Published:Updated:

`3 மணி நேரம்; ரூ.100 கோடி; 10,000 போலீஸ்!' - ட்ரம்ப் வருகைக்காக அதகளமாகும் அகமதாபாத்

மோடி - ட்ரம்ப்
மோடி - ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அகமதாபாத் வருகையையொட்டி அந்த நகரம் முழுவதும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதற்கு 100 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வரும் 24, 25-ம் தேதிகளில் முதன்முறையாக இந்தியா வரவுள்ளார். மனைவி மெலானியாவுடன் இந்தியா வரும் ட்ரம்ப் முதலில் டெல்லியில் தங்குகிறார். பின்னர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்துக்குச் சென்று மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்துகிறார். அகமதாபாத் விமான நிலையம் முதல் சபர்மதி ஆசிரமம் வரை சாலை வழியாக ட்ரம்ப் தம்பதி அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

அகமதாபாத்
அகமதாபாத்
Twitter/@amdavadtak

பின்னர் அகமதாபாத்தில் 100 மில்லியன் டாலர் மதிப்பில், கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான சர்தார் வல்லபபாய் படேல் மைதானத்தை ட்ரம்ப் திறந்து வைக்கிறார். கடந்த ஆண்டு ஹூஸ்டனில் நடந்த `ஹவ்டி மோடி' நிகழ்ச்சி போல சர்தார் வல்லபபாய் படேல் மைதானத்தில் `கெம் சோ ட்ரம்ப்' என்கிற நிகழ்ச்சி நடைபெறுகிறது. `கெம் சோ' என்றால் `எப்படி இருக்கிறீர்கள் என்று குஜராத்தி மொழியில் அர்த்தம். இந்த நிகழ்ச்சியில் 1.25 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரம்பை வரவேற்க அகமதாபாத்தில் முழு வீச்சில் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. விமான நிலையத்திலிருந்து படேல் மைதானத்துக்குச் செல்லும் வழிகளில் உள்ள 500 குடிசை வீடுகளை மறைக்கும் வகையில், பெரிய பெரிய சுவர்களைக் கட்டும் பணியில் அகமதாபாத் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாகியுள்ளது. இந்நிலையில் அதிபர் ட்ரம்ப் வெறும் மூன்று மணி நேரம் மட்டுமே அகமதாபாத்தில் இருப்பார் என்றும் அதற்காக அம்மாநில அரசு சுமார் 100 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ட்ரம்ப்
ட்ரம்ப்

ட்ரம்ப் பயணிக்கும் சாலையைச் சீரமைப்பது மற்றும் புதுச் சாலை போடுவதற்கு மட்டும் 80 கோடி ரூபாயும், அகமதாபாத் முழுவதும் பாதுகாப்புப் பணிகளுக்காக 12-15 கோடி ரூபாயும், சிறப்பு விருந்தினர்கள், போக்குவரத்து மற்றும் பிற புதுப்பிப்புகளுக்காக மட்டும் 7-10 கோடி ரூபாயும் அகமதாபாத் நகரத்தை அழகுபடுத்துவதற்கு ஆறு கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ட்ரம்ப் - மோடி இணைந்து பங்கேற்கும் இந்த நிகழ்ச்சிக்கு ஆகும் செலவுகள் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளாராம் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி.

குடிசைகளை மறைக்க சுவர்... மோடி - ட்ரம்ப் சந்திப்பால் சர்ச்சையில் அகமதாபாத் மாநகராட்சி!

சாலைகளைச் சீரமைப்பது சாலையின் நடுவே அழகிய செடிகள், மரங்கள் போன்றவை நடுவது, நடைபாதையைப் புதுப்பிப்பது, ஆகிய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அகமதாபாத் மாநகராட்சியும். நகர்ப்புற மேம்பாட்டு ஆணையமும் இணைந்து இந்தப் பணிகளை மேற்கொள்கின்றன. அம்மாவட்ட ஆட்சியர் தலைமையில் 16 குழுக்கள் அமைக்கப்பட்டு அனைத்துப் பணிகளும் விறுவிறுப்பாக அரங்கேறி வருகின்றன.

அகமதாபாத்
அகமதாபாத்
Twitter/@amdavadtak

இது மட்டுமல்லாமல் 25 ஐ.பி.எஸ் அதிகாரிகள் தலைமையில் 10,000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மேலும், தேசியப் பாதுகாப்புப் படையினர், சிறப்பு பாதுகாப்புப் படையினர், அமெரிக்கப் பாதுகாப்புப் படையினர் போன்றவர்கள் இப்பணியில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு