Published:Updated:

அரிதிலும் அரிது... குஜராத் சட்ட அமைச்சரின் வெற்றி செல்லாது! - வழக்கு விசாரணையில் நடந்தது என்ன?

பேந்திரசின் சுதஸ்மா
பேந்திரசின் சுதஸ்மா ( Twitter )

குஜராத் கல்வி மற்றும் சட்ட அமைச்சர் பூபேந்திரசின் சுதஸ்மாவின் தேர்தல் வெற்றி செல்லாது எனக் குஜராத் உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்துள்ளது. அரசியல் களத்தில் இந்த வழக்கின் தீர்ப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுவதுடன் அரிதான ஒரு தீர்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.

2017-ம் ஆண்டு குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. கடந்த தேர்தலில்களில் குஜராத்தில் பா.ஜ.க-வுக்கு வெற்றி எளிதாகக் கிடைத்ததுபோல் 2017 சட்டப்பேரவை தேர்தல் வெற்றி எளிதாக அமைந்து விடவில்லை. காங்கிரஸ் கட்சி மாநிலம் முழுவதும் கடும் போட்டி அளித்தது. டோல்கா என்னும் தொகுதியில் பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களில் ஒருவரான பூபேந்திரசின் சுதஸ்மா போட்டியிட்டு 327 வாக்குகள் வித்தியாசத்தில், காங்கிரஸ் வேட்பாளர் அஷ்வின் ரதோடை வீழ்த்தி வெற்றி பெற்றார். பின்னர், அம்மாநில சட்டத்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றார். இவரின் வெற்றியைத் தான் தற்போது குஜராத் நீதிமன்றம் செல்லாது என அறிவித்திருக்கிறது.

தீர்ப்பு
தீர்ப்பு

என்ன நடந்தது..?

சட்டப்பேரவை தேர்தலில் 429 தபால் ஓட்டுக்களை, விதிகளை மீறி தேர்தல் அதிகாரி செல்லாது என்று அறிவித்ததாகக் கூறி, காங்கிரஸ் வேட்பாளர் 2018, ஜனவரி மாதத்தில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. 78 முறை உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணைகளில் தேர்தல் ஆணையம், அஷ்வின் ரதோட், சுதஸ்மா தரப்பில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

பிப்ரவரி மாதம் 10-ம்தேதி இறுதி வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த வழக்கு விசாரணையின் முக்கிய புள்ளியாக அறியப்படுபவர் தேர்தல் அதிகாரியாகச் செயல்பட்ட தாவல் ஜனி. அவர் விதிகளை மீறி 429 தபால் ஓட்டுக்களை ரத்து செய்தார் என்பதே காங்கிரஸ் தரப்பு வைத்த குற்றச்சாட்டு. மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் அதிகாரி அடிக்கடி போனில் பேசினார் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.

மோடியுடன் பூபேந்திரசின் சுதஸ்மா
மோடியுடன் பூபேந்திரசின் சுதஸ்மா

முன்னதாக வழக்கு விசாரணையின்போது, தேர்தல் அதிகாரியிடன் வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமரா பதிவுகளைத் தாக்கல் செய்யும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது அவர் தாக்கல் செய்த வீடியோ எடிட் செய்யப்பட்டது என்ற புகார் எழுந்தது. முழுமையான வீடியோவை தாக்கல் செய்யாததற்காக நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு உள்ளானார் தேர்தல் அதிகாரி ஜனி.

பின்னர் முழுமையான வீடியோ நீதிமன்றத்தில் அனைவரின் முன்னால் ஒளிபரப்பப்பட்டது. அப்போது பூபேந்திரசின் சுதஸ்மாவின் தனிப்பட்ட உதவியாளர் தார்மின் மேத்தா வாக்கு எண்ணும் மையத்துக்குள் சட்ட விரோதமாக வந்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அதுவும் கையில் செல்போனுடன் அவர் வாக்கு எண்ணும் மையத்துக்குள் வந்து சென்றது வீடியோ மூலம் தெளிவானது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

மேலும், பூபேந்திரசின் சுதஸ்மாவை நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், அவர் உயர் நீதிமன்றத்தின் விசாரணைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்றார். அங்கும் அவருக்கு சாதகமான முடிவுகள் எட்டப்படாததால், உயர் நீதிமன்றத்திலே வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டது. விசாரணையின் முடிவில் குஜராத் நிர்வாக அதிகாரியும் அப்போதைய தோல்கா தொகுதி தேர்தல் அதிகாரியுமான தாவல் ஜனி ஒருதலைபட்சமாகச் செயல்பட்டார் என உயர் நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேலும், தபால் வாக்குகள் சட்டத்துக்குப் புறம்பாக நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வாக்கு எண்ணும் முறைகளைப் பின்பற்றி தபால் வாக்குகள் முறையாக எண்ணப்படவில்லை எனக் கூறிய நீதிமன்றம் வெற்றி பெற்ற வேட்பாளரின் வாக்கு வித்தியாசம் என்பது நிராகரிக்கப்பட்ட தபால் வாக்குகளைவிட குறைவு என்பதால் தேர்தல் அதிகாரி மீண்டும் அந்த வாக்குகளை எண்ணி இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

பேந்திரசின் சுதஸ்மா
பேந்திரசின் சுதஸ்மா
Twitter

பி.ஜே.பி-க்கு பின்னைடவு... ஆனால், காங்கிரஸுக்கு வெற்றியா?

மாநிலத்தின் மூத்த தலைவர்களின் ஒருவரும் இரண்டு முக்கிய துறைகளைக் கவனிக்கும் அமைச்சரின் வெற்றி வெல்லாது என அறிவிக்கப்பட்டது ஆளும் பா.ஜ.க தரப்புக்கு நிச்சயம் பின்னடைவுதான். ஆனால், அதே நேரத்தில் அவரின் வெற்றி செல்லாது என அறிவிக்கப்பட்டதால் தன்னை வெற்றியாளராக அறிவிக்க கேரிய காங்கிரஸ் வேட்பாளரின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுவிட்டது.

மேலும், இந்த விவகாரத்தில் தான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாகக் கூறியுள்ளார் பூபேந்திரசின் சுதஸ்மா. அப்படி அவர் மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என காங்கிரஸ் வேட்பாளர் கேவியட் மனுத்தாக்கல் செய்ய இருப்பதாகவும் கூறியுள்ளார்.

“ராதாபுரம் நிலை நமக்கும் வந்தால்..?” - திகிலூட்டும் தேர்தல் முடிவுகள்

தேர்தலில் வெற்றிபெற்றவர்களுக்கு எதிராகத் தோல்வியுற்றவர்கள் வழக்கு பதிவு செய்வது வழக்கமான காரியம்தான் என்றாலும், பெரும்பாலும் அந்த வழக்குகள் தள்ளுபடி ஆகும் அல்லது விசாரணை முடியும்போது வெற்றிபெற்றவரின் பதவிக்காலம் முடிந்துவிடும். ஆனால், தனது ஆட்சிக்காலத்திலே, ஆளும்கட்சி அமைச்சரின் வெற்றி வெற்றி செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது அரசியல் களத்தில் அரிதிலும் அரிதான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக எம்.எல்.ஏ-வின் வெற்றிக்கு எதிராகத் தி.மு.க எம்.எல்.ஏ தொடுத்த வழக்கு மறுவாக்கு எண்ணிக்கை வரை சென்றது நினைவிருக்கலாம். எனினும், அதன் முடிவுகளை வெளியிட உச்ச நீதிமன்றம் தடை வித்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரைக்கு