Published:Updated:

` சமையலோடு கலந்த மனிதாபிமானம்!' - `யூடியூப் தாத்தா' மறைவால் கலங்கும் நெட்டிசன்கள்

இரண்டு ஆண்டுகளாக சமையல் கலையுடன் மனிதாபிமானத்தையும் பரப்பி வந்த நாராயண ரெட்டியின் மறைவு நெட்டிசன்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

grandpa kitchen narayana reddy
grandpa kitchen narayana reddy ( twitter )

ஆலமரம்போல் உலகம் முழுவதும் வளர்ந்து கிளை பரப்பியிருக்கின்றன யூடியூப் சேனல்கள். பல துறைகளைச் சேர்ந்தவர்களும் யூடியூப் சேனல் ஆரம்பித்து பிரபலமடைந்து வருகின்றனர். அதிலும், சமையல் சம்பந்தமான சேனல்கள் மொழிகளைக் கடந்து பல நாடுகளிலும் பிரபலமடைகின்றன.

grandpa kitchen narayana reddy
grandpa kitchen narayana reddy
twitter

அப்படிப் பிரபலமடைந்தவர்தான் தெலங்கானாவைச் சேர்ந்த நாராயண ரெட்டி. `யூடியூப் தாத்தா' என்ற செல்லப் பெயருடன் உலா வந்த இவர் `கிராண்ட்பா கிச்சன்' என்ற பெயரில் சமையல் சேனலை நடத்திவந்தார். 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தச் சேனலில் அவரும் சில இளைஞர்களும் சேர்ந்து இயற்கையான முறையில் பசுமையடர்ந்த வெளிகளில், விதவிதமான உணவுவகைகளைச் சமைத்து இணையத்தில் பதிவேற்றி வந்தனர்.

இரண்டு வருடத்துக்குள் `கிராண்ட்பா கிச்சன்' சேனலை 60 லட்சம் பேர் பின்தொடர்ந்தனர். பாரம்பர்ய சமையலிலிருந்து பீட்ஸா, கே.எஃப்.சி சிக்கன், அப்போலோ மீன் ரெசிபி, சிக்கன் மஞ்சூரியன் என பிற நாட்டு உணவுகளையும் சமைத்தார்.

grandpa kitchen narayan reddy
grandpa kitchen narayan reddy
the news minute

இந்தச் சேனலின் நோக்கம் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவளிப்பது. இந்தச் சேனலின் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு ஆதரவற்ற குழந்தைகளுக்குத் தேவையான உணவு, உடை, பள்ளிக்கூடத்துக்குத் தேவையான பொருள்களையும் வழங்கி வந்தனர்.

இந்நிலையில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தாத்தா, தீபாவளியன்று தனது 73-ம் வயதில் காலமானார். செப்டம்பர் 20-ம் தேதி இவர் செய்த `க்ரிஸ்பி பொடேடோ ஃபிங்கர்' ரெசிபியே இவரின் கடைசிப் பதிவாக அமைந்தது.

grandpa kitchen narayan reddy
grandpa kitchen narayan reddy
twitter

யூடியூப் தாத்தாவின் இறுதிப் பயணமும் பல இணைய சேனல்களில் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளாக சமையல் கலையுடன் மனிதாபிமானத்தையும் பரப்பி வந்த நாராயண ரெட்டியின் மறைவு நெட்டிசன்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

`நீங்கள் எங்கள் அருகில் இல்லையென்றாலும் இதயத்தில் எப்போதும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறீர்கள்' என்று அவரின் பழைய வீடியோக்களின் கீழ் இரங்கல்களைத் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

மிஸ் யூ கிராண்ட்பா!