Published:Updated:

டெல்லி விவசாயிகள் போராட்டம்: இன்று இதுவரை நடந்தது என்ன? #GroundReport

விவசாயிகள் போராட்டம்:
விவசாயிகள் போராட்டம்:

விவசாயிகளின் பேரணி டெல்லியின் செங்கோட்டையை அடைந்தது. செங்கோட்டையை அடைந்த விவசாயிகள் தங்களின் கொடிகளையும் அங்கு பறக்கவிட்டனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடிவரும் விவசாயிகள், `குடியரசு தினத்தன்று டெல்லியை நோக்கி டிராக்டர் பேரணி நடத்தப்படும்’ என்று தெரிவித்திருந்தனர். இந்தநிலையில், இன்று டெல்லியின் பல பகுதிகளில் விவசாயிகளுக்கும் காவல்துறைக்கும் மோதல்கள் ஏற்பட்டதால், பதற்றநிலை உருவாகியிருக்கிறது. மேலும், இந்த மோதல்களில் ஒருவர் உயிரிழந்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

டெல்லியின் ஐடிஓ பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் ஒருவர் உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது. மேலும், இது குறித்து விவசாயிகள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

விவசாயிகளின் பேரணி டெல்லியின் செங்கோட்டையை அடைந்திருக்கிறது. செங்கோட்டையை அடைந்த விவசாயிகள் தங்களின் கொடிகளையும் அங்கு பறக்கவிட்டனர். அங்கு பலர் செங்கோட்டையின் சுவர்களை ஏறுவதையும் சமூக ஊடகங்களில் வலம்வரும் புகைப்படங்கள் மூலம் காண முடிகிறது.

டெல்லி விவசாயிகள் போராட்டம்: இன்று இதுவரை நடந்தது என்ன? #GroundReport

டெல்லியின் ஐடிஓ, அக்‌ஷஷர்தம், நங்லோய், போன்ற பகுதிகளிலும் பதற்றநிலை அதிகரித்து காணப்படுகிறது. இதில் சில இடங்களில் விவசாயிகளைக் கலைக்க காவல்துறை கண்ணீர்ப் புகைக்குண்டுகளைப் பயன்படுத்தினர்.

டெல்லியில் நிலவும் இந்தப் பதற்றநிலை காரணமாக பல மெட்ரோ ரயில் நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம், மெட்ரோவின் பச்சை நிறப் பாதை ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளன. இந்தப் பச்சை நிறப் பாதையில்தான் டிக்ரி எல்லை, நங்லோய் போன்ற ரயில் நிலையங்கள் இருக்கின்றன. இந்த வழியாகத்தான் விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய முற்பட்டுவருகின்றனர்.

சிங்கு எல்லையில் விவசாயிகள் காவல்துறையின் வாகனங்களில் ஏற முற்பட்டனர். அங்கு காவல்துறை கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசினர். மேலும், வயதான விவசாயிகள் இளம் விவசாயிகளை அமைதியாக இருக்கும்படி கோரும் காட்சிகளை அங்கே பார்க்க முடிந்தது.

டெல்லி போலீஸுடன் இணைந்து இந்தப் பேரணியை அமைதியான வழியில் நடத்த விவசாயிகள் திட்டமிட்டிருந்தாலும், சில எல்லைப் பகுதிகளில் காவல்துறைக்கும் விவசாயிகளுக்கும் மோதல்கள் ஏற்பட்டன.

டெல்லி
டெல்லி

டெல்லியைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்தைக் கண்காணிக்க, போக்குவரத்து போலீஸார் மற்றும் டெல்லி காவல்துறை பணியமர்த்தப்பட்டிருந்தனர்.

ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினம் என்பதால், துணை ராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். விவசாயிகளும் நிலைமையைக் கட்டுக்குள்வைக்கத் தன்னார்வலர்களை நிறுத்தியிருந்தனர்.

Live Updates: டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை: உள்துறை அமைச்சர் அமித் ஷா முக்கிய ஆலோசனை

ஆனால், இந்தப் பேரணி திட்டமிட்டதுபோல அமைதியாக நடைபெறவில்லை. பல்வேறு இடங்களில் காவல்துறைக்கும் விவசாயிகளுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டதைக் காண முடிகிறது. டெல்லியின் எல்லைப் பகுதிகளான டிக்ரி எல்லை, காசிப்பூர் எல்லை மற்றும் சிங்கு எல்லையில் பெருமளவிலான விவசாயிகள் குவிந்தனர்.

டெல்லியில் ஐடிஓ என்று சொல்லப்படும் இடத்திலும் பதற்றநிலை உருவாகியிருக்கிறது. வன்முறையைப் படம் எடுப்பவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. இங்கு ஒருவர் உயிரிழந்திருக்கிறார். சிலருக்கு ரத்தக் காயங்களும் ஏற்பட்டுள்ளன. அங்கு போலீஸாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே கைகலப்பும் ஏற்பட்டிருக்கிறது.

மற்றொரு புறம் டெல்லியிலுள்ள அக்ஷர்தம் கோயிலுக்கு அருகிலும் பதற்றநிலை ஏற்பட்டிருக்கிறது. அங்கு கூட்டத்தைக் கலைக்க, கண்ணீர்ப் புகைக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

டெல்லி
டெல்லி

இந்தநிலையில், கிசான் எக்தா மான்சின் தலைவர், விவசாயிகளிடம், ``இது கடைசிப் போராட்டம் என எண்ண வேண்டாம். பல விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவோர் இந்தப் பேரணியில் கலந்திட நேரும். விவசாயிகள், அவர்களிடமிருந்து தள்ளி நிற்க வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

``இந்தப் போராட்டம் வன்முறையாக மாற வேண்டும் என அரசாங்கம் விரும்புகிறது. நீங்கள் வன்முறையிலிருந்து தள்ளி இருங்கள் என நான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். பிப்ரவரி ஒன்றாம் தேதி நாம் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்ல வேண்டும். அதற்கும் தயாராக இருங்கள்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

விவசாயிகள்
விவசாயிகள்

வன்முறைகள் ஒருபுறம் இருக்க, டிக்ரி எல்லையில் காலையில் பேரணி அமைதியாக நடைபெற்றதையும் காண முடிந்தது.

சிங்கு எல்லையில் விவசாயிகள் செல்ல விரும்பிய ரிங் சாலையில் அவர்களைச் செல்ல விடாமல் காவல்துறை தடுத்ததால், அங்கு விவசாயிகள் தடுப்புகளைத் தகர்க்க முயன்றனர்.

டெல்லி காவல்துறையின் இணை ஆணையர் ஷாலினி சிங், டெல்லி காவல்துறை மற்றும் விவசாயிகளின் சந்திப்பில் முடிவு செய்யப்பட்ட பாதைகளை விவசாயிகள் பின்பற்ற வேண்டும் எனக் கோரியிருக்கிறார்.

டெல்லி விவசாயிகள் போராட்டம்: இன்று இதுவரை நடந்தது என்ன? #GroundReport

பல விவசாயிகள் நிர்ணயிக்கப்பட்ட பாதையைப் பின்பற்றினர். ஆனால், பல விவசாயிகள் பாதையிலிருந்து முன்னகர்ந்துவிட்டனர். மேலும், சிலர் போலீஸார் மீது கல்லெறிந்தனர், டிராக்டர்களையும் ஏற்ற முயன்றனர் என்று ஷாலினி சிங் தெரிவித்திருக்கிறார்.

`விவசாயிகளை அழிக்கும் முயற்சி!’

விவசாயிகள் போராட்டம் குறித்துப் பேசிய பாரதிய கிசான் யூனியனின் தலைவர் ராகேஷ் டிகாய்ட், ``போராட்டத்தில் இடையூறு செய்வது யார் என்பது எங்களுக்குத் தெரியும், அவர்கள் கண்டுகொள்ளப்பட்டுவிட்டனர். இவர்கள் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள். விவசாயிகளின் மேல் பழிசுமத்த இவர்கள் இவ்வாறு செய்கின்றனர்” எனத் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு