சலி - பாலகிருஷ்ணன்
பதஞ்சலி - பாலகிருஷ்ணன்

பதஞ்சலி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாலகிருஷ்ணா இதுதொடர்பாகப் பேசும்போது, ``கொரோனா வைரஸ் உடலில் பரவுவதைத் தடுக்கும் மற்றும் வைரஸை எதிர்த்துப் போராடும் மருந்தை எங்களுடைய ஆராய்ச்சிக் குழு கண்டுபிடித்துள்ளது. இதனை பாதிப்படைந்த நோயாளிகளுக்குக் கொடுத்து ஆய்வுகளையும் செய்தோம். இதில், எங்களுக்கு 100 சதவிகிதம் சாதகமான முடிவுகள் கிடைத்துள்ளன. இந்த மருந்து தொடர்பான ஆதாரங்கள் மற்றும் தரவுகள் இன்னும் சில நாள்களில் வெளியிடப்படும்” என்று கூறியிருந்தார்.

இதுதொடர்பான விளம்பரங்களையும் பதஞ்சலி நிறுவனம் தொடர்ந்து மேற்கொண்டு வந்தது. `கொரோனில்' மற்றும் `ஸ்வசரி' என்ற இரு ஆயுர்வேத மருந்துகளை பதஞ்சலி நிறுவனம் அறிமுகப்படுத்தியது. பாதிப்படைந்த நோயாளிகளை இந்த மருந்துகள் 100 சதவிகிதம் குணப்படுத்துகிறது என்றும் தகவல் வெளியிட்டு வந்தது.

பன்னாட்டு நிறுவனங்களுடன் கைகோக்கிறதா பதஞ்சலி?

இதனையடுத்து ஆராய்ச்சி செய்த குழு, மருந்துகளின் உள்ளீட்டுப் பொருள்கள், செய்முறைகள், பரிசோதனைகள் நடைபெற்ற இடம், பரிசோதனை நடைபெற்ற முறை தொடர்பான விவரங்கள் மற்றும் பரிசோதனை முடிவுகள் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் பதஞ்சலி நிறுவனம் சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய ஆயுஷ் அமைச்சகம் கேட்டுக்கொண்டது. இதுதொடர்பாக மத்திய அரசு பரிசோதனைகளை மேற்கொண்டு முறையான அறிவிப்புகளை வெளியிடும் வரை பதஞ்சலி நிறுவனம் கொரோனா வைரஸ் தொடர்பான மருந்துகளை விளம்பரப்படுத்த தடை விதிக்கப்படுவதாக அறிவித்தது.

இதுதொடர்பாக மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாட் நாயக் பேசும்போது, ``பாபா ராம்தேவ் நாட்டுக்குப் புதிய மருந்தைக் கொடுத்திருப்பது நல்ல விஷயம். ஆனால், ஆயுஷ் அமைச்சகம் அதனை முறையாக அனுமதிக்க வேண்டும். இதுதொடர்பான அறிக்கைகளை ஆராய்ந்து பார்த்த பிறகு அனுமதி வழங்கப்படும். யார் வேண்டுமானாலும் மருந்துகளை தயாரிக்கலாம். ஆனால், ஆய்வு குறித்த தகவல்களை அமைச்சகத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும். அப்படிச் செய்யாமல் தங்களது தயாரிப்புகளை விளம்பரப்படுத்த முடியாது” என்று கூறியுள்ளார்.

மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாட் நாயக்
மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாட் நாயக்

மத்திய அமைச்சகம் விளக்கங்களைக் கேட்ட பிறகு பதஞ்சலி நிறுவனத்தின் தலைமை அதிகாரி பாலகிருஷ்ணா, ``மத்திய அரசு ஆயுர்வேத முறையை ஊக்குவிக்கிறது. பதஞ்சலி நிறுவனத்துக்கும் மத்திய ஆயுஷ் நிறுவனத்துக்கும் இடையே உள்ள தகவல் பரிமாற்ற இடைவெளி நிரப்பப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பைக் குணப்படுத்தும் கொரோனில் மருந்து தொடர்பான அனைத்துத் தகவல்களும் மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது” என்று ட்வீட் செய்துள்ளார். முன்னதாக, கொரோனில் மற்றும் ஸ்வசரி என்ற மருந்துகள் அடங்கிய கொரோனா கிட் ரூபாய் 545 விலையில் இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

பாபா ராம்தேவ் இதுதொடர்பாகப் பேசும்போது, ``டெல்லி, அகமதாபாத் உள்ளிட்ட சில நகரங்களில் கொரோனா வைரஸால் பாதிப்படைந்த 280 நோயாளிகளிடம் இந்த மருந்தைப் பரிசோதனை செய்ததில் 100 சதவிகிதம் சாதகமான முடிவுகள் வந்துள்ளன. நிம்ஸ் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் ஜெய்ப்பூரில் 95 நோயாளிகளுக்குப் பரிசோதனைகளை மேற்கொண்டோம். இதன் முடிவில் வந்த ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், பரிசோதனை செய்தவர்களில் 69 சதவிகித நோயாளிகள், மூன்று நாள்களில் குணமடைந்துவிட்டனர். ஏழு நாள்களில் அனைவரும் குணமடைந்துவிட்டனர்” என்று கூறினார்.

`கொரோனாவுக்கு மருந்து..14 நாள்களில் குணம்..விரைவில் ஆதாரங்கள்!’- `பதஞ்சலி’ பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரைக்கு