Published:Updated:

மாதவிடாய் இல்லை என்பதை நிரூபியுங்கள்.. மாணவிகளிடம் சர்ச்சை சோதனை நடத்திய குஜராத் ஆசிரியைகள்!

கல்லூரி மாணவிகள்
கல்லூரி மாணவிகள்

குஜராத்தில் கல்லூரி நிர்வாகம் ஒன்று மாணவிகளிடம் மாதவிடாய் தொடர்பாக கேள்வி எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் ஸ்ரீ ஷாஜானந்த் பெண்கள் கல்லூரி ( Shri Sahjanand Girls’ Institute) அமைந்துள்ளது. சுவாமி நாராயண் பக்தர்களால் இந்தக் கல்லூரி நடத்தப்படுகிறது. இந்தக் கல்லூரி வளாகத்தில் கோயில் உள்ளிட்ட சில இடங்கள் உள்ளது. 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரியில் ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். சுமார் 60-க்கும் மேற்பட்ட மாணவிகள் விடுதியில் தங்கி பயிலுகின்றனர்.

கல்லூரி
கல்லூரி

இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு விடுதியில் இருக்கும் மாணவிகளிடம் மிக மோசமாக நடந்துள்ளனர் கல்லூரி நிர்வாகத்தினர். யாருக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளது என சோதனை செய்வதற்காக மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றச்சொல்லியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரம் தற்போது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சுவாமி நாராயண் பக்தர்களால் நடத்தப்படும் இந்தக் கல்லூரியில் மாதவிடாய் காலத்தில் மாணவிகள் குறிப்பிட்ட பகுதிகளுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. சக மாணவிகளைத் தொட்டுப் பேசுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், கல்லூரி வளாகத்தில் கோயில் அமைந்துள்ள பகுதி மற்றும் சமையலறைக்குள்ளும் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த நிலையில், விடுதியில் உள்ள மாணவிகள் சிலர் மாதவிடாய் காலத்தில் சமையலறைக்குள் சென்றதாகவும் சக மாணவிகளை தொட்டுப் பேசியதாகவும் விடுதி காப்பாளர் புகார் தெரிவித்துள்ளார். இந்தக் கல்லூரியில் சுமார் 1,500-க்கும் அதிகமான மாணவிகள் பயின்று வருகின்றனர்.

Representation Image
Representation Image

இந்த நிலையில், நேற்று மாணவிகள் வழக்கம்போல் கல்லூரிக்குச் சென்றுள்ளனர். கல்லூரி வேலைநேரத்தின்போது விடுதியில் தங்கியுள்ள 60-க்கும் மேற்பட்ட மாணவிகளை கல்லூரி முதல்வர் அழைத்துள்ளார். சக மாணவிகளின் முன்னிலையில் விடுதியில் பயிலும் மாணவிகளிடம் யார் யாருக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளது எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இரண்டு மாணவிகள் தங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். மாணவிகளின் பதிலை நம்பமறுத்த கல்லூரி நிர்வாகம் ஆசிரியைகளைக் கொண்டு மாணவிகளைச் சோதனை செய்யக் கூறியுள்ளனர். மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றி காண்பிக்குமாறு கூறியுள்ளனர் ஆசிரியைகள். இது மாணவிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக மாணவிகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதுபோன்ற சம்பவங்கள் இங்கு நடப்பது புதிதல்ல. இதுபோன்று நிறைய கொடுமைகள் இங்கு நடப்பதாக மாணவிகள் கூறுகின்றனர். இதுகுறித்து பேசிய மாணவிகள் சிலர், ``நாங்கள் அனைவரும் வெகுதொலைவில் இருந்து வந்து படிக்கிறோம். கல்லூரிக்கு என தனியாக விடுதி இல்லை. இந்தக் கல்லூரி நிர்வாகத்தினர் பள்ளிக்கூடம் நடத்துகின்றனர். பள்ளியில் படிக்கும் மாணவிகளுடன் நாங்கள் தங்கியிருக்கிறோம். தாளாளர், அறங்காவலர்கள் மற்றும் விடுதி காப்பாளர்களால் பல்வேறு இன்னல்களைச் சந்திக்கிறோம். மாதவிடாய் ஏற்படுவதற்கு எல்லாம் நாங்கள் தண்டிக்கப்படுகிறோம்.

Representation Image
Representation Image

அவர்களுடைய நம்பிக்கையை நாங்கள் பின்பற்றினாலும் எங்களுக்கு இந்தக் கொடுமைகள் ஏற்படுகிறது. கல்லூரி சக மாணவிகளுக்கு முன்னால் உங்களில் யாருக்கெல்லாம் மாதவிடாய் ஏற்பட்டுள்ளது எனக் கேட்கிறார் கல்லூரி முதல்வர். எங்களைத் தனியே அழைத்துச் சென்ற ஆசிரியைகள் எங்களது உள்ளாடைகளை சோதனை செய்தனர். நாங்கள் போய் சொல்கிறோம் என அவர்கள் எண்ணுகின்றனர்.

`அந்த ஸ்பாட்லயே ஈகோ காணாம போயிடுச்சு..!’ - சந்திரன் - அஞ்சனா ஜோடியின் பர்சனல் ஷேரிங்ஸ்

இதை எதிர்த்து போராட்டம் நடத்தினால் அறங்காவலர்களில் ஒருவரான பிரவீன் எங்களை மிரட்டுகிறார். முதலில் விடுதியை விட்டு வெளியேறுங்கள்; அதன்பின்னர் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள் என்கிறார். கல்லூரியில் இதுபோன்ற எந்தச் சம்பவமும் நடைபெறவில்லை என மாணவிகளை வற்புறுத்தி கையொப்பம் கேட்கிறார். இதையெல்லாம் மீறி காவல்நிலையத்துக்குச் செல்லலாம் என்றால் எங்களை, பெற்றோர்களை அழைத்து படிப்பு, எதிர்காலம் எனக் கூறி எமோஷனலாக ப்ளாக்மெயில் செய்கிறார்கள்” என வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.

கல்லூரி மாணவிகள்
கல்லூரி மாணவிகள்

இந்தச் சம்பவம் தொடர்பாக அறங்காவலர் ஒருவரிடம் பேசுகையில், ``கல்லூரி வளாகத்துக்குள் கோயில் உள்ளது. குறிப்பிட்ட சில விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என மாணவிகளுக்கு முன்னரே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு நடந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அடுத்த கட்டுரைக்கு