Published:Updated:

`21 நாள் லாக் டவுன்... விதியை மீறினால் என்ன தண்டனை?' - உள்துறை அமைச்சகத்தின் கைட்லைன்ஸ்

கொரோனா அச்சம்
கொரோனா அச்சம்

மத்திய உள்துறை அமைச்சகமானது 21 நாள்களுக்கான வழிகாட்டும் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் அதிகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி நேற்று இரண்டாவது முறையாக மக்களிடம் உரையாற்றினார். அப்போது, நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது என்று அறிவித்தார்.

``நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு கிராமத்திலும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது. கொரோனாவுக்கு எதிரான இந்த நடவடிக்கை தவிர்க்க முடியாதது. இந்த ஊரடங்கு உத்தரவு அடுத்த 21 நாள்களுக்கு அமலில் இருக்கும். இதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று கூறினார். இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகமானது 21 நாள்களுக்கான வழிகாட்டும் நெறிமுறைகளை வெளியிட்டது.

கொரோனா
கொரோனா

விதிவிலக்கு கொடுக்கப்பட்ட துறைகள்!

 • காவல்துறை, ராணுவம், பெட்ரோலியம் ஆகிய பொதுப் பயன்பாடுகளையும் பேரிடர் நிர்வாகம், தகவல் மையங்கள், வானிலை மையங்கள், மின்சார உற்பத்தி ஆகிய எச்சரிக்கை மையங்களையும் மாநில மற்றும் யூனியம் பிரதேச அலுவலகங்களையும் தவிர்த்து மற்ற மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவை செயல்படாது.

 • மருத்துவமனைகள், மருத்துவ நிர்வாகம், அது சார்ந்த உற்பத்தி, விநியோகம், அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த மருத்துவமனைகள், மருந்துக்கடை, மருத்துவ உபகரணங்கள், மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை செயல்படும். மருத்துவமனை சார்ந்த பிற ஆதரவு சேவைகளுக்கும் அனுமதி உண்டு.

 • நகராட்சி அமைப்புகள், சுகாதாரம், குடிநீர் விநியோகம் உள்ளிட்ட துறை சார்ந்த ஊழியர்கள் பணியாற்ற வேண்டும்.

 • ரேஷன் கடை, உணவு, மளிகை, பழங்கள், காய்கறிகள், பால், இறைச்சி, மீன், மாட்டுத் தீவனம் போன்றவற்றுக்கு அனுமதி கொடுக்கப்படுகிறது என்றாலும் குறைந்தபட்ச ஊழியர்களுடன் மக்களின் வீடுகளுக்குக் கொண்டு சென்று பொருட்களை வழங்க வேண்டும்.

மருத்துவமனை
மருத்துவமனை
AP
 • வங்கிகள், இன்சூரன்ஸ் அலுவலகங்கள், ஏடிஎம்கள் திறந்திருக்கலாம்.

 • பத்திரிகை மற்றும் ஊடகங்கள் குறிப்பிட்ட அளவு ஊழியர்களுடன் பணிபுரியலாம்.

 • உணவு, மருந்துகள் உள்ளிட்ட ஆன்லைன் நிறுவனங்கள்!

 • அத்தியாவசியப் பொருள்கள் உற்பத்தி நிறுவனங்கள், மாநில அரசுகள் அறிவுறுத்தும் மற்ற உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவை திறந்திருக்கலாம். இதைத்தவிர மற்ற அனைத்துத் தரப்பினரும் வீடுகளில் இருந்து மட்டுமே பணியாற்ற வேண்டும்.

 • ஊரடங்கு காரணமாக வெளியே தங்க வேண்டியவர்கள், மருத்துவ அவசர ஊழியர்கள் போன்றவர்கள் தங்குவதற்கான ஓட்டல்கள், தங்குமிடம் ஆகியவை திறந்திருக்கலாம்.

 • இறுதிச் சடங்கு என்றால் 20 பேருக்கு மேல் கூடுவதற்கு அனுமதி இல்லை.

யாருக்கெல்லாம் அனுமதி கிடையாது?!

 • அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட வேண்டும். மத வழிபாட்டுக் கூட்டத்திற்கு விதிவிலக்கு கிடையாது.

 • வர்த்தக மற்றும் தனியார் நிறுவனங்கள் மூடல்

 • ரயில், பேருந்து விமானப் போக்குவரத்து முழுமையாக முடக்கம்

 • கல்வி, ஆராய்ச்சி நிறுவனங்கள், தொழிற்சாலை நிறுவனங்கள் மூடல்!

 • விளையாட்டு நிகழ்வுகளுக்கு அனுமதி கிடையாது!

கொரோனா
கொரோனா
 • மாவட்ட ஆட்சியர்கள் உட்பட அந்தந்தப் பகுதிகளில் உள்ள அதிகாரிகள் தங்கள் பகுதியில் இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும். இவர்கள் அனைவரும் மக்கள் நடமாட்டம் இல்லாததை உறுதி செய்ய வேண்டும்.

 • மேலும், 15.02.2020-ம் தேதிக்குப் பிறகு வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுகிறார்களா என்பதை உள்ளூர் சுகாதார அதிகாரிகள் கண்காணித்திட வேண்டும்.

விதியை மீறினால் என்ன தண்டனை?!

 • அரசின் உத்தரவுகளுக்கு இணங்க மறுத்து வெளியே சென்றால் 1 ஆண்டு வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டையும் உள்ளடக்கிய தண்டனை விதிக்கப்படும். அதேநேரம் உத்தரவுகளுக்கு இணங்க மறுத்து அது உயிரிழப்பு ஏற்பட வழிவகுத்தால் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க நேரிடும்.

 • தற்போது அரசுகள் அறிவித்துள்ள நிவாரணங்களையோ, சலுகைகளைப் பெற தகுதியில்லாதவர்கள் அதைப் பெறுவதற்காக தவறுகள் செய்து அது கண்டுபிடிக்கப்பட்டால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

சிறை
சிறை
மாதிரிப் படம்
 • பணம் அல்லது பொருள்களைப் பதுக்கி வைத்தால், குறிப்பாக அப்படிச் செய்ய கட்டாயப்படுத்தினால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

 • வைரஸ் தொடர்பான பீதியை உருவாக்கும் போலிச் செய்திகளைப் பரப்பினால் 1 ஆண்டு சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.

 • இந்தக் காலகட்டத்தில் அரசாங்க அதிகாரிகள் தங்கள் அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்துவதோ அல்லது தேவையான நேரங்களில் அதிகாரத்தைப் பயன்படுத்தத் தவறினாலோ கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும். இதேபோன்று தனியார் துறைகளுக்கும் விதியை மீறினால் தண்டனைக்கேற்ப சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்று அந்தக் வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு