Published:Updated:

`முதல்வர், அமைச்சர்களுடன் ஆலோசனை..!’ - அதே நாளில் குஜராத் எம்.எல்.ஏ -க்கு உறுதி செய்யப்பட்ட கொரோனா

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

குஜராத் முதல்வர் அலுவலகத்தில் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு ஸ்க்ரீனிங் செய்யப்படவில்லையா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, தமிழகம் ஆகிய மாநிலங்களில் கொரோனா வைரஸ் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்குக் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

குஜராத் மாநிலத்தில் தற்போது வரை கொரோனா வைரஸால் 617 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 55 பேர் மீண்டு வந்திருக்கிறார்கள், 26 பேர் மரணமடைந்துள்ளார்கள். குஜராத் மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் விஜய் ருபானியை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏக்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் சில அமைச்சர்களும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

`உங்கள் செயல்பாடுகளை மறு ஆய்வு செய்ய வேண்டும்’ -WHO -க்கான நிதியை நிறுத்தி அதிர்ச்சி கொடுத்த ட்ரம்ப்

இந்த நிலையில் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் ஒருவருக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக என்.டி.டி.வி ஊடகத்தில், குறிப்பிட்ட அந்தக் காங்கிரஸ் எம்.எல்.ஏ க்குக் கடந்த சில நாள்களாக காய்ச்சல் இருந்ததாகவும், இதனால் பரிசோதனைக்கு மாதிரிகளை வழங்கிவிட்டு தனது அன்றாடப் பணிகளைக் கவனித்ததாகக் கூறப்பட்டுள்ளது.

கொரோனா
கொரோனா

முதல்வருடனான கூட்டத்துக்குப் பின்னர் எம்.எல்.ஏக்கள் செய்தியாளர்களையும் சந்தித்திருந்தனர். அப்போது சுகாதாரத்துறையைச் சேர்ந்த சில அதிகாரிகளும் உடன் இருந்தனர். முதல்வர் கூட்டத்தில் உறுப்பினர்கள் தகுந்த இடைவெளி விட்டே அமர்ந்திருந்தனர். குறிப்பிட்ட அந்த எம்.எல்.ஏ தற்போது காந்திநகரில் உள்ள எஸ்.வி.பி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த சில நாள்களில் எம்.எல்.ஏ வைச் சந்தித்த நபர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் அலுவலகத்தில் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு ஸ்க்ரீனிங் செய்யப்படவில்லையா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு